மியான்மார் இணையவழி மோசடியில் சிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by sakana1

மியான்மார் இணையவழி மோசடியில் சிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மியான்மார் இணையவழி மோசடியில் சிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணையவழி மோசடி அடிமை முகாம்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில்  தற்போது தங்கியுள்ள இலங்கையர்கள் குழுக்களாக அனுப்பப்பட்டு  வருவதாகவும் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழுவுக்கு (NAHTTF) நம்பகமான வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாகவும், புதிதாக இலங்கை பிரஜைகள் அங்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணையவழி மோசடி அடிமை முகாம்களுக்கு ஆட்சேர்ப்பு பல்வேறு வடிவங்களில் அதிகரித்துள்ளமை குறித்து  தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் அதிக சம்பளத்திற்கு தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட தொழில் வழங்குவதாகக் கூறி கடத்தல்காரர்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை இலக்கு வைப்பதாக அண்மைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிற நாடுகளில் தகவல் தொழில்நுட்பதுறையில் அதிக ஊதியம் பெறும் வேலை வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக உறுதியளித்து தொழிலாளர்களை ஈர்க்கின்றனர்.

இவ்வாறு ஈர்க்கப்பட்டவர்கள் வேலை வாய்ப்புக்கான நேர்காணல் என்ற போர்வையில் துபாய் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணையவழி மோசடி அடிமை முகாம்களுக்கு சட்டவிரோதமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி முகாம்களில் அவர்கள் மின்சாரம் தாக்குதல் போன்ற மன மற்றும்  உடல் ரீதியான கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவது விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

“சட்டவிரோத குடியேற்றங்களை தவிக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம், ஏனெனில் அவை மிகவும் ஆபத்தானவை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறுகின்றன. வேலை தேடுபவர்கள் சுற்றுலா விசாவில் ஏனைய நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்” என தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழுவுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான, சட்டப்பூர்வ குடிபெயர்வுகளை தெரிவு செய்யவும்

விழிப்புடன் இருங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கடத்தல் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடு செய்யுங்கள்

ஆபத்தில் இருக்கக்கூடிய வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் மற்றும் இலங்கையில் உள்ள அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பற்றி சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பாதுகாக்கவும்.

தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு, பின்வரும் தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளப்படுவதோடு, முறைப்பாடு செய்பவர்களின் தகவல்கள் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் வலியுறுத்துகிறது.

• 0112102570/ 076 844 7700

[email protected]

தொடர்புடைய செய்திகள்