ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனப் பிரிவு 370 தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா
  • எழுதியவர், மஜீத் ஜஹாங்கீர்
  • பதவி, பிபிசி செய்தியாளர், ஶ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அன்று, அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து அமளி மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.

நவம்பர் 8-ஆம் தேதி கூட்டத் தொடர் துவங்கியதும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 370-வது சட்டப்பிரிவு தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையில் சலசலப்பை ஏற்படுத்தினார்கள். மேலும் அந்தத் தீர்மானத்தை திரும்பப் பெறக் கோரி, வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் அமளி காரணமாக, சபாநாயகரின் மார்ஷல்கள் சலசலப்பை ஏற்படுத்திய சட்டமன்ற உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்த பிறகு அங்கே நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்தொடர் இதுவாகும்.

சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக அதற்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஐந்து நாட்களைக் கொண்ட முதல் சட்டசபை கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமளி ஏற்பட்டது ஏன்?

கூட்டத்தொடரின் முதல் நாளான நவம்பர் 4-ஆம் தேதி, மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி – PDP) சட்டமன்ற உறுப்பினர் வஹீத் உர் ரஹ்மான் பாரா, சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுப்பது குறித்த முன்மொழிவைச் சட்டப்பேரவையில் முன்வைத்தார். அன்றிலிருந்தே சலசலப்பு துவங்கியது.

தேசிய மாநாட்டுக் (என்.சி – NC) கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதல்வர் ஒமர் அப்துல்லா, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக இது செய்யப்படுகிறது என்று குற்றம் சுமத்தினார்கள்.

“இந்த முன்மொழிவில் முக்கிய அம்சங்கள் ஏதும் இல்லை. கேமராக்களுக்காகவே இது இங்கே முன்மொழியப்படுகிறது. உண்மையாகவே இந்தத் தீர்மானத்தின் மூலம் ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் முறையாக எங்களிடம் அதனை பகிர்ந்து, அது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருப்பார்கள்,” என்று கூறினார் ஒமர் அப்துல்லா.

அதே நேரத்தில் பி.டி.பி., கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா முஃப்தி, வஹீத் உர் ரஹ்மான் பாராவை சமூக வலைதளத்தில் பாராட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில், “அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து தீர்மானத்தை முன்மொழிந்த பாராவை நினைத்து நான் பெருமையடைகிறேன்,” என்று அவர் எழுதியிருந்தார்.

கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில், சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுப்பதற்கான முன்மொழிவு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த முன்மொழிவை ஆளும் கட்சியான தேசிய மாநாடு முன்வைத்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த முன்மொழிவை வரவேற்றுள்ளன. ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியது.

ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனப் பிரிவு 370 தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நவம்பர் 4ம் தேதி அன்று பி.டி.பி. கட்சி முன்மொழிந்த தீர்மானத்தை நிராகரித்தார் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா

அவையில் பதாகையை வைத்த சட்டமன்ற உறுப்பினர்

அமர்வின் நான்காவது நாளில், அவாமி இத்தேஹாத் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் குர்ஷித் அகமது ஷேக் சட்டமன்றத்தில் பதாகை ஒன்றை வைத்தார்.

‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு, அரசியல் கைதிகளாகச் சிறையில் உள்ள நபர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அந்தப் பதாகையில் எழுதப்பட்டிருந்தது.

குர்ஷித் அகமது ஷேக், நாடாளுமன்ற உறுப்பினர் ஷேக் அப்துல் ரஷீத்தின் சகோதரர் ஆவார். இன்ஜினியர் ரஷீத் என்று பலராலும் அறியப்படும் அவர் இந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

குர்ஷித் இந்த பதாகையை வைத்தவுடன், அவையில் இருந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சலசலப்பில் ஈடுபட்டனர்.

குர்ஷித்திற்கு ஆதரவாகப் பல சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

நவம்பர் 8ம் தேதி அன்று, பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர்கள் பீப்பிள்ஸ் கான்ஃபரன்ஸ், பி.டி.பி மற்றும் அவாமி இத்தேஹாத் கட்சியினரும் சச்சரவில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் மார்ஷல்களால் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சிலர் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபைக்கு வெளியே உள்ள புல்வெளியில் அமர்ந்து தனியாக கூட்டம் ஒன்றைத் துவங்கி, மக்கள் பிரச்னைகளை கேட்க இங்கு கூட்டத்தொடரை தொடங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டனர்.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 8), மகாராஷ்டிராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “உலகில் எந்த சக்தியும் 370-வது பிரிவை மீட்டெடுக்க முடியாது,” என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனப் பிரிவு 370 தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பா.ஜ.க-வினர் அமளியில் ஈடுபட்டனர்

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட போது நடந்தது என்ன?

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி அன்று நரேந்திர மோதி அரசு, ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி அறிவித்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில், குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு பிறக்கப்பட்டது. இணையம் துண்டிக்கப்பட்டது. மேலும் அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர்.

மூன்று முன்னாள் முதல்வர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவில்லை. மாறாக 10 ஆண்டுகள் கழித்து தற்போது தான் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டன.

2024 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை உறுதி செய்தது. பா.ஜ.க 29 தொகுதிகளிலும், பி.டி.பி. கட்சி 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தற்போது ஒமர் அப்துல்லாவில் தலைமையில் அங்கே ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவது, மாநில அந்தஸ்த்தைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது தேசிய மாநாட்டுக் கட்சி.

ஆட்சிக்கு வந்தால் நாங்கள் சட்டப்பிரிவு 370 தொடர்பான தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவோம் என்றும் மக்களிடம் உறுதி அளித்தது அந்த கட்சி.

பி.டி.பி மற்றும் பீப்பிள்ஸ் கான்ஃபிரன்ஸ் கட்சிகளும் கூட இதே வாக்குறுதிகளை அளித்து மக்களிடம் வாக்கு சேகரித்தது.

சட்டமன்ற கூட்டத்தொடரில் இவ்விரண்டு கட்சிகளும் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவது தொடர்பான தீர்மானங்களை முன்மொழிந்தன. அவற்றில் பி.டி.பி கட்சியின் முன்மொழிவை ஒமர் அப்துல்லா, கூட்டத்தொடரின் முதல்நாளே நிராகரித்தார்.

ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனப் பிரிவு 370 தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தேசிய மாநாட்டு கட்சி உட்பட இந்த தேர்தலில் போட்டியிட்ட பிராந்திய கட்சிகள் அனைத்தும் சட்டப்பிரிவு 370வதை மீட்போம் என்ற உறுதியுடன் வாக்கு சேகரித்தனர்

நிபுணர்கள் கூறுவது என்ன?

சட்டப்பிரிவு 370 குறித்த சட்டசபை தீர்மானம் அடையாள தீர்மானமாகவே உள்ளது என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் அனீஸ் ஜர்கார்.

“சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய அரசிடம் இருந்து அதை திரும்பப் பெற முடியாது என்று முதலமைச்சரே கூறியிருக்கிறார். ஆனால் அதனை திரும்பப் பெறுவதற்கான போராட்டத்தைத் தொடருவேன் என்று அவர் மக்களுக்கு வாக்களித்துள்ளார்,” என்கிறார் அனீஸ்.

“முன்மொழிவை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் வெற்றியைக் காட்டிலும் அது எவ்வளவு தூரம் முன்னேறும் என்பது மற்றொரு பிரச்னை. ஆனால் இப்போதைக்கு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளன,” என்கிறார் அனீஸ்.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி எதைச் செய்தாலும் அது ஏற்புடையது இல்லை என்று மக்கள் கூறியுள்ளனர். ஆனால், இது ஒரு சட்டமோ, மசோதாவோ இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஏனென்றால் நிறைவேற்றப்பட்டது ஒரு முன்மொழிவு மட்டுமே,” என்று விளக்கமளிக்கிறார் அனீஸ்.

இந்தத் தீர்மானம் கொண்டுவருவது தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஏற்படுள்ள அரசியல் நிர்ப்பந்தமா என்று கேட்டதற்கு, “மின்சாரத்திற்கோ, தண்ணீருக்கோ, சாலை வசதிகளுக்காகவோ மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. 370-வது சட்டப்பிரிவை மீட்டெடுப்பதற்காகவும், அதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவும் தான் மக்கள் இவரை தேர்ந்துள்ளனர்,” என்றார்.

“தேசிய மாநாட்டுக் கட்சியினருக்கு தீர்மானத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. 370-வது பிரிவின் மீதான தீர்மானத்தை நிறைவேற்றாமல் அவர்களால் முன்னேற முடியாது,” என்றார் அனீஸ்.

அரசு அதனைச் செய்யவில்லை என்றால், எதற்காக அதிகாரத்தை அளித்தோமோ அதற்கு எதிராக அரசு செயல்படுகிறது என்ற உணர்வு மக்களிடையே எழுந்திருக்கும். மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மக்களின் வேண்டுகோள்களை கவனிக்கவில்லை என்றால் அதன் விளைவுகள், பி.டி.பி-க்கு நேர்ந்த கதியே நேரும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி உணர்ந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

2014-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பி.டி.பி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சியை அமைத்தது.

ஆனால் பா.ஜ.க-வுடன் கைகோர்த்து அக்கட்சி அதற்கான விலையை தரநேர்ந்தது. தற்போது நடைபெற்ற தேர்தலில் மொத்தம் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றியைப் பெற்றது அக்கட்சி.

மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொள்ளாமல் பி.டி.பி, பா.ஜ.க-வுடன் கைகோர்த்த விதம், அதன் விளைவால் கட்சி உடைந்ததும், அதில் இருந்து இன்னும் மீள முடியாமல் இருப்பது குறித்தும் தேசிய மாநாட்டிற்குத் தெரியும் என்று அனீஸ் கூறுகிறார்.

தேசிய மாநாட்டுக் கட்சியும் மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் செயல்படவில்லை என்றால், வரும் காலம் அக்கட்சிக்கு நல்ல காலமாக அமையாமல் போகலாம் என்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனப் பிரிவு 370 தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சிறப்பு அந்தஸ்த்தை பறித்துக் கொண்ட அரசிடம் அதே அந்தஸ்த்து திரும்பிக் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதற்கான நான் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்தார் ஒமர்

வெறும் அரசியல் ஆதாயத்திற்கான நகர்வா இது?

இந்த முன்மொழிவைச் சட்டமன்றத்தில் கொண்டுவருவது அல்லது நிறைவேற்றுவது வெறும் அரசியல் நிகழ்வு என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

சட்டன் செய்தித்தாளின் ஆசிரியரும் அரசியல் ஆய்வாளருமான தாஹிர் முஹிதீன், “உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விவகாரத்தை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எந்த பலனும் இல்லை,” என்கிறார்.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இச்சட்டம் பெரும் தடையாக இருப்பதாக பா.ஜ.க தொடர்ந்து கூறி வருகிறது.

காஷ்மீரில் தற்போது அமைதி நிலவுவதாகவும் மற்றும் வளர்ச்சிக்கான பாதைகள் திறக்கப்பட்டு வருவதாகவும் கடந்த 6 ஆண்டுகளாக அக்கட்சி கூறிவருகிறது.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் கல் வீச்சு சம்பவங்களும் வன்முறைகளும் கணிசமாகக் குறைந்துள்ளன.

இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளில், ஜம்மு பகுதியில் தீவிரவாதம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. காஷ்மீரிலும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கடந்த ஒரு மாதத்தில் மீண்டும் பல தீவிரவாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.