பாந்தவ்கர் தேசிய பூங்கா - யானை - இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாந்தவ்கர் தேசிய பூங்காவில் உள்ள ஒரு யானை
  • எழுதியவர், ஷூரையா நியாசி
  • பதவி, பிபிசி ஹிந்தி, போபால்

இந்தியாவில் உள்ள ஒரு தேசியப் பூங்காவில் மூன்று நாட்களுக்குள் 10 யானைகள் உயிரிழந்தது இயற்கைப் பாதுகாவலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பாந்தவ்கர் தேசியப் பூங்காவில் 13 யானைகள் இருந்தன. அவற்றில் 10 யானைகள் அக்டோபர் 29 முதல் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் இறந்துள்ளன.

பூஞ்சையால் பாதிக்கப்பட்டச் சிறுதானியப் பயிர்களை உண்டதால் அந்த யானைகள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று முதற்கட்ட நச்சுயியல் அறிக்கை (Toxicology Report) கூறுகிறது.

யானைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது, விமர்சனங்கள் குவிந்தன. இது அம்மாநில அரசாங்கத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

யானைகள் என்ன உண்டன?

“நச்சுயியல் அறிக்கையின்படி அந்த யானைகள் அழுகிய கோடோ [வரகு அரிசி], தாவரங்கள் மற்றும் தானியங்களை அதிக அளவில் உட்கொண்டுள்ளன,” என்று யானைகளின் இறப்புகள் குறித்து விசாரணை நடத்திவரும் மூத்த வனத்துறை அதிகாரி எல்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

இந்த யானைகள் பயிர்களை நாசம் செய்வதால், விவசாயிகள் அவற்றின் உணவில் விஷம் கலந்திருக்கலாம் என முதலில் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின. ஆனால், வேண்டுமென்றே விஷம் வைத்து யானைகளைக் கொன்றதாக எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இறந்த யானைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் பூஞ்சைகள் உருவாக்கும் சைக்ளோபியாசோனிக் (cyclopiazonic) அமிலம் எனப்படும் ஒரு நச்சுப் பொருள் கண்டறியப்பட்டதாக நச்சுயியல் அறிக்கை தெரிவிக்கிறது.

பொதுவாக, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் சில மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வறண்ட நிலத்தில் விளையும் ‘கோடோ’ சிறுதானியங்களையே இந்த யானைகள் அதிக அளவில் சாப்பிட்டதாகக் கருதப்பட்டது.

இந்தியாவில் விளையும் கோடோ சிறுதானியத்தில் 35% மத்திய பிரதேசத்தில் மட்டுமே பயிரிடப்படுகிறது.

இந்தப் பயிர் மிகவும் வேகமாக வளரும், வறட்சியைத் தாங்கும், இதனை நீண்ட காலம் சேமித்து வைத்திருக்க முடியும். இந்தப் பயிரைச் செரிமானம் செய்வது மிகவும் எளிது, இதில் பல ஆரோக்கியப் பலன்களும் இருக்கின்றன.

சைக்ளோபியாசோனிக் அமிலத்தை உருவாக்கும் ஒரு வகையான பூஞ்சை இந்தப் பயிர்வகையைத் தாக்குவதால், இந்தச் சிறுதானியத்தை உண்டால் உடலில் நச்சுத்தன்மை ஏற்படலாம் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

பாந்தவ்கர் தேசிய பூங்கா - யானை - இந்தியா

பட மூலாதாரம், S Shukla

படக்குறிப்பு, யானைகள் இறந்ததால் அதிகாரிகள் தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள கிராமங்களில் சில சிறுதானிய பயிர்களை அழித்தனர்.

இதற்குமுன் தமிழகத்தில் இறந்த 14 யானைகள்

இந்தியச் சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வு, ‘பல பயிர்கள் சைக்ளோபியாசோனிக் அமிலத்தினால் தக்கப்பட்டாலும், சிறுதானியப் பயிர்களுக்கே அதிக அளவு பாதிப்புகள் ஏற்படுவதாகவும்’, ‘இதற்குச் சரியான விஞ்ஞான மேலாண்மை இல்லாததே காரணம்’ என்றும், ‘அறுவடை செய்யப்பட்ட சிறுதானியப் பயிரை விரைவாகக் காயவைப்பது போன்ற சில நடைமுறைகள் பயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்’ என்று கூறுகிறது.

இந்தப் பயிரை உட்கொண்ட பின்னர் சில விலங்குகள் இறந்ததாக பதிவாகியுள்ளது. இருப்பினும் இது அடிக்கடி நிகழ்வதில்லை.

1933-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் காடுகளுக்கு அருகே 14 யானைகள் வரகு அரிசி சாப்பிட்டு இறந்துள்ளன என்று சூழலியலாளர் ராமன் சுகுமார் மற்றும் பூஞ்சை நிபுணர் (mycologist) டி.எஸ்.சூர்யநாராயணன் ஆகியோர் இணைந்து ‘டவுன் டு எர்த்’ என்ற இதழில் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய யானைகள் மற்றும் மனித-வனவிலங்கு மோதல் குறித்து பணியாற்றியுள்ள ராமன் சுகுமார், யானைகள் உணவு தேடி வயல்களுக்குள் நுழையும் போது அடிக்கடி சிறுதானியப் பயிர்களை உண்கின்றன என்று பிபிசி-யிடம் கூறினார்.

யானைகளுக்கு நல்ல வாசனை உணர்வு உள்ளது. ஆனால் பூஞ்சை நஞ்சு மணமற்றது, சுவையற்றது.

“விவாயாசிகள் வந்து விரட்டுவதற்குள், யானைகள் விரைவாக முடிந்தவரை சாப்பிட முயற்சிக்கின்றன என்று நான் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.

பூஞ்சைத் தொற்று ஏற்படுவது ஏன்?

சிறுதானியப் பயிர்களில் பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதில் வானிலைக்கும் பங்கு உண்டு என்று ராமன் சுகுமார் கூறுகிறார். அந்த யானைகள் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு, இப்பகுதியில் கனமழை பெய்தது, இது பூஞ்சைத் தொற்றுக்கு உகந்த ஈரப்பதமான சூழலை உருவாக்கியது.

சிறுதானியப் பயிர்கள் தான் இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அதிகாரிகள் தேசியப் பூங்காவிற்கு அருகிலுள்ள கிராமங்களில் சில பயிர்களை அழித்தனர்.

நச்சுயியல் அறிக்கை, பூஞ்சையால் பாதிக்கப்பட்டச் சிறுதானியப் பயிர்களின் மாதிரிகளை ஆய்வு செய்து, அவற்றை அழிக்கவும், பயிரிடும் நிலங்களுக்குள் உள்ளூர் மற்றும் காட்டு விலங்குகள் நுழைவதைத் தடுக்கவும் பரிந்துரைக்கிறது.

ஆனால், பல ஆண்டுகளாக எந்தவித பாதிப்பும் இன்றி சிறுதானியப் பயிர்களைச் சாகுபடி செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள்.

கோடோ சிறுதானியப் பயிர்களில் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு அதில் நஞ்சு உற்பத்தியாவது மிகவும் அரிதானது என்று ராமன் சுகுமார் கூறுகிறார். “இந்த நேரம் யானைகளுக்கு துரதிர்ஷ்டவசமாக அமைந்துவிட்டது,” என்று அவர் கூறுகிறார்.