அரசியல்வாதிகளின் நிதி மோசடிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்போம் – கோஷல விக்ரமசிங்க

by sakana1

அரசியல்வாதிகளின் நிதி மோசடிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்போம் – கோஷல விக்ரமசிங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடி தொடர்பில் 15முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அரசியல்வாதிகள் தங்களின் உறவினர்களை பணியகத்தில் தங்கவைத்துக்கொண்டு நிதி மோசடி செய்துள்ளமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்குள் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு எனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் ஒன்றை வழங்கி இருந்ததேன். அதன் பிரகாரம் எமக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமை உள்ளக கணக்காய்வு பிரிவுக்கு தகவல் வழங்கி இருக்கிறோம்.

அதன் பிரகாரம் அந்த முறைப்பாடுகளில் 15முறைப்பாடுகள் தொர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை ஆரம்பிக்க இருக்கிறோம். அந்த விசாரணைகள் எந்த துறைகளுக்கானவை என்பது தொடர்பான தகவல்கள் எதிர்வரும் வாரங்களில் அறியத்தருவோம்.  பணியகத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடி தொடர்பில்  கிடைக்கப்பெற்றுள்ள 15 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உள்ளக கணக்காய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் பணியகத்தில் கடந்த காலங்களில் இருந்த அரசியல்வாதிகள் தங்களின் உறவினர்களை பணியகத்தில் தங்கவைத்துக்கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்ட முறை தொடர்பாகவும் எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

பல்வேறு அரசியல் தலையீடுகள் காரணமாக கடந்த காலங்களில் பணியகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருந்தது. அந்த நிலைமையிலிருந்து பணியகத்தை பாதுகாக்க எதிர்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்