இந்தியாவுக்கு ஆதரவான நிக்கி ஹேலியை டிரம்ப் தனது அரசில் மீண்டும் சேர்க்காதது ஏன்?
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் தனது புதிய அரசாங்கத்தில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி ஆகியோரை சேர்க்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
நிக்கி ஹேலியின் பெற்றோர் இந்தியா வம்சாவளியை சேர்ந்த அஜித் சிங் ரந்தாவா மற்றும் ராஜ் கவுர் ஆவர். அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸைச் சேர்ந்தவர்கள்.
நிக்கி ஹேலி இந்தியாவுக்கு வெளிப்படையாக ஆதரவளித்து வருகிறார். மைக் பாம்பேயோவும் சீனாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். ஆனால், இருவரையும் தனது அரசாங்கத்தில் சேர்க்கப் போவதில்லை என டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
”முன்னாள் தூதர் நிக்கி ஹேலியையோ அல்லது முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவையோ அடுத்த அரசாங்கத்தில் நான் சேர்க்கப்போவதில்லை’’, என்று டிரம்ப் சமூக ஊடக தளமான ‘ட்ரூத்’ இல் பதிவிட்டுள்ளார்.
“அவருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு இதற்கு முன்பு கிடைத்துள்ளது, அவருடைய பணியை நான் பாராட்டியுள்ளேன். நாட்டிற்கு அவர்கள் செய்த சேவைக்கு நன்றி” என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்பிற்கு பதிலளித்த நிக்கி ஹேலி, “அதிபர் டிரம்புடன் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தியதற்கு நான் பெருமைப்படுகிறேன். அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவை வலிமையான மற்றும் பாதுகாப்பான நாடாக மாற்ற அவருக்கும் அவருடன் பணிபுரிய இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இந்தியாவுக்கு ஆதரவாக நிக்கி ஹேலி என்ன செய்தார்?
நிக்கி ஹேலியை ஐ.நா சபைக்கான அமெரிக்க தூதராக டொனால்ட் டிரம்ப் நியமித்தார்.
‘ஃபாரின் பாலிசி’ என்ற அமெரிக்க இதழில் 2021 அக்டோபரில் குடியரசுக் கட்சியின் எம்.பி மைக் வால்ட்ஸுடன் சேர்ந்து நிக்கி ஹேலி ஒரு கட்டுரை எழுதினார்.
அந்தக் கட்டுரையில், மத்திய மற்றும் தெற்காசியாவில் சீனா மேலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு அதனை நிறுத்த வேண்டும் என நிக்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “ஆஃப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற்ற பிறகு, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் பைடனை வெளிப்படையாக விமர்சித்ததைக் கண்டோம். ரஷ்யாவின் நோர்ட் ஸ்ட்ரீம் 2 பைப்லைன் கட்டுமானத்தில் ஜெர்மனிக்கு அடிப்பணிந்து நாம் நம் கிழக்கு ஐரோப்பிய நட்பு நாடுகளை அந்நியப்படுத்தினோம்.” என்று எழுதினார்.
மேலும், “நமது நட்பு நாடுகளை அவமதித்து, எதிரிகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, உலகம் முழுவதும் நமது நாட்டின் நிலையை வலுப்படுத்தும் உறவுகளுக்கு அமெரிக்கா முன்னுரிமை அளிக்க வேண்டும்.” என்றார்.
“இது இந்தியாவில் இருந்து தொடங்க வேண்டும். இப்போது நாம் கூட்டணி அமைக்கும் நேரம் வந்துவிட்டது. 10 லட்சம் வீரர்கள், அணுசக்தி, வளர்ந்து வரும் கடற்படை, விண்வெளித் திட்டம் மற்றும் கடந்த காலத்தில் அமெரிக்கா உடன் இந்தியா கொண்டிருந்த பொருளாதார மற்றும் ராணுவ உறவு ஆகியவற்றை கருத்தில் கொண்டால் இந்தியா ஒரு வலுவான நட்பு நாடாக இருக்கும்.
இந்தியா உடனான ஒத்துழைப்பு இரு நாடுகளும் தங்கள் உலகளாவிய சக்தியை அதிகரிக்க உதவும். இது தவிர, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை ஒன்றிணைப்பதன் மூலம், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவில் உள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை அமெரிக்கா எதிர்கொள்ள முடியும்” என்று அவர் எழுதியிருந்தார்.
இது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் முடிவெடுக்கும் செயல்முறையின் ஆரம்ப அறிகுறியாகும்.ஏன் என்றால் அவர் குடியரசுக் கட்சிக்குள் உள்ள கருத்தியல் வேறுபாடுகளைக் குறைக்க பணியாற்றுகிறார் என்று நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
துணை அதிபர் கமலா ஹாரிஸை வீழ்த்தி தேர்தலில் வெற்றி பெற்ற சில நாட்களில் டொனால்ட் டிரம்பின் கட்சி, ஆட்சி அமைக்க முதற்கட்ட கூட்டங்களைத் தொடங்கியுள்ளது. மேலும் புதிய அமைச்சரவை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.
டிரம்ப் அமைச்சரவையில் இடமில்லை
வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் பெரிய முதலீட்டாளரான ஸ்காட் பெசண்டை டிரம்ப் சந்தித்தார். அவர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட சாத்தியம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
டிரம்பின் புதிய நிர்வாகத்தில் மைக் பாம்பேயோ மற்றும் நிக்கி ஹேலி இடம் பெறாதது பெரிதும் விவாதிக்கப்படுகிறது.
கடந்த முறை டிரம்ப் நிர்வாகத்தில் உளவுத்துறை அமைப்பான சிஐஏவின் இயக்குனராக மைக் பாம்பேயோ பணியாற்றினார்.
ஆனால் இம்முறை அவர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட சாத்தியம் இருப்பதாக சில ஊடக செய்திகளில் கூறப்பட்டன.
குடியரசுக் கட்சியில் அவர் அதிபர் வேட்பாளராகவும் பார்க்கப்பட்டார். இருப்பினும், ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு, அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார்.
இந்த விவகாரத்தில் மைக் பாம்பேயோவின் கருத்தை அறிய தற்போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் எழுதியுள்ளது.
நிக்கி ஹேலி, அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் முன்னாள் ஆளுநராகவும், ஐ.நா சபைக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றியவர்.
நிக்கி ஹேலியை விமர்சித்த டிரம்ப்
2024 அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக களம் இறங்க ஹேலி தனது சொந்த முயற்சிகளைத் தொடங்கினார். மார்ச் மாதம் அவர் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேறியபோது, டிரம்பிற்கு போட்டியாக இருந்த கடைசி வேட்பாளராக இருந்தார்.
அக்டோபரில் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடந்த டிரம்பின் பரப்புரையில், அவர் பேசிய இனவெறி மற்றும் பெண் வெறுப்புக் கருத்துக்களை மேற்கோள் காட்டி, டிரம்பின் பிரசாரக் குழுவின் பேச்சுக்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரை அந்நியப்படுத்துவதாக இருக்கின்றது ஹேலி கூறியிருந்தார் என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண் பேரினவாத நடத்தை பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கடுமையானது என்று ஹேலி கூறினார்.
டிரம்பின் பரப்புரைக்கு ஹேலி பலமுறை ஆலோசனை வழங்க முன்வந்தார். ஆனால் டிரம்ப் இவருடன் சேருவதற்கு முன்வரவில்லை.
இருப்பினும், ஆண்களை ஒன்றிணைக்கும் டிரம்பின் முயற்சி இறுதியில் பலனளித்தது.
பிரசாரத்தின் போது இருவருக்கும் இடையே சில மனக் கசப்பு ஏற்பட்டது, டிரம்ப் அவரை “அறிவற்ற சிந்தனையாளர்” என்று விமர்சித்தார்.
ஆனாலும், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் நிக்கி ஹேலி இறுதியில் டிரம்பை அதிபராக ஆதரித்தார்.
இந்த தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே டிரம்பை ஆதரித்து அவர் கருத்து தெரிவித்தார் என்று ஃபாக்ஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
ஒரு கட்டுரையில் தனது கருத்தை வெளிப்படுத்திய அவர், டிரம்ப் பற்றி, “அவர் மிகவும் சிறப்பானவர் இல்லை என்றாலும், அவர் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார்” என்று எழுதினார்.
“நான் எப்போதும் டிரம்புடன் 100 சதவீதம் முழுமையாக உடன்படுவதில்லை. ஆனால் பல சமயங்களில் அவருடன் உடன்பட்டிருக்கிறேன். ஆனால் கமலா ஹாரிஸுடன் முற்றிலும் நான் உடன்படவில்லை. எனவே டிரம்பை ஆதரிக்கிறேன்” என்றார் அவர்.
டிரம்ப் நிக்கி ஹேலி மற்றும் பாம்பேயோவை விலக்கியது ஏன்?
ரஷ்யா உடனான விரோதம் குறைய வேண்டும் மற்றும் யுக்ரேனில் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.
டிரம்பின் இந்த கொள்கையுடன் பாம்பேயோ ஒத்துப் போகவில்லை. அதே சமயம் சீனா அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி. ஆனால், நிக்கி ஹேலி சீனாவை வெளிப்படையாக எதிர்த்து வருகிறார்.
நிக்கி ஹேலி 2021 ஆம் ஆண்டில், “அமெரிக்காவைப் போலவே, இந்தியாவும் சீனாவின் ஆதிக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று நம்புகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை சீனா சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. மேலும் சீனா இந்தியாவுடனான எல்லையில் அழுத்தத்தை அதிகரித்து வருகிறது”, என்றார்.
மேலும் அவர், “இது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் உகந்தது அல்ல. கடந்த ஆண்டு, லடாக்கில் இந்தியா மற்றும் சீனாவின் வீரர்களுக்கு இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் மற்றும் சீன அரசாங்கத்தின் கூற்றுப்படி, அதன் வீரர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். சீனா உடனான எல்லையில் இந்தியா ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. மொத்தம் இரண்டு லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக, 100 நீண்ட தூர ராக்கெட் லாஞ்சர்களுடன் இந்திய எல்லையில் படைகளின் இருப்பை சீனா அதிகரித்துள்ளது.” என்றார்
”அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து மத்திய மற்றும் தெற்காசியாவில் சீனா மேலும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியும். நாம் ஒரு வலுவான நிலையை உருவாக்க முடியும்.” என்றார்
ஹேலியைப் போலல்லாமல், மைக் பாம்பேயோ டிரம்பின் முதல் நிர்வாகத்தில் தனது பதவியை விட்டு வெளியேறியதில் இருந்து பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை.
மைக் பாம்பேயோ மற்றும் ஹேலியை நீக்குவதன் மூலம், டொனால்ட் டிரம்ப் யுக்ரேனுக்கு ஆதரவாக இருந்த இரண்டு குடியரசுக் கட்சியினரை நீக்கியுள்ளார் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், டிரம்பிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவரது நன்கொடையாளர்கள் பலர் யுக்ரேனுக்கு அமெரிக்க வழங்கும் உதவி மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்க ராணுவ ஈடுபாட்டைக் குறைப்பதை வலியுறுத்தியுள்ளனர்.
குடியரசுக் கட்சியின் முக்கிய நன்கொடையாளர்களில் ஒருவரான டேவிட் சாக்ஸ் உட்பட, டிரம்பிற்கு நெருக்கமான பலர், பாம்பேயோ அமெரிக்க துருப்புக்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப மிகவும் ஆர்வமாக இருப்பதாக கருதினர்.
மைக் பாம்பேயோ 2022 ஆம் ஆண்டு டிரம்ப் முக்கிய ஆவணங்களை வைத்திருந்ததாக அவரை விமர்சித்தார். மார்-ஏ-லாகோவில் உள்ள டிரம்பின் வீட்டில் எஃப்.பி.ஐ சோதனை நடத்தியதை தொடர்ந்து பாம்பேயோ இவ்வாறு விமர்சித்தார்.
“முக்கியமான எந்த தகவலையும் இருக்க வேண்டிய இடத்துக்கு வெளியே வைக்க கூடாது” என்றார் அவர்.
இந்த விஷயத்தை கையாண்ட விதத்திற்காக நீதித்துறையையும் பாம்பேயோ விமர்சித்தார்.
இருப்பினும், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் டிரம்பை ஆதரித்து பேசினார்.
தற்போது, டொனால்ட் டிரம்ப் தனது சமீபத்திய முடிவைப் பற்றி எந்த கூடுதல் தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் பாம்பேயோவை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று அவரது முன்னாள் ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் டிரம்பை வற்புறுத்தியதை அடுத்து சமூக ஊடகங்களில் டிரம்பின் பதிவு வந்துள்ளது.
டிரம்ப் தனது முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரை நம்ப முடியாது என்று ஸ்டோன் கூறியிருந்தார்.
பாம்பேயோ தொடர்பான பிரச்னையையும் ஸ்டோன் எழுப்பினார், அதில் முக்கியமான ஆவணங்களை ஒப்படைக்க டிரம்ப் மறுத்ததை பாம்பேயோ விமர்சித்ததை நினைவுக் கூர்ந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.