- எழுதியவர், சு.மகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பஹ்ரைனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களையும் விரைவில் மீட்டுத் தருமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் இரானில் தங்கி, ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்ய சென்றவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களுக்கும் எல்லை தாண்டிய குற்றத்திற்காக பஹ்ரைனில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் விடுதலை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தரப்புக்காக வாதாட நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கான செலவுகளை இந்திய தூதரகம் ஏற்றுக் கொண்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் விடுதலையாவார்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படுவது எப்போது? இதில் என்ன நடக்கிறது?
பஹ்ரைனில் தமிழக மீனவர்கள் கைது
திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 28 மீனவர்கள் கடந்த மே மாதம் இரான் நாட்டுக்கு மீன்பிடி தொழிலுக்காக சென்றுள்ளனர். இரானில் தங்கியிருந்து அவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர்.
செப்டம்பர் 11ஆம் தேதி சட்டவிரோதமாக தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாக 28 பேரையும் பஹ்ரைன் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரான அன்றன் என்பவரின் மனைவியான ஜொசிகா,“உள்ளூரில் போதிய வருவாய் இல்லாத காரணத்தால்தான் எனது கணவர் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகிறார். எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் ஒருவரின் வருவாயை நம்பி தான் எங்கள் குடும்பம் உள்ளது. குழந்தைகள் அப்பா எப்போது வருவார் என்று கேட்கின்றனர். அவர்களுக்கு என்ன பதில் கூறி தேற்றுவது என்றே எனக்கு தெரியவில்லை,” என்று கண் கலங்கினார்.
பஹ்ரைனில் உள்ள தமிழர்கள் நலனுக்காக செயல்படும் ‘அன்னை தமிழ் மன்றம்’ என்ற அமைப்பினர் சிறையில் உள்ள மீனவர்கள் குறித்த தகவலை குடும்பத்தினருடன் பகிர்ந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்துப் பேசி தேவையான உதவிகளை அந்த அமைப்பு செய்ததாக ஜொசிகா கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விரைந்து விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜொசிகா கோரிக்கை விடுத்தார்.
28 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகருமான மு. அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆகியோருக்கு மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.
இந்திய வெளியுறவுத்துறைக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் விடுதலை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை மேற்கொள்ளுமாறு அந்த கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்,
இதுதொடர்பாக திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராபர் புரூசிடம் பிபிசி சார்பில் பேசினோம். மீனவர் விடுதலை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களை விரைந்து மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார்.
கைதான மீனவர்களின் தண்டனை குறைப்பு
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வரும் ‘அன்னை தமிழ் மன்றம் பஹ்ரைன்’ அமைப்பின் தலைவர் செந்தில் பிபிசி தமிழிடம் பேசினார்.
“28 மீனவர்களுக்கும் சட்டவிரோதமாக பஹ்ரைன் கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மீனவர்கள் அனைவரும் இப்போது பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்றார் அவர்.
பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் மீனவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது.
“நவம்பர் ஒன்றாம் தேதி பஹ்ரைனிலுள்ள இந்திய தூதகரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நிகழ்வில் (Open House Meeting) எங்கள் அமைப்பினரும் கலந்து கொண்டனர். பஹ்ரைனில் உள்ள இடிந்தகரை பகுதியை சேர்ந்த மக்கள் சிலருடன் சேர்ந்து, பஹ்ரைனுக்கான இந்திய தூதர் வினோத் கே ஜேக்கப்பை நேரில் சந்தித்து கைது செய்யப்பட்டுள்ள இடிந்தகரை மீனவர்களின் நிலை குறித்து எடுத்துரைத்தோம்.” என்றார் செந்தில்.
மேலும், “மீனவர்கள் தரப்பு கோரிக்கையை அடுத்து, கைது விவகாரத்தில் பஹ்ரைன் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, மீனவர் தரப்பில் வாதாட இந்திய தூதரகம் சார்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு நீதிமன்றத்தில் நடந்த மேல் முறையீட்டு மனு விசாரணையின் போது பஹ்ரைன் நீதிமன்றம் இடிந்தகரை மீனவர்களின் சிறை தண்டனையை 3 மாதங்களாக குறைத்துள்ளது. இது தொடர்பான நீதிமன்ற ஆணை விரைவில் வெளியாகும்” என்று பிபிசியிடம் செந்தில் தெரிவித்தார்.
ஏற்கெனவே 2 மாதங்களுக்கு மேலாக மீனவர்கள் சிறையில் இருப்பதால் அவர்கள் விரைவில் விடுதலையாக வாய்ப்புள்ளது என்றார் அவர்.
இந்திய வெளியுறவுத் துறை கூறியது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசியிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பெயரில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பஹ்ரைன் சிறையில் உள்ள மீனவர்களுக்கு தூதரக அணுகல் (Consular access), சட்ட உதவி உள்ளிட்ட அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் இந்திய தூதரகத்தால் வழங்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் தரப்புக்காக வாதாட நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கான செலவுகளும் இந்திய தூதரகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மீனவர்கள் தண்டனை குறைப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் பிபிசியிடம் அவர் உறுதி செய்தார்.
அயலகத் தமிழர் நலத்துறை வேண்டுகோள்
கேரளாவின் ‘Non Resident Keralites Affairs (NORKA)’ என்ற அமைப்பை போல தமிழ்நாட்டிலும் அயலகத் தமிழர் நலத்துறை செயல்படுகிறது.
தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் போது, இந்த அமைப்பில் பதிவு செய்த பிறகு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பலருக்கு இந்த நடைமுறை தெரிவது இல்லை அல்லது பின்பற்றுவது இல்லை என்கிறார் அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி.
இது தொடர்பாக அவர் பிபிசி தமிழிடம் பேசும்போது, “தமிழகத்தில் 171 அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அரசால் பகுப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவர்கள் அவர்கள் மூலமாக வெளிநாட்டு வேலைக்கு செல்வது பாதுகாப்பானது” என்கிறார் அவர்.
“தமிழகத்தில் தற்போது ஏழு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் பார்வையின் கீழ் வெளிநாடு செல்பவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வெகு விரைவில் இதனை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் இந்த பயிற்சி வகுப்பு மூலம் வேலைக்கு செல்லும் நிறுவனம் குறித்து முழு தகவல் பெற்று அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செல்ல வேண்டும்.” என்று அவர் அறிவுறுத்துகிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெளிநாடுகளில் சிக்கல் ஏற்பட்டால், அவசர காலங்களில் nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 1800 309 3793, 8069009900, 8069009901 என்ற இலவச எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு