அமெரிக்க ஆய்வகத்திலிருந்து தப்பித்த 43 குரங்குகள்

பட மூலாதாரம், Beaufort County Sheriff’s Office

  • எழுதியவர், மேக்ஸ் மட்ஸா
  • பதவி, பிபிசி நியூஸ்

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் இருக்கும் ஆய்வகம் ஒன்றில் இருந்து தப்பித்த 43 குரங்குகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவற்றின் கூண்டை ஆய்வகப் பாதுகாவலர் மூடாமல் விட்ட நிலையில், குரங்குகள் தப்பித்துள்ளன.

இந்தக் குரங்குகள் ரீசஸ் மக்காக் (rhesus macaque) எனப்படும் செம்முகக் குரங்குகள் இனத்தைச் சேர்ந்தவை. மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகளுக்காக இந்தக் குரங்குகளை இனப்பெருக்கம் செய்யும் ஆல்ஃபா ஜெனிசிஸ் எனும் நிறுவனத்தின் ஆய்வகத்திலிருந்து இந்தக் குரங்குகள், அம்மாகாணத்தின் லோகண்ட்ரி எனும் பகுதிக்கு தப்பிச் சென்றன.

பொதுமக்கள் தங்கள் வீட்டுக் கதவுகள் மற்றும் ஜன்னல்களைப் பாதுகாப்பாக மூடி வைக்குமாறு அப்பகுதியின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குரங்குகளைக் கண்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தப்பித்துள்ள குரங்குகள் இளம்வயதுப் பெண் குரங்குகள் என்றும் சுமார் 3.2 கிலோ எடை கொண்டவையாக இருக்கலாம் என்றும் யெமசி காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த ‘விளையாட்டுத்தனமான’ குரங்குகள் இருக்கும் இடத்தை அந்நிறுவனம் அடையாளம் கண்டுள்ளதாகவும், ‘அவற்றை உணவின் மூலம் கவர்ந்திழுக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும்’ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காவல்துறையின் அறிவுறுத்தல்

“எந்தச் சூழ்நிலையிலும் அக்குரங்குகளின் அருகே செல்ல முயற்சிக்க வேண்டாம்,” என காவல்துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர்.

அப்பகுதியில் குரங்குகளைச் சிக்க வைப்பதற்கான பொறிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்தில் “வனவிலங்குகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் தெர்மல்-இமேஜிங் கேமராக்களைப் பயன்படுத்தி அவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும்,” அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்குரங்குகளின் அளவு சிறியதாக இருப்பதால் இன்னும் அவை பரிசோதிக்கப்படவில்லை என்றும், “நோய்களைப் பரப்பும் அளவுக்கு அவை பெரிய குரங்குகள் அல்ல,” என்றும் அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்ததாகக் காவல்துறை கூறியுள்ளது.

ஒரு குரங்கை பின்பற்றி மற்ற குரங்குகளும் தப்பித்திருக்கலாம் என, அந்நிறுவனம் கூறுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு குரங்கை பின்பற்றி மற்ற குரங்குகளும் தப்பித்திருக்கலாம் என, அந்நிறுவனம் கூறுகிறது (சித்தரிப்புப்படம்)

தாமாகவே திரும்பும் என நம்பிக்கை

குரங்குகள் தப்பித்தது ‘எரிச்சலூட்டுவதாக’ அந்த ஆய்வு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிரேக் வெஸ்டெர்கார்ட் தெரிவித்தார்.

பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சி.பி.எஸ் ஊடகத்திடம் பேசிய அவர், “இப்பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவு ஏற்படும் என நம்புவதாகவும்” ஆய்வகத்திற்கு அக்குரங்குகள் தாமாகவே திரும்பும் என கருதுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை (நவம்பர் 6) அக்குரங்குகளின் பாதுகாவலர் குரங்குகள் வைக்கப்பட்டிருந்த இடத்தின் கதவை மூடாமல், திறந்தநிலையில் விட்டதாக அவர் தெரிவித்தார். “இப்போது அவை காடுகளில் சுற்றித் திரிவதாக,” அவர் தெரிவித்தார்.

“இது ஒன்றை பார்த்து மற்றொன்றும் செய்யும் குரங்குகளின் பழக்கத்தால் நிகழ்ந்தது,” என அவர் கூறினார்.

“மொத்தம் 50 குரங்குகள் உள்ளன. 7 குரங்குகள் கூண்டுக்குள்ளேயே உள்ளன. 43 குரங்குகள் வெளியே சென்றுவிட்டன,” என்றார் அவர்.

“காடுகளில் சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்கும். ஆனால், அவற்றுக்குப் பிடித்தமான ஆப்பிள்கள் அங்கு கிடைக்காது,” என அவர் கூறுகிறார். “எனவே அவை ஓரிரு நாளில் திரும்பிவிடும் என எதிர்பார்க்கிறோம்,” என்கிறார்.

அமெரிக்க ஆய்வகத்திலிருந்து தப்பித்த 43 குரங்குகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஓரிரு நாட்களில் அக்குரங்குகள் திரும்பிவிடும் என அந்நிறுவனம் நம்புகிறது (சித்தரிப்புப்படம்)

‘இது முதல்முறை அல்ல’

தி போஸ்ட் அண்ட் குரியர் எனும் செய்தித்தாளுக்குப் பேட்டியளித்த அவர், வானிலை காரணமாக குரங்குகளைப் பிடிப்பது கடினமாகியுள்ளதாகத் தெரிவித்தார். “மழை காரணமாக அக்குரங்குகள் பதுங்கியிருப்பதால் அவற்றைப் பிடிக்கும் பணிகள் தடைபட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

அந்த ஆய்வகத்திலிருந்து குரங்குகள் தப்பிப்பது இது முதன்முறையல்ல என்கிறது, தி போஸ்ட் அண்ட் குரியர்.

கடந்த 2016-ஆம் ஆண்டில் 19 குரங்குகள் அங்கிருந்து தப்பித்து, சுமார் ஆறு மணிநேரம் கழித்து மீண்டும் திரும்பின. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 26 குரங்குகள் அந்த ஆய்வகத்திலிருந்து தப்பித்தன.

சார்ல்ஸ்டனுக்கு கிழக்கே சுமார் 100கி.மீ., தொலைவில் உள்ள யெமசி நகரில் 1,100-க்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர்.

பிரதிநிதிகள் அவையில் தெற்கு கரோலினாவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் நான்சி மேஸ், “குரங்குகள் தப்பித்துள்ளது குறித்த அனைத்து தேவையான தகவல்களையும் அப்பகுதி மக்களுக்குத் தெரிவிப்பதற்காக அக்கறையுடன் சேகரிப்பதாக,” ட்வீட் செய்துள்ளார்.

மக்காக் இன குரங்குகள் ஆக்ரோஷமானவை, போட்டிகுணம் கொண்டவை. வியாழக்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய யெமசி காவல்துறை தலைவர் கிரெகோரி அலெக்ஸாண்டர், “பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை,” எனத் தெரிவித்தார்.

இந்தாண்டின் துவக்கத்தில் ஹோன்ஷு எனப் பெயரிடப்பட்ட மக்காக் இனக் குரங்கு ஒன்று, ஸ்காட்லாந்து உயிரியல் பூங்காவிலிருந்து தப்பித்தது. அதற்கு ஐந்து நாட்களுக்குப் பின், ட்ரோன் உதவியுடன் அதன் இருப்பிடம் கண்டறியப்பட்டது. பின்னர், அது மயக்க மருந்து செலுத்தப்பட்டுப் பிடிக்கப்பட்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.