சென்னையில் மழை: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

வானிலை, தமிழ்நாடு, சென்னை, மழை

பட மூலாதாரம், Getty Images

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் பல இடங்களில் கனமழை நீடிக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் பல இடங்களில் மழை தொடர்கிறது. நேற்று பல இடங்களில் கனமழை பெய்த நிலையில், இன்று காலை முதல் ஆங்காங்கே லேசான மழை பெய்கிறது.

இதேபோல், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்துவந்த நிலையில், இன்று காலை முதல் பரவலாக மிதமான மழை பெய்துவருகிறது.

புதுச்சேரியில் நேற்று காலை முதல் ஆங்காங்கே விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுவடையாது என, சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வானிலை, தமிழ்நாடு, சென்னை, மழை

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (நவ. 12) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இன்று (நவ. 13) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இன்று தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெறாது’

வானிலை, தமிழ்நாடு, சென்னை, மழை

படக்குறிப்பு, நான்கு நாட்களுக்கு மிதமான மழையே இருக்கும் என, பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்

இதனிடையே, எம்ஜேஓ ( MJO ) சூழலோ அல்லது கிழக்கு திசையின் காற்றோ வேகமாக இல்லை என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மேடன் -ஜூலியன் அலைவு ( MJO ) என்பது வெப்பமண்டல வளிமண்டலத்தில் உள்ள பருவகால மாறுபாட்டின் முக்கிய அங்கமாகும்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடையாது என்றும் அது மெதுவாகவே நகரும் என்றும் கூறினார்.

நான்கு நாட்களுக்கு மிதமான மழையே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

நாளை (நவ. 14) அன்று, தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை, தமிழ்நாடு, சென்னை, மழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழையே இருக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

நவ. 15: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 16: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 17 மற்றும் நவ. 18: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ. 13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்திலும புதுச்சேரியில் காரைக்காலிலும் தொடர் மழை காரணமாக, பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.