ஆப்கன் நபரை கொண்டு டிரம்பை கொல்ல இரான் சதியா? அமெரிக்கா குற்றச்சாட்டின் முழு பின்னணி
- எழுதியவர், மேட்லைன் ஹால்பர்ட்
- பதவி, பிபிசி செய்தி, நியூயார்க்
-
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, டொனால்ட் டிரம்பைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஆஃப்கானிஸ்தான் நாட்டவர் மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது இரானில் உருவான சதித்திட்டம் என்றும் அமெரிக்கா கூறுகிறது.
ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த, 51 வயதான ஃபர்ஹாத் ஷகேரி என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது. டிரம்பைக் கொல்ல ‘திட்டமிட்டதாக’ ஃபர்ஹாத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஷகேரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் இரானில் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த கூற்றுகள் “முற்றிலும் ஆதாரமற்றவை” என்று இரான் கூறியுள்ளது.
மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகாரில், இரானின் புரட்சிகர காவலர் படையை சேர்ந்த ஒரு அதிகாரி, டிரம்பை கண்காணிக்கவும், அவரை படுகொலை செய்வதற்கான திட்டத்தை தயாரிக்கவும் செப்டம்பர் மாதம் ஷகேரிக்கு உத்தரவிட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வழக்கறிஞர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்
அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்ட் ஒரு அறிக்கையில், “அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட பலரை படுகொலை செய்யும் திட்டத்தில் குற்றவாளிகளின் வலையமைப்பை வழிநடத்த நியமிக்கப்பட்ட இரானிய அரசாங்க முகவர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, இந்த வழக்கில் மேலும் இருவர் மீதும் நீதித்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இரானை வெளிப்படையாக கடுமையாக விமர்சிக்கும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரைக் கொல்ல ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் அவர்கள் குற்றம்சாட்டப்பட்டனர்.
இந்த இரண்டு பேரின் அடையாளங்களை நீதித்துறை வெளியிட்டுள்ளது. ஒருவர் நியூயார்க்கின் புரூக்ளினில் வசித்த 49 வயதான கார்லைல் ரிவேரா. மற்றொருவர் நியூயார்க்கிற்கு அருகிலுள்ள ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த 36 வயதான ஜொனாதன் லேண்ட்ஹோல்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் வியாழன் அன்று நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் காவலில் வைக்கப்பட்டனர்.
இரான் பதில்
இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் கூறுகையில், “அமெரிக்க அதிபர்களைக் கொல்ல முயற்சித்ததாக கூறுப்படும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களிலும் கூறப்பட்டன. அதை இரான் மறுத்தது, அதன் பின்னர் அவை பொய்யான குற்றச்சாட்டுகள் என தெரிய வந்தது.” என்றார்.
எஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையில் அவர் மேலும் கூறியதாவது, “இதுபோன்ற கூற்றுகளை மீண்டும் மீண்டும் கூறுவது அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளது” என்றார்.
டிரம்ப் இந்த ஆண்டு இரண்டு வெவ்வேறு கொலை முயற்சிகளை எதிர்கொண்டார். ஜூலை மாதம், பென்சில்வேனியா பேரணியின் போது ஒருவர் நடத்திய துப்பாச்சூட்டில் அவரது காது பகுதியில் காயம் ஏற்பட்டது.
செப்டம்பரில், வெஸ்ட் பால்ம் பீச்சில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்த டிரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அந்த தாக்குதலிலும் டிரம்ப் உயிர் பிழைத்தார்.
யார் இந்த ஃபர்ஹாத் ஷகேரி?
வழக்கறிஞர்கள் கூற்றுபடி, ஆப்கானிஸ்தான் நாட்டவரான ஷகேரி குழந்தையாக இருந்தபோது அமெரிக்காவிற்கு வந்தார். ஒரு திருட்டு குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் இறுதியில் 2008 இல் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
“51 வயதான அவர் இரானிய அரசாங்கம் குறி வைத்திருந்த இலக்குகளை கண்காணிப்பதற்காக சிறையில் இருந்த ரிவேரா மற்றும் லோடோல்ட் போன்றவர்களை பயன்படுத்தி உள்ளார். அவர்கள் “குற்றவாளிகளின் வலையமைப்பாக” கருதப்படுகின்றனர்” என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
வழக்கறிஞர்கள் வெளியிட்ட அறிக்கையில், இரானில் மனித உரிமைகள் மற்றும் ஊழலின் நிலையை விமர்சித்த அமெரிக்க பத்திரிகையாளரின் கொலைக்கு ஈடாக ரிவேரா மற்றும் லோடோல்ட் ஆகியோருக்கு $100,000 கொடுப்பதாக ஷகேரி வாக்குறுதி அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் பத்திரிகையாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இதற்கு முன்பும் இரான் அரசின் இலக்காக அவர் இருந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க பெண் பத்திரிகையாளரை கொல்ல முயற்சி
வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், புரூக்ளினை தளமாகக் கொண்ட பெண் பத்திரிகையாளர் மசிஹ் அலினெஜாட், தன்னைக் கொல்ல முயன்றதற்காக இரண்டு பேரை எஃப்.பி.ஐ. கைது செய்ததாக பதிவிட்டுள்ளார். கொலையாளிகள் என்று கூறப்படும் நபர்கள் புரூக்ளினில் உள்ள தனது வீட்டின் முன் வந்ததாக அவர் கூறினார்.
“பேச்சு சுதந்திரத்திற்கான எனது உரிமையை நடைமுறைப்படுத்த தான் நான் அமெரிக்காவிற்கு வந்தேன். நான் இறக்க விரும்பவில்லை” என்று மசிஹ் அலினெஜாட் குறிப்பிட்டுள்ளார்.
“நான் கொடுங்கோன்மைக்கு எதிராக போராட விரும்புகிறேன், எனக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம்” என்றும் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரைத் தவிர, சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த நியூயார்க் நகரில் வசிக்கும் இரண்டு யூத அமெரிக்க தொழிலதிபர்களைக் கொல்லவும் இரானிய அரசாங்கம் முயன்றதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு ஒரு வருடம் கழித்து, 2024 அக்டோபரில் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிடுமாறு தன்னுடன் தொடர்பில் இருக்கும் இரானிய முகவர்கள் கூறியதாகவும் ஷகேரி வழக்கறிஞர்களிடம் கூறியுள்ளார்.
ஷகேரி, ரிவேரா மற்றும் லோட்ஹோல்ட் ஆகியோர் அனைவரும் பணத்திற்காக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அவர்கள் மீது பணமோசடி, கொலைக்கு சதி செய்தல் உள்ளிட்ட வழக்குகளும் உள்ளதால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.