வெப்ப அலையால் தமிழ்நாட்டிற்கு என்னென்ன பாதிப்புகள் வரும்? திட்ட ஆணைய அறிக்கையும், கள யதார்த்தமும்
முக்கிய சாராம்சம்
- வெப்ப மண்டல வானிலை கொண்ட தமிழ்நாடு, வெப்பத்தால் எதிர்காலத்தில் தீவிரமாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- அதீத வெப்பம் ஏழை மக்கள் , முறைசாரா தொழிலாளர்கள், உடல்ரீதியாக பலவீனமானவர்களை குறிப்பாக தாக்கும்.
- தமிழ்நாட்டில் 74% மக்கள் 35டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
- வெப்ப அதிகரிப்பால் பணி நேரம் குறைந்து, வேலை திறன் மற்றும் உற்பத்தி குறையும்.
- வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பணிச்சூழலை வடிவமைப்பது, வேலை நேரங்களை மாற்றுவது, கொள்கைகள் வரையறுப்பது, விவசாயத்தில் வெப்பத்தை தாங்கும் பயிர்களை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வழிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
-
வெப்ப அலையால் ஏற்படும் உடல் உபாதைகள், பருவநிலைப் பிரச்னைகள் பலமுறை செய்தியாகியுள்ளன. ஆனால், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் இதனால் ஏற்படப் போகும் இழப்புகளை பட்டியலிட்டு எச்சரிக்கை செய்துள்ளது தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம்.
இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராவதன் மூலமே, இழப்புகளை தடுக்கவோ, சமாளிக்கவோ முடியும் என்பதால் அரசுகள் அந்த நோக்கில் செயல்பட வலியுறுத்தியுள்ளது.
வெப்ப அலையில் தமிழ்நாடு
“மனிதர்கள் சராசரியாக 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும், 60% ஈரப்பதம் இருக்கும் சூழலிலும் இருப்பது உகந்தது. ஆனால், தமிழ்நாட்டில் 74% க்கும் மேலான மக்கள் தொகை 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் கூடுதலான வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்று திட்ட ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.
மிக வலுவான வெப்ப அழுத்தத்தை சந்திக்கும் ஆபத்துள்ள பகுதிகளில் தமிழ்நாட்டின் 50% மக்கள் தொகை இருக்கிறது. மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில், மாநிலத்தின் 68% மக்கள் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் வெப்ப அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர் என்றும் தரவுகளை சுட்டிக்காட்டுகிறது அந்த அறிக்கை.
1969 முதல் 2021 வரையிலான 52 ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கான தரவுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது 591 மோசமான வெப்ப அலை நாட்கள் பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் கூறுகின்றன (வெப்ப அலை காரணமாக ஒரு நாளில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தால், அது மோசமான வெப்ப அலை நாள் எனப்படுகிறது).
2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டுகளில், சராசரியாக ஓராண்டுக்கு எட்டு வெப்ப அலை நாட்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் கூடுதலான வெப்பம் பதிவாகிறது.
வெப்பத்தால் உற்பத்தி பாதிப்பு
‘வெப்பமண்டல பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு, வெப்ப அலை காரணமாக அதிகமாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரவு நேர வெப்பம் அதிகரிப்பு, தீவிர வெப்ப அலை நெடு நேரம் நீடிப்பது, குளிர்ந்த பருவகாலங்களிலும் வெப்பமான நாட்களின் அதிகரிப்பு ஆகிய மாற்றங்கள் ஏழை எளிய மக்கள், முறைசாரா தொழிலாளர்கள், உடல் பலவீனமானவர்களையே அதிகமாக பாதிக்கும்’ என குறிப்பிட்ட மாநிலத் திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், உற்பத்தியிலும் நேரடியான பாதிப்பு இருக்கும் என்பதை இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறார்.
2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது ஒட்டுமொத்த வேலை நேரத்தில் 5.8% (அதாவது 3.4 கோடி வேலைகளுக்கு இணையானது) இழக்கக் கூடும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது.
இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம் செலுத்தக் கூடும். ‘வெப்ப அலையின் காரணமாக நிலத்தின் ஈரப்பதம் குறைகிறது. இதனால் பயிரிடும் பரப்பு குறைகிறது. இதுபோன்ற தாக்கங்களால், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை இழக்கக் கூடும் என்று பல்வேறு உலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.’ என்று, வெப்ப அலையின் பொருளாதாரத் தாக்கத்தை எச்சரிக்கிறார் ஜெயரஞ்சன்.
விவசாயத்திற்கு என்ன அச்சுறுத்தல்?
2030-ஆம் ஆண்டுக்குள், வேளாண் மகசூல் 4-5% குறையும் என்று ரிசர்வ் வங்கியின் தரவு கூறுகிறது. வெப்பம் அதிகரித்தால் தண்ணீர் தேவையும், சக்திக்கான தேவையும் அதிகமாகும், விவசாயம், கால்நடை வளர்ப்பு, வனம் சார்ந்த உற்பத்தி ஆகியவற்றை வெப்ப அலை பாதிக்கும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
விவசாய சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியன், “நிலத்தடி நீரை நம்பியிருக்கும் கோடைகாலச் சாகுபடி கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் அதன் முந்தைய ஆண்டை விட அதிக பாதிப்பு நேரிடுகிறது. இந்த ஆண்டு 10 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய வேண்டும் என்று நினைத்தவர்கள் 5 ஏக்கர் அளவில் கூடபயிர் செய்ய முடியவில்லை. டெல்டா மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீரை நம்பியிருக்கும் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு இந்த ஆண்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. பிற மாவட்டஙகளில் பாதிப்பு இன்னும் மோசம்” என்கிறார்.
இந்த சூழலை கணக்கில் கொண்டு விவசாயத்தில், அதிக வெப்பத்தை தாங்கும் பயிர்களை அறிமுகப்படுத்தலாம் என்றும், அந்த பயிர்கள் விவசாயிகளுக்கு லாபகரமானதாக இருக்க தேவையான சந்தை, கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும் என திட்ட ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைக்கிறது.
‘கிக் பொருளாதாரம் பாதிக்கும்’
கிக் பணியாளர்கள் (ஸ்விக்கி, ஜோமேடோ போன்ற உணவு விநியோகம், ஊபர், ஓலா போன்ற டாக்ஸி சேவை தளங்களில் பணிபுரிபவர்கள்), வெப்பமான பணிச்சூழலில் இருப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று திட்ட ஆணைய அறிக்கை கூறுகிறது. வெப்பம் காரணமாக ஏற்படும் அழுத்தம் ( heat induced stress) பணியாளர்களின் வேலைத்திறனையும் உற்பத்தியையும் குறைக்கிறது.
பொருட்களின் விநியோகச் சங்கிலியில் இதன் தாக்கத்தை உணரலாம். தொடர்ந்து அதிக வெப்பம் நீடித்தால் பொருட்களை உரிய நேரத்தில் உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பது சவாலாகும். இதன் மூலம் கிக் பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது, ஊதிய இழப்பு ஏற்படலாம் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வெப்பத்தின் தீவிரத்தைப் பொருத்து வேலை நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்றும் நிழல் இருக்கும் ஓய்விடங்கள் அமைத்துக் கொடுக்கலாம், குடிநீர் கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்துக் கொடுக்கலாம் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.
ஆனால், வெப்பம் அதிகமான நேரத்தில் தான் வேலைகளும் அதிகமாக இருக்கின்றன என்கிறார் ஒரு நாளுக்கு சுமார் 150 கி.மீ பைக்கில் செல்லும் தனியார் உணவு டெலிவிரி நிறுவன ஊழியர் ராதாகிருஷ்ணன்.
அவர் “உணவு வேளை என்பதால் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஆர்டர்கள் உச்சத்தில் இருக்கும் நேரமாகும். அப்போது கண்டிப்பாக ஓய்வு எடுக்க முடியாது. ஓய்வு எடுத்தால் பணம் கிடைக்காது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பாட்டில்கள், துண்டு, சன் ஸ்கிரீன், குளோகோஸ் ஆகியவை கோடைக்காலத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. இப்போது ஆர்டர் எடுக்க செல்லும் உணவகங்களில் கிடைக்கும் நீரை குடித்துக் கொள்வோம்” என்கிறார்.
அதிக வெப்பத்தின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வரவு குறைவதால் சுற்றுலாத் துறை பாதிக்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சுற்றுலா தலங்களில் வெப்ப அலைகள் குறித்த துல்லியமான தகவல்களை பயணிகளுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், வெப்பத்தின் தீவிரத்துக்கு ஏற்றவாறு பார்வை நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும், வெப்ப அலையால பாதிக்கப்படுபவர்களுக்கான முதலுதவிகள் வழங்குவதை உறுதி செய்தல் ஆகியவை, சுற்றுலா பொருளாதாரத்தின் மீதான வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க உதவும்” என்று அறிக்கை கூறுகிறது.
இது மட்டுமல்லாமல், கால்நடை, மீன்வளம், வனத்துறை என பிற துறைகளில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அறிக்கை பேசுகிறது.
தெலங்கானா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள குளிர்ந்த மேற்கூரை திட்டம் 2028-ஆம் ஆண்டுக்குள் 300 சதுர கி.மீ குளிர்ந்த கூரைகள் உருவாக்க வேண்டும் என்று இலக்கு கொண்டுள்ளது. இதனை குறிப்பிட்டு பேசும் அறிக்கை, நமது பணியிடங்களில், வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க, குளிர்ந்த மேல் கூரைகள் மற்றும் பசுமையான மேற்கூரைகள் அமைப்பது, இயற்கையான காற்று மற்றும் வெளிச்சம் கொண்ட கட்டிடங்களை திட்டமிட்டு வடிவமைப்பது அவசியம் என்று பரிந்துரைக்கிறது.
புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களுக்கான வாய்ப்புகள் கொண்டது தமிழ்நாடு. வெப்ப மண்டல வானிலை கொண்ட தமிழ்நாட்டில், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் கூடுதல் சவால்களை ஏற்படுத்துகின்றன.
வெப்ப அலை, நீண்ட கால வறட்சி, அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது, அதிகரிக்கும் கடல் நீர் மட்டம் ஆகியவை மாநிலத்துக்கான புதிய சவால்களாக உருவாகி வருகின்றன என்று எச்சரிக்கும் அறிக்கை, அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு காலநிலை பேரிடர் காரணமாகவும் 300 முதல் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார இழப்பை தமிழ்நாடு சந்திக்கிறது என்று ஓர் ஆய்வின் தரவுகளை சுட்டிக்காட்டுகிறது அறிக்கை.
இது குறித்த திட்ட ஆணையத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “காலநிலை மாற்றம் மிகவும் சிக்கலான விவகாரம். எங்கோ ஒருவர் செய்யும் செயல், வேறு எங்கோ விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். உலக அளவில் பொதுவாக அரசுகள், பாதிப்பு ஏற்பட்ட பிறகே அது குறித்து யோசித்து, பாதிப்புகளை குறைப்பது எப்படி என்று திட்டமிடுகின்றன. ஆனால் பாதிப்புகளை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்போது பாதிப்பு இல்லையே, எதற்கு செலவு நினைத்தால், விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு