மோதி – டிரம்ப் நட்பு எவ்வளவு வலிமையானது? அதனால் இந்தியாவுக்கு என்ன பலன் கிடைக்கும்?

நரேந்திர மோதி, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் மோதியை ‘தனது நண்பர்’ என்று கூறுகிறார். பிரதமர் மோதியும் டிரம்பை ‘தனது தோழர்’ என்று அழைக்கிறார்.

சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, அதாவது செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோதி அமெரிக்கா சென்றிருந்தபோது, தான் பிரதமர் மோதியைச் சந்திக்கவிருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார்.

அப்போது டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் டிரம்பைச் சந்திக்காமலேயே பிரதமர் மோதி இந்தியா திரும்பினார். செப்டம்பர் 17-ஆம் தேதி மிச்சிகனில் உள்ள பிளின்ட் நகரில் நடந்த ஒரு கூட்டத்தின்போது குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்த டிரம்ப், “மோதி அடுத்த வாரம் அமெரிக்கா வருகிறார். அவரை நான் சந்திப்பேன். அவர் ஒரு சிறந்த மனிதர்,” என்று கூறியிருந்தார்.

தனது தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் பலமுறை பிரதமர் மோதியின் பெயரைக் குறிப்பிட்டு அவரது தலைமையைப் பாராட்டினார். நவம்பர் 6-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் முன்னிலை பெற்றபோது பிரதமர் மோதி அவரை ‘நண்பர்’ என்று குறிப்பிட்டு அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நரேந்திர மோதி, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோதியின் பெயரை பலமுறை குறிப்பிட்டார்.

மோதி-டிரம்ப் நட்பு

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த ‘ஹௌவுடி மோதி’ நிகழ்வில் டிரம்புக்கும் மோதிக்கும் இடையே காணப்பட்ட நட்பு பரவலாகப் பேசப்பட்டது.

அப்போது டிரம்ப், மோதி இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 50,000 அமெரிக்கச் குடிமக்களிடையே உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோதி, ‘ஆப்கி பார் டிரம்ப் சர்க்கார்’ (‘இந்தமுறை டிரம்ப் அரசு’) என்ற கோஷத்தை எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து 2020-இல் மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில், ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ப் கலந்துகொண்டார். டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் மோதியை ’ஒரு சிறந்த மனிதர்’ என்றும் ’நண்பர்’ என்றும் வர்ணித்துள்ளார்.

இந்தியா குறித்து டிரம்ப் என்ன சொல்கிறார்?

நரேந்திர மோதியை ‘நண்பர்’ என்று அழைக்கும் போதிலும் டிரம்ப், இந்தியாவின் கொள்கைகளைக் கடுமையாகத் தாக்கி வருகிறார்.

அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா வரி விதிப்பதாகவும், அதே நேரம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும்போது வரி விலக்கு வேண்டும் என்று கேட்பதாகவும் டிரம்ப் பலமுறை புகார் கூறியுள்ளார்.

செப்டம்பர் 17-ஆம் தேதி, “இந்தியா பற்றிப் பேசினால் அது (அதைச் சமாளிப்பது) மிகவும் கடினமானது. பிரேசிலும் அதே போலத்தான்,” என்று டிரம்ப் கூறினார்.

2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு தேர்தல் பேரணியில் உரையாற்றிய டிரம்ப், “சீனாவில் நாம் ஏதாவது செய்ய விரும்பினால் இங்கே பொருட்களைத் தயாரித்து அங்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அப்போது உங்கள் மீது 250% வரி விதிப்பார்கள். இதை நான் விரும்பவில்லை. பிறகு ‘உங்கள் ஆலையை அமைக்க வாருங்கள் என்று அழைப்பு வருகிறது. பின்னர் இந்த நிறுவனங்கள் அங்கு செல்கின்றன,” என்று குறிப்பிட்டார்.

“ஹார்லி டேவிட்சன் மோட்டர்பைக் விஷயத்தில் இந்தியாவும் அவ்வாறே செய்தது. 200% வரி விதிப்பு காரணமாக ஹார்லி டேவிட்சன் தனது பைக்குகளை அங்கு விற்க முடியவில்லை,” என்றார் டிரம்ப்.

இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகள் குறித்து டிரம்ப் தெளிவாக இருக்கிறார். இந்தியாவுடன் பாதுகாப்புக் கூட்டுறவை அதிகரிக்க டிரம்ப் விரும்புகிறார். ஆனால் அவர் வர்த்தக உறவுகள் மற்றும் குடியேற்றம் ஆகிய விஷயங்களில் இந்தியாவைத் தாக்கிப் பேசி வருகிறார்.

ட்ரம்பின் ‘அமெரிக்கா முதல்’ கொள்கை மோதியுடனான நட்பின் வரம்பைக் கட்டுப்படுத்துகிறது. இந்தக் கொள்கையின் கீழ் டிரம்ப் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம், ஃபார்மா மற்றும் ஜவுளி ஏற்றுமதி மீது வரி விதிக்கக்கூடும்.

டிரம்ப் ஏற்கனவே இந்தியாவை ’வரி மன்னன்’ என்று அழைத்துள்ளார். தனது பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் அதே வரியை அமெரிக்காவும் விதிக்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக அமெரிக்கா உள்ளது. இந்தியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளில் இந்தியாவிற்கு வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்படுத்தாத ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே.

அதாவது, இந்தியா அமெரிக்காவுக்குத் தனது பொருட்களை அதிகமாக ஏற்றுமதி செய்து, அங்கிருந்து குறைவாக இறக்குமதி செய்கிறது.

பிரதமர் மோதியுடனான ட்ரம்பின் நட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் பல கொள்கைகளை டிரம்ப் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்

இந்திய-அமெரிக்க வர்த்தகம்

2022-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 191.8 பில்லியன் டாலர்கள் ஆகும் (இந்திய மதிப்பில் சுமார் 16 லட்சம் கோடி ரூபாய்). இந்தியாவின் ஏற்றுமதியின் மதிப்பு 118 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்), மற்றும் இறக்குமதியின் மதிப்பு 73 பில்லியன் டாலர்கள் ஆகும் (இந்திய மதிப்பில் சுமார் 6.2 லட்சம் கோடி ரூபாய்).

அதாவது 2022-இல் இந்தியாவின் வர்த்தக உபரி 45.7 பில்லியன் டாலராக இருந்தது (இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்).

ஆனால் ‘அமெரிக்கா முதல்’ கொள்கையின் படி, டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக வரி விதித்தால் இந்த நிலைமை மாறும்.

‘மோதியை ட்ரம்ப் தனது ‘நண்பர்’ என்று அழைக்கிறார். ஆனால் இந்த நட்பு எல்லைக்கு அப்பாற்பட்டதா அல்லது அதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா?’ என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலரும், ரஷ்யாவுக்கான முன்னாள் இந்தியத் தூதருமான கன்வல் சிபலிடம் பிபிசி கேட்டது.

அதற்கு அவர், “நட்பு என்பது பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நலன்கள் நிறைவேறும் வரை அவை வரம்புகளுக்கு அப்பாற்பட்டவை. ஆனால், இருவரது நலன்கள் மோதும் போது, அதன் வரம்பு தெளிவாகிறது,” என்று கன்வல் சிபல் பதில் அளித்தார்.

“வரி விகிதத்தில் அமெரிக்கா எப்படி இந்தியாவுடன் ஒப்பிட முடியும்? அமெரிக்கா இந்த விளையாட்டில் முன்னிலையில் இருக்கும் போதுதான் சுதந்திர வர்த்தகம் பற்றிப் பேசுகிறது. இப்போதைக்கு இது பாதுகாப்பு வாதத்தின் விஷயம் அல்ல. டாலர் மூலம் உலக நிதி அமைப்பைக் கட்டுப்படுத்தும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் எப்படி இந்தியாவிடம் சமத்துவத்தைக் கோர முடியும்? அமெரிக்காவிற்கு பிரச்சனை சீனா தான், இந்தியா அல்ல,” என்று அவர் கூறினார்.

“சில விஷயங்களில் டிரம்பின் நிலைப்பாடு மோதிக்குச் சாதகமாக இருக்கும். இங்கே அவர்களது நட்பு வலுவாக இருக்கும். இந்தியாவின் உள் அரசியலில் டிரம்ப் தலையிட மாட்டார். அதாவது மனித உரிமைகள், மதச் சமத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றில் டிரம்ப், பைடன் நிர்வாகத்தைப்போல பேசமாட்டார் என்பதே இதன் பொருள். இந்துத்துவ அரசியல் குறித்து டிரம்ப் எதுவும் பேச மாட்டார். இருப்பினும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அமைப்புகளை டிரம்ப்பால் கூட கட்டுப்படுத்த முடியாது,” என்று கன்வல் சிபல் கூறுகிறார்.

பிரதமர் மோதியுடனான ட்ரம்பின் நட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதியும் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் ’நண்பர்’ என்று கூறிக்கொள்கின்றனர்

ரஷ்யாவிடம் ‘பகை’, சீனாவின் ‘ஆபத்து’

ரஷ்யாவிடம் பகைமைப் போக்கை நீட்டிக்க வேண்டும் என்பதற்காகச் சீனாவின் அச்சுறுத்தல்களை அமெரிக்கா புறக்கணிக்கிறது என்பதை இந்திய ஆய்வாளர்கள் அடிக்கடி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் கொள்கைகளால் ரஷ்யாவும் சீனாவும் நெருக்கமாகி வருவதாகப் பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செயல் உத்தி விவகார நிபுணரான பிரம்மா செல்லானி, டிரம்பின் வெற்றிக்குப் பிறகு, ‘ஓபன்’ என்ற ஆங்கில இதழில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

“மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான அமைப்புகளின் நலன்களுக்கு உண்மையான அச்சுறுத்தல் சீனாவிடமிருந்துதான் வருகிறது, ரஷ்யாவிடமிருந்து அல்ல என்பதை டிரம்ப் நிர்வாகம் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால் ரஷ்யாவின் ஆதிக்க வரம்பானது அதன் அண்டை நாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சீனாவோ அமெரிக்காவின் இடத்தைக் கைப்பற்ற விரும்புகிறது,” என்று அவர் எழுதியிருக்கிறார்.

“சீனாவின் பொருளாதாரம் அதன் மக்கள் தொகையைப் போலவே ரஷ்யாவை விட 10 மடங்கு பெரியது. சீனாவின் ராணுவ பட்ஜெட் ரஷ்யாவைவிட 4 மடங்கு அதிகம். சீனா தனது அணுஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது. ஆனால் பைடன் நிர்வாகம் தவறான எதிரி மீது கவனம் செலுத்தி வந்தது,” என்றும் பிரம்மா செல்லானி குறிப்பிட்டுள்ளார்.

“யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யாவிற்கு எதிரான பைடனின் கண்டிப்பால் சீனா நேரடியாகப் பயனடைந்துள்ளது. ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்தது. சர்வதேச நிதி அமைப்பை ஆயுதமாக்கியது. இது சீனாவிற்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியது. ஏனெனில் இந்த நிர்பந்தங்களின் காரணமாக ரஷ்ய வங்கிகள் சீன நாணயமான யுவானின் சர்வதேசப் பயன்பாட்டை அதிகரித்தன. ரஷ்யா இப்போது தனது சர்வதேச வர்த்தகத்தின் பெரும்பகுதியை யுவானில் செய்து வருகிறது. ரஷ்யா தன்னுடைய எல்லா யுவானையும் சீன வங்கிகளில் வைத்துள்ளது. இதனால் சீனா பலனடைந்து வருகிறது,” என்றும் அவர் எழுதியுள்ளார்.

பிரதமர் மோதியுடனான ட்ரம்பின் நட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த மாதம் பிரதமர் மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக ரஷ்யா சென்றனர்

நட்பு – எந்த அளவுக்கு?

இந்த விஷயத்தில் டிரம்ப் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பார் என்றும் ரஷ்யாவிற்குப் பதிலாக சீனா மீது கவனம் செலுத்துவார் என்றும் பிரம்மா செல்லானி கருதுகிறார்.

இது நடந்தால் அது இந்தியாவிற்கும் சாதகமாக இருக்கும். ஏனெனில், இந்தியா-ரஷ்யா இடையே வளர்ந்து வரும் நெருக்கத்திற்கு எதிராக பைடன் நிர்வாகம் போல டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அழுத்தம் இருக்காது.

ஒருவரை ‘நண்பர்’ என்று அழைப்பது தனிப்பட்டத் தொடர்பை உருவாக்குவதற்கு மட்டுமேயானது, என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் சர்வதேச விவகாரங்களின் முன்னாள் பேராசிரியர் ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.

“ஒருவர் மற்றவரை ‘நண்பர்’ என்று அழைத்தால், கொள்கை விஷயங்களில் தளர்வு இருக்கும் என்று எடுத்துக் கொள்ள இயலாது. மோதியின் ராஜதந்திர பாணி தனித்துவமானது. அந்தப் பாணியில் அவர் ஏற்படுத்திக் கொண்ட பரஸ்பர தொடர்புககள் சமயங்களில் பலனும் அளிக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“டிரம்ப்பைப் பொறுத்த வரையில் உலகத் தலைவர்களில் யாரைப் பிடிக்கும், யாரைப் பிடிக்காது என்பதில் அவர் மிகத் தெளிவாக இருக்கிறார். அவர் விரும்பும் உலகத் தலைவர்களில் நரேந்திர மோதியும் ஒருவர். ஆனால் மோதிக்காக டிரம்ப் தனது நலன்களை விட்டுக் கொடுப்பார் என்பது இதற்கு அர்த்தமல்ல,” என்று பேராசிரியர் பந்த் குறிப்பிட்டார்.

“வர்த்தகம் மற்றும் குடியேற்ற விஷயங்களில் டிரம்பின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இருக்காது. இந்தியா மீது கண்டிப்பு நிறைந்ததாகவே இருக்கும். இந்திய அரசியலில் என்ன நடக்கிறது என்பதில் அவருக்கு எந்த ஆர்வமும் இருக்காது. ஆனால் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் தொடர்பாக ஏதாவது நடந்தால், டிரம்ப் அதைக் குறித்துக் குரல் கொடுப்பார். ஏனெனில், அவர் தனது நாட்டில் உள்ள பெரும்பான்மை கிறிஸ்தவர்களின் உணர்வுகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.

பிரதமர் மோதியுடனான ட்ரம்பின் நட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவுடனான உறவை மட்டுப்படுத்த இந்தியா மீது பைடன் நிர்வாகத்தின் அழுத்தம் இருந்தது.

காஷ்மீர் விவகாரம் பற்றி டிரம்ப் சொன்ன கருத்து

2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இம்ரான் கானைச் சந்தித்தார்.

அச்சமயம் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் பேசினார். காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வது தொடர்பாகப் பல ஆண்டுகள் கழித்து ஒரு அமெரிக்க அதிபர் பேசுவது அதுவே முதல்முறை.

காஷ்மீர் விவகாரத்தில் தான் மத்தியஸ்தம் செய்வதை பிரதமர் மோதியும் விரும்புவதாக டிரம்ப் கூறியிருந்தார். டிரம்பின் கூற்றை நிராகரித்த இந்தியா, பிரதமர் மோதி டிரம்பிடம் அப்படி எதுவும் கூறவில்லை என்றும் தெரிவித்தது.

டிரம்பின் இந்த அறிக்கை இந்தியாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அதை வரவேற்றது. காஷ்மீர் விவகாரத்தில் யாருடைய மத்தியஸ்தத்தையும் ஏற்க மாட்டோம் என்பதுதான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு