சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை தாக்கியது யார்? என்ன காரணம்?
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை’ எனக் கூறி சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது?
அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?
சென்னை கிண்டியில் கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனை (KCSSH)செயல்படுகிறது. இன்று (நவம்பர் 13 புதன்கிழமை) காலையில் வழக்கம் போல சிகிச்சைக்காக நோயாளிகள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.
மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவில் டாக்டர் பாலாஜி ஜெகன்னாத் இருந்துள்ளார். இவர் இத்துறையின் தலைவராக இருக்கிறார். காலை 10.30 மணியளவில் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர், மருத்துவர் பாலாஜியை அவரது அறையில் சந்தித்துள்ளார்.
அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் பாலாஜியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மருத்துவர் பாலாஜி படுகாயம் அடைந்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட மருத்துவமனை ஊழியர்கள், தாக்குதலில் ஈடுபட்ட சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த இடத்தில் படுகாயத்துடன் இருந்த மருத்துவர் பாலாஜியை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை இயக்குநர் கூறியது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் இயக்குநர் பார்த்தசாரதி, “உடலில் நெறிக்கட்டுதைப் போல கட்டிகள் ஏற்படும் பிரச்னைக்காக தனது தாயை சிகிச்சைக்காக அந்த நபர் அழைத்து வந்தார். அவரது வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன” என்றார்.
தாக்குதல் சம்பவம் குறித்து விவரித்த மருத்துவர் பார்த்தசாரதி, “அவர் நல்லபடியாக வந்துள்ளார். டாக்டருடன் அரைமணி நேரம் உரையாடியுள்ளார். இதற்கு முன்னதாக தனது தாயை டிஸ்சார்ஜ் செய்து தனியாரிடம் சென்று சிகிச்சை அளித்துள்ளார்” என்றார்.
விக்னேஷ் தாக்கியது ஏன்?
சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவர் மீது விக்னேஷ் என்ற நபர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார்.
தொடக்கத்தில், இந்தச் சம்பவத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், “தாக்குதலில் ஈடுபட்ட நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர்” என்றார்.
பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய்க்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனையில் கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மருத்துவர் பாலாஜி மீது அவர் தாக்குதல் நடத்தியதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அரசு மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
‘எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க நடவடிக்கை’
மருத்துவர் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளிக்கவும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது” என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். “இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
சென்னையில் அரசு மருத்துவமனைக்குள் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.” என்று சாடியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Twitter பதிவை கடந்து செல்ல
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு
இதேபோல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் அரசு மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்துள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்கா வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.