ராஜஸ்தான் ரந்தம்பூர் - புலிகள் காப்பகம் - இந்தியா

பட மூலாதாரம், Roop Singh Meena

  • எழுதியவர், மோகர் சிங் மீனா
  • பதவி, பிபிசி ஹிந்தி, ஜெய்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் 77 புலிகள் இருந்தன. அதில் காணாமல் போன 25 புலிகளைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த விசாரணைக் குழு அமைப்பதற்கான உத்தரவு, ராஜஸ்தானில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, இந்தக் காப்பகத்தில் இருந்து 25 புலிகள் எப்போது, எப்படிக் காணாமல் போயின என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. விசாரணைக் குழு அமைக்கப்பட்ட மறுநாளே, வனத்துறையினர் பத்து புலிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

ராஜஸ்தானின் முதன்மை உயர் வனப் பாதுகாவலரும், தலைமை வனவிலங்கு காப்பாளருமான பவன் குமார் உபாத்யாய், “கடந்த ஓராண்டுக்குள் காணாமல் போன 14 புலிகளில் 10 புலிகள் நவம்பர் 5-ஆம் தேதி கண்காணிப்புக் கேமராவின் உதவி கொண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,” என்று பிபிசியிடம் கூறினார்.

“மீதமுள்ள 4 புலிகளையும் கூடிய விரைவில் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம். மேலும் ஓராண்டுக்கு முன்பு 11 புலிகள் இங்கிருந்து காணாமல் போனது குறித்தும் இந்தக் குழு விசாரணை நடத்தும்,” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விசாரணை குழு ஏன் அமைக்கப்பட்டது?

ராஜஸ்தானின் முதன்மை தலைமை வன பாதுகாவலரும், தலைமை வனவிலங்கு காப்பாளருமான பவன் குமார் உபாத்யாய் நவம்பர் 4-ஆம் தேதி அன்று இந்த விசாரணைக் குழுவை அமைத்தார்.

புலிகள் கண்காணிப்பு பற்றிய பதிவுகளில் நீண்ட நாட்களாகவே புலிகள் காணாமல் போவது குறித்த தகவல்கள் வருவதாக விசாரணைக் குழு அமைக்கும் உத்தரவில் பவன்குமார் உபாத்யாய் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தின் பகுதி இயக்குனருக்கு கோரிக்கை வைத்தும் எந்த விதமான திருப்திகரமான மாற்றமும் ஏற்படவில்லை.

கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி அன்று தலைமையகத்திற்குக் கிடைத்த கண்காணிப்புப் பதிவுகளை மேற்கோள் காட்டி, ஓராண்டுக்கு மேலாகியும், காணாமல்போன 11 புலிகள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்று உபாத்யாய் கூறினார்.

இத்துடன் கடந்த ஓராண்டுக்குள் காணாமல் போன 14 புலிகள் பற்றியும் எந்த ஒரு தகவலும் தெரியவில்லை, அதனால் தான் காணாமல் போன அனைத்து புலிகளையும் தேட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இரண்டு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும், என்றார்.

ராஜஸ்தான் ரந்தம்பூர் - புலிகள் காப்பகம் - இந்தியா

பட மூலாதாரம், Mohar Singh Meena

படக்குறிப்பு, ராஜஸ்தானின் முதன்மை தலைமை வன பாதுகாவலரும் (வனவிலங்கு), தலைமை வனவிலங்கு காப்பாளருமான பவன் குமார் உபாத்யாய் நவம்பர் 4 ஆம் தேதி அன்று இந்த விசாரணை குழுவை அமைத்தார்.

விசாரணைக் குழு எவ்வாறு செயல்படும்?

இந்தக் குழுவிற்குக் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராஜேஷ் குப்தா தலைவராக உள்ளார். மேலும், ஜெய்பூர் வன பாதுகாவலர் டி மோகன்ராஜ் மற்றும் பாரத்பூர் துணை வன பாதுகாவலர் மனாஸ் சிங் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“நாங்கள் அனைவரும் கலந்தாலோசித்து விசாரணையை எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்று முடிவு செய்து, பின்னர் களத்திற்குச் செல்வோம். காணாமல் போன புலிகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கத் தீவிர கண்காணிப்பு செய்வோம். ஏற்கனவே களத்தில் உள்ள அதிகாரிகளும் இதில் பணியாற்றுவார்கள். இந்தக் குழு இதில் மிகவும் தீவிரமாகச் செயல்பட இருக்கிறது,” என்று அவர் பிபிசி-யிடம் கூறினார்.

“அனைத்துப் பதிவேடுகளையும் ஆராய்ந்து பார்த்து, அதன் பிறகு என்னென்ன மேம்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும்,” என்றார்.

“புலி என்பது ஒரு உயிரினம், நாங்கள் அவற்றைக் கண்காணிப்போம். இதுவரை பத்து புலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு செய்யப்பட்டு, வருங்காலத்தில் எல்லா புலிகளும் கண்டுபிடிக்கப்படும் என்று உறுதியாக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

பொதுவாக மழை பெய்யும் போது புலிகளைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காது. எனவே, களத்தில் இறங்கி விசாரணை நடத்துவதே சிறந்தது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

புலிகள் காணாமல் போன உடனே அவற்றைக் கண்டுபிடிக்க ரந்தம்பூர் காப்பகத்தின் பிராந்திய இயக்குநர் மற்றும் துணை பிராந்திய இயக்குநர் ஆகியோர் என்ன முயற்சிகள் மேற்கொண்டனர் என்பது குறித்து விசாரணை குழு தகவல்களை சேகரிக்கும் என்றும் பவன் குமார் உபாத்யாய் தெரிவித்தார்.

இந்த விசாரணைக் குழு, புலிகள் கண்காணிப்பு குறித்த அனைத்துப் பதிவுகளையும் ஆய்வு செய்து, இதில் ஏதேனும் அதிகாரி அல்லது ஊழியரின் கவனக்குறைவு உள்ளதா என்பதை கண்டறியும்.

புலிகள் கண்காணிப்பு அமைப்பில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், அவற்றை நீக்குவதற்கான ஆலோசனைகளையும் விசாரணைக் குழு வழங்கும்.

 ராஜஸ்தான் ரந்தம்பூர் - புலிகள் காப்பகம் - இந்தியா

பட மூலாதாரம், Roop Singh Meena

படக்குறிப்பு, மூன்று வழிமுறைகளிலும் ஒரு புலி நீண்ட நேரம் கண்காணிப்பில் வரவில்லை என்றால், அது காணாமல் போனதாகக் கருதப்படுகிறது.

புலிகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன?

புலிகளைக் கண்காணிக்க வனத்துறை மூன்று வகையான நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த மூன்று வழிமுறைகளிலும் ஒரு புலி நீண்ட நேரம் கண்காணிப்பில் வரவில்லை என்றால், அது காணாமல் போனதாகக் கருதப்படுகிறது.

“காப்பகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும், அவற்றின் கால்தடங்கள் மூலமாகவும் புலிகளின் எண்ணிக்கையை நாங்கள் கண்காணித்து வருகிறோம்,” என்று பவன் குமார் உபாத்யாய் பிபிசி-யிடம் கூறுகிறார்.

“இது பருவமழைக் காலம், இதனால் புலிகள் அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றன, இதனால் அவற்றைக் கண்காணிக்க முடியவில்லை. காணாமல் போன 25 புலிகளில் பத்து புலிகள் கேமராக்களில் கண்காணிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள புலிகள் கூட காப்பகத்தில் எங்காவது இருக்கும். விரைவில் அவை அனைத்தும் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் உறுதி கொண்டுள்ளார்.

“மழைக் காலங்களில் கேமராக்கள் சரியாக வேலை செய்யாது, அவற்றைக் கொண்டு புலிகளைக் கண்காணிக்க முடியாது,” என்று தர்மேந்திர கண்டல் கூறுகிறார்.

 ராஜஸ்தான் ரந்தம்பூர் - புலிகள் காப்பகம் - இந்தியா

பட மூலாதாரம், Roop Singh Meena

படக்குறிப்பு, காட்டில் ஒரு புலி பதினைந்து முதல் பதினேழு ஆண்டுகள் வரை வாழ்கிறது

புலிகள் எப்படி காணாமல் போகின்றன?

தர்மேந்திர கண்டல், ‘டைகர் வாட்ச்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, கடந்த 22 ஆண்டுகளாக ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் பணிபுரிந்து வருகிறார். “10 புலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 15 புலிகளைக் காணவில்லை,” என்று அவர் புகாரளிக்கிறார்.

காட்டில் ஒரு புலி 15 முதல் 17 ஆண்டுகள் வரை வாழ்கிறது. ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் காணாமல் போயுள்ள 11 புலிகளில், பெரும்பாலானவை 20 வயதுக்கும் மேலானவை என்று அவர் குறிப்பிட்டார்.

“இவ்வளவு ஆண்டுகள் புலிகளால் வாழ முடியாது. இந்தப் புலிகளின் உடல் கிடைக்காததால், அவற்றை காணவில்லை என்றும் அறிவித்துள்ளனர்,” என்றார்.

“இதற்கு முன்பும் ரந்தம்பூரில் புலிகள் காணாமல் போயுள்ளன. ஆனால், அந்த புலிகள் உண்மையாக காணாமல் போயின. ஆனால், இப்போது புலிகளைக் கண்காணிக்க முடியாததால் அவை காணவில்லை என்று கூறப்பட்டு வருகின்றன. வனத்துறை அதிகாரிகளுக்கு இடையே மோதல் நடைபெறுகிறது,” என்று தர்மேந்திர கண்டல் வனத்துறையினரின் மீது கேள்வி எழுப்புகிறார்.

“புலிகளுக்கு இடையே சண்டை ஏற்படுவதால், சில புலிகள் இறக்கின்றன, அவற்றின் உடல்கள் கிடைக்காததால் கூட, அவை காணாமல் போனதாக அறிவிக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

“ஒரு புலி கிணற்றில் விழுந்து அல்லது நோய்வாய்ப்பட்டு குகையில் இறந்ததாக கருதினால்கூட, அதைக் கண்காணிக்க முடியாது,” என்று வனவிலங்கு நிபுணர் சதீஷ் ஷர்மா கூறுகிறார்.

“சைபீரியாவில் இருந்து பறவைகள் இங்கு வந்து, மீண்டும் சைபீரியாவிற்கே திரும்பிச் செல்கின்றன. அது வான்வழி இடம்பெயர்வு. அதேபோல், புலிகள் நிலத்தில் இடம்பெயர்வதும் நிகழ்கிறது. இதை அதிகாரிகள் புலிகள் ‘காணாமல் போனதாகக்’ கருதுகின்றனர். புலிகள் இடம்பெயர்வது ஒரு இயல்பு,” என்று அவர் குறிப்பிட்டார்.

உணவு, பாதுகாப்பு, பெண் புலிகளைத் தேடிசெல்வது போன்ற காரணங்களுக்காகப் புலிகள் இடம்பெயர்கின்றன. புலிகள் வெளிவந்தால் மட்டுமே வனத்துறை அதிகாரிகளால் கண்காணிக்க முடியும். அதற்கு நேரம் எடுக்கும்,” என்று சதீஷ் ஷர்மா கூறுகிறார்.

ராஜஸ்தான் ரந்தம்பூர் - புலிகள் காப்பகம் - இந்தியா

பட மூலாதாரம், Mohar Singh Meena

படக்குறிப்பு, இந்தியாவின் 53 புலிகள் காப்பகங்கள் 75 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் பரந்துள்ளன.

இந்தியாவில் எவ்வளவு புலிகள் உள்ளன?

கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான தரவுகளின்படி, இந்தியாவில் 53 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவை தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் கண்காணிக்கப்படுகின்றன.

இந்தியாவின் 53 புலிகள் காப்பகங்கள் 75,000 சதுர கி.மீ., நிலப்பரப்பில் பரந்துள்ளன. 2006-ஆம் ஆண்டு நடந்த முதல் கணக்கெடுப்பின் போது, இந்தியாவின் புலிகள் காப்பகங்களில் 1,411 புலிகள் இருந்தன.

கடந்த 2023-ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி, நாட்டில் 3,682 புலிகள் உள்ளன. 2018-ஆம் ஆண்டில், புலிகளின் எண்ணிக்கை 2,967-ஆக இருந்தது, இந்த எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் 24% அதிகரித்துள்ளது.

இந்தத் தரவுகளின்படி, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் மத்திய பிரதேசத்தில் (526) உள்ளன. அதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் 524 புலிகளும், உத்தராகண்டில் 442 புலிகளும், மகாராஷ்டிராவில் 312 புலிகளும் உள்ளன.

ராஜஸ்தானில் நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. அங்கு 91 புலிகள் இருக்கின்றன. ரந்தம்பூரில் அதிகபட்சமாக 77 புலிகள் உள்ளன.

ராஜஸ்தான் ரந்தம்பூர் - புலிகள் காப்பகம் - இந்தியா

பட மூலாதாரம், Roop Singh Meena

படக்குறிப்பு, ரந்தம்பூர் புலிகள் காப்பகத்திற்கு ஒட்டியுள்ள கிராமத்தில் சமீபத்தில் புலி ஒன்று இறந்தது, அதன் இறுதிச் சடங்குகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டன

புலிகளின் இறப்பு

புலிகளின் உயிரிழப்பு ராஜஸ்தான் வனத்துறையினருக்கு சவாலாக உள்ளது. சமீபத்தில், நவம்பர் 3-ஆம் தேதி அன்று ரந்தம்பூரில் ஒரு புலி இறந்தது.

ரந்தம்பூர் காப்பகத்தை ஒட்டியுள்ள உலியானா கிராமத்தில் இந்தப் புலி இறந்து கிடந்தது. அந்தப் புலியின் உடல், முகம் உட்பட பல இடங்களில் காயங்கள் இருப்பது உடற்கூராய்வில் கண்டறியப்பட்டது. மனிதர்கள் தாக்கியதால் இந்தப் புலி இறந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கு முன்பும், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புலிகள் இறந்து கிடந்துள்ளன. புலியின் குறியீட்டு எண்: 57, ஜடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி இறந்துள்ளதாகவும், புலி எண்:114 மற்றும் அதன் குட்டி ஜனவரி 31-ஆம் தேதி அன்று இறந்ததாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

புலி எண்: 19, பிப்ரவரி 9-ஆம் தேதியும், புலி எண்: 104, மே 10-ஆம் தேதியும், புலி எண்: 79, செப்டம்பர் மாதமும், புலி எண்: 69, டிசம்பர் 11-ஆம் தேதியும் இறந்துள்ளன.

கடந்த 2024-ஆம் ஆண்டில், புலி எண்:99, பிப்ரவரி 3-ஆம் தேதியும், புலி எண்: 60 மற்றும் அதன் குட்டி, பிப்ரவரி 4-ஆம் தேதி அன்றும், புலி எண்:58, ஜூலை 7-ஆம் தேதியும் இறந்துள்ளன.

“புலிகள் இறப்பதற்கு விஷம் வைப்பதும் ஒரு காரணம். ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 வீட்டு விலங்குகளைப் புலிகள் சாப்பிடுகின்றன. இந்த விலங்குகளுக்கான இழப்பீடும் மிகக் குறைவாகவே இருக்கிறது,” என்று தர்மேந்திர கண்டல் கூறுகிறார்.

“கிராம மக்கள் புலியைக் கொன்று புதைத்த வழக்குகள் பலமுறை நடந்துள்ளன. இது யாருக்கும் தெரியவருவதில்லை. இந்தப் புலிகளும் காணாமல் போனதாகவே கருதப்படுகின்றன,” என்று அவர் கூறுகிறார்.

ராஜஸ்தான் ரந்தம்பூர் - புலிகள் காப்பகம் - இந்தியா

படக்குறிப்பு, “புலிகள் காணாமல் போவது இயற்கையான செயல்” என்று ராஜஸ்தான் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

ராஜஸ்தானில் உள்ள ராம்கர் புலிகள் காப்பகத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி அன்று RVT-2 என்னும் புலி ஒன்று கொல்லப்பட்டது. பல நாட்கள் கழித்து, இந்தப் புலியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.

“புலிகள் காணாமல் போவது இயற்கையான செயல்,” என்று ராஜஸ்தான் வனத்துறையின் தலைமையகமான ‘ஆரண்ய பவனில்’ உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.

“பல சமயங்களில் குகைகளில் வாழும் புலிகள் தங்களுக்குள் நடைபெறும் சண்டைகளில் உயிரிழக்கின்றன. பல சமயங்களில் அவற்றின் எச்சங்கள் கிடைக்காமல் போவதாலோ அல்லது காட்டிற்குள் வெகுதூரம் செல்வதாலோ அவை கண்டுபிடிக்கப்படுவதில்லை,” என்று அவர் கூறுகிறார்.

“இந்த வழக்கில் திடீரென்று விசாரணைக் குழு அமைத்ததன் பின்னணியில் அதிகாரிகள் இடையே உள்ள மோதல்கள்தான் காரணம்,” என்கிறார்.

“இதனால்தான் காணாமல் போன 25 புலிகளைக் கண்டுபிடிக்க நவம்பர் 4-ஆம் தேதி அன்று விசாரணை குழு அமைக்கப்பட்ட அடுத்த நாளே 10 புலிகள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்கிறார்.

காணாமல் போன 25 புலிகள் குறித்து விசாரணைக் குழு மூலம் புலி இறந்ததை விசாரிக்கும் வனத்துறை அதிகாரிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி நடப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.