டிரம்ப் – புதின் நட்பால் இந்தியாவுக்கு என்ன நன்மை? ஓர் அலசல்
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி நிருபர்
-
‘அமெரிக்கா தும்மினால் உலகிற்கே சளி பிடிக்கும்’
சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு இருக்கும் செல்வாக்கை எடுத்துக்கூற மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரி அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
அப்படியிருக்க, அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு சக்தி வாய்ந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போவது யார், அவருடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை உலகமே உற்று நோக்கியது.
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள நிலையில், அவரது வெற்றி என்பது ‘புதிய வாய்ப்புகள் மற்றும் கவலைகள்’ ஆகிய இரண்டின் பிரதிபலிப்பாகவே உலகளவில் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், ‘டிரம்பின் வருகையால், பல உலகத் தலைவர்கள் வெற்றியாளர்கள் போல உணர்வார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
டிரம்பின் வருகையால், அவ்வாறு உணரக்கூடியவர்கள் யார் என்பதையும் ப்ளூம்பெர்க் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவான், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் மற்றும் அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மில்லா ஆகியோரே அந்தத் தலைவர்கள்.
டொனால்ட் டிரம்பிற்கு ரஷ்ய அதிபர் புதின் வியாழக்கிழமை அன்று வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க தேர்தல்கள் குறித்த புதினின் முதல் கருத்து இதுவாகும். கடந்த ஜூலை மாதம், பென்சில்வேனியா தேர்தல் பிரசாரத்தில் டிரம்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டு, டிரம்பின் தைரியத்தை புதின் பாராட்டினார்.
டிரம்ப் பற்றி புதின் கூறியது என்ன?
ரஷ்யாவின் சோச்சி நகரின் ஒரு ரிசார்ட்டில், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய புதின், “டிரம்ப் தாக்கப்பட்ட போது அவரது நடத்தை என்னை மிகவும் கவர்ந்தது. அந்த இடத்தில் டிரம்ப் ஒரு தைரியமான நபராக தோன்றினார். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு சரியான பாதையில் பயணித்தார் டிரம்ப். ரஷ்யாவுடனான உறவை மீட்டெடுப்பது மற்றும் யுக்ரேன் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி டிரம்ப் பேச விரும்புகிறார் என்றால், அதற்கு செவி சாய்ப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.
டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்புவது புதினுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு என்று கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் கூட்டணியில் உள்ள விரிசலை, யுக்ரேன் விஷயத்தில் தனக்கு சாதகமாக புதின் பயன்படுத்திக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
டிரம்ப், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பை அதாவது நேட்டோவை (NATO) தாக்கிப் பேசி வருகிறார். ‘நேட்டோ’, அமெரிக்காவிற்கு ஒரு பொருளாதாரச் சுமை என்று டிரம்ப் கருதுகிறார்.
மறுபுறம், புதினும் நேட்டோ மீது எரிச்சல் கொண்டுள்ளார். யுக்ரேன் நேட்டோவில் இணையத் தயாராகி வந்தது தான் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு காரணம். ரஷ்யாவின் அண்டை நாடுகளில் நேட்டோ விரிவாக்கத்தை புதின் விரும்பவில்லை.
டிரம்ப் ‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ (America First policy) என்ற கொள்கையை ஆதரிக்கிறார். அத்தகைய சூழ்நிலையில் அவர் ரஷ்யாவுக்கு எதிரான யுக்ரேனின் போருக்கு நிதியளிப்பாரா என்பதில் சந்தேகம் உள்ளது.
இருப்பினும், டிரம்பின் செயல்பாடுகளை கணிக்க முடியாத தன்மை குறித்து பலர் கவலைப்படுகிறார்கள்.
ப்ளூம்பெர்க் கட்டுரையில், “ஒரு சமரச ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு புதினைக் கட்டாயப்படுத்த, ஒரு குறுகிய காலத்திற்கு இந்தப் போரை டிரம்ப் நீட்டிக்கக் கூடும் என்று ரஷ்யாவில் உள்ள பலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் அணுசக்தி மோதலுக்கான வாய்ப்பு இதனால் அதிகரிக்கும்.” என்று கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் – புதின் நட்பால் இந்தியாவுக்கு என்ன நன்மை?
டிரம்ப்-புதின் இடையேயான உறவு மேம்பட்டால் அது இந்தியாவுக்கும் நல்லது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்புறவால் அமெரிக்கா தொடர்ந்து எரிச்சலடைகிறது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கக் கூடாது என்றும், ரஷ்யாவுக்கு எதிரான மேற்குலகின் பொருளாதாரத் தடைகளில் இந்தியாவும் இணைய வேண்டும் என்றும் பைடன் நிர்வாகத்தின் அழுத்தம் இருந்தது.
ரஷ்யாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது.
ஆனால், டிரம்ப் வருகைக்கு பிறகு, இத்தகைய அழுத்தம் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.
ரஷ்யாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதரும், இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளருமான கன்வால் சிபல், புதின் குறித்த விஷயத்தில் பைடனைப் போலவே டிரம்ப் சிந்திக்க மாட்டார் என்று நம்புகிறார்.
பிபிசியிடம் பேசிய கன்வால் சிபல், “ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து, பைடன் நிர்வாகத்திடமிருந்து வந்த அழுத்தத்தைப் போல டிரம்ப் தரப்பிலிருந்தும் வராது என்று நான் நம்புகிறேன். ஆனால், டிரம்ப் வந்த பிறகும் ரஷ்யா மீதான மேற்குலகின் பொருளாதாரத் தடைகள் எளிதில் நீங்காது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவிற்கு பணப் பரிமாற்றங்களில் சிரமம் இருக்கும்.” என்று கூறினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் ‘ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வுகள் மையத்தின்’ பேராசிரியர் சஞ்சய் குமார் பாண்டே, ‘ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில், டிரம்பின் வருகையை ஒரு நேர்மறையான விஷயமாகவே பார்க்க முடியும்’ என்று நம்புகிறார்.
பேராசிரியர் பாண்டே கூறுகையில், “ஆனால் இதை வேறு மாதிரியாக யோசித்துப் பாருங்கள். டிரம்ப், புதினிடம் கடுமையாக நடந்துகொண்டு, அந்தத் தடைகளை இந்தியாவும் ஏற்க வேண்டும் என்று முடிவு செய்தால் என்ன நடக்கும்? அத்தகைய சூழ்நிலையில் அது இந்தியாவுக்கு சற்று சங்கடமாக இருக்கும் என்று நினைக்கிறேன். டிரம்ப் நிலையற்றவர் மற்றும் அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், சாத்தியங்கள் மற்றும் அச்சங்கள் இரண்டும் உள்ளன.” என்றார்.
யுக்ரேன்- ரஷ்யா போருக்குப் பிறகு, ரஷ்யாவுடனான உறவை மட்டுப்படுத்துமாறு இந்தியாவுக்கு மேற்குலகில் இருந்து அழுத்தம் அதிகரித்துள்ளது. டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டு வருவதைப் பற்றி பேசுகிறார். இது நடந்தால், ரஷ்யா தொடர்பாக இந்தியா மீதான அமெரிக்காவின் அழுத்தம் குறையும்.
டிரம்பால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா?
யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை டிரம்ப் நினைத்தால் முடிவுக்கு கொண்டு வர முடியுமா? என்பது தான் முக்கியமான கேள்வி.
இதுகுறித்து கன்வால் சிபல் கூறும்போது, “தான் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என்று டிரம்ப் கூறியிருந்தார். அவர் சொல்வது போல நடத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போது டிரம்ப், புதினை எப்படி சமாதானப்படுத்தி போரை நிறுத்துவார்? டிரம்ப் இதுகுறித்து வேறு ஏதும் தெரிவிக்கவில்லை. பிப்ரவரி 2022 க்குப் பிறகு, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட யுக்ரேனின் பகுதியை மீண்டும் யுக்ரேனுக்கு வழங்கக் கூடாது என்று புதின் விரும்புகிறார்.” என்றார்.
“இது தவிர, ‘யுக்ரேன் ஒருபோதும் நேட்டோவில் சேராது’ என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் புதின் விரும்புகிறார். யுக்ரேனின் ராணுவ வலிமை மட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் நேட்டோவை, ரஷ்யாவின் அண்டை நாடுகள் வரையிலும் விரிவுபடுத்தக் கூடாது என்று அவர் கூறுகிறாரே. இந்தக் கோரிக்கைகளை டிரம்ப் ஏற்பார் என்று நான் நினைக்கவில்லை.” என்றும் கூறுகிறார் கன்வால் சிபல்.
தொடர்ந்து பேசிய அவர், “இது டிரம்ப் ஒப்புக்கொள்வது மட்டுமல்ல, நேட்டோவின் விதிகள் அதன் கதவுகள் புதிய உறுப்பினர்களுக்கு திறந்திருப்பதாகக் கூறுகிறது. டிரம்ப் விரும்புவதால் மட்டுமே நேட்டோ விதிகள் மாறாது. யுக்ரேன் அரசியலமைப்பில் என்ன எழுதப்பட வேண்டும் என்பதை டிரம்ப் முடிவு செய்ய முடியாது. இதற்கு குடியரசு கட்சியினர் தயாராக இருக்க மாட்டார்கள். அமெரிக்கா, தனது நாடாளுமன்றத்தின் மூலம் யுக்ரேனுக்கு பில்லியன்கணக்கான டாலர்களை வழங்கியுள்ளது. அது குடியரசுக் கட்சியாலும் ஆதரிக்கப்பட்டது.” என்று கூறுகிறார்.
பேராசிரியர் சஞ்சய் பாண்டேவும் இப்போது இந்த விவகாரம் மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டது என நம்புகிறார்.
பேராசிரியர் பாண்டே கூறுகையில், “பிப்ரவரி 2022இல் தாக்குதலுக்கு முன், யுக்ரேனை நேட்டோவிலிருந்து விலக்கி வைக்க வேண்டும், நேட்டோ ரஷ்யாவின் அண்டை நாடுகள் வரை விரிவடைந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் ரஷ்யா குறியாக இருந்தது. ஆனால் பிப்ரவரி 2022க்குப் பிறகு ரஷ்யா கைப்பற்றிய யுக்ரேனிய பகுதிகளை இப்போது விட்டுவிட வாய்ப்பில்லை.” என்றார்.
நேட்டோ உறுப்பு நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக ஒதுக்காவிட்டால் (ஒப்பந்தக் கடமைகள் இருந்த போதிலும்), அவற்றை நேட்டோ பாதுகாக்காது என்பதை டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது தெளிவுபடுத்தினார். ஆனால் இந்த ஆண்டு நேட்டோ உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் மட்டுமே இந்த இரண்டு சதவீத வரம்பை எட்ட முடியும்.
ஐரோப்பா குறித்த டிரம்ப் மற்றும் புதினின் பார்வை
ஜூலை 2018-இல் சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியில், “ரஷ்ய அதிபர் புதினுடன் ஒப்பந்தம் செய்வதற்கான எனது முயற்சிகள் தோல்வியுற்றால், நான் தான் புதினின் மிகப்பெரிய எதிரியாக இருப்பேன்” என்று டிரம்ப் கூறினார்.
“நான் அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பேன், ஆனால் அது தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். உண்மையில் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ரஷ்யாவிடம் வேறு எந்த அமெரிக்க அதிபரும் என்னைப் போல் கடுமையாக நடந்து கொண்டதில்லை. ஆனால் அதிபர் புதினுடனும் ரஷ்யாவுடனும் நட்பு பாராட்டுவது நேர்மறையானது தான், எதிர்மறையானது அல்ல என்று நான் நம்புகிறேன்.” என டிரம்ப் கூறியிருந்தார்.
டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் (2017-2021), முக்கிய ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகியவை அமைதியற்ற நிலையில் காணப்பட்டன. அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவைப் பொருத்தவரை கூட, டிரம்பின் நிலைப்பாடு மிகவும் கடுமையாகவே இருந்தது. அமெரிக்காவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் எந்த ஒப்பந்தத்திலும் அமெரிக்கா இருப்பதை டிரம்ப் விரும்பவில்லை.
புதினுக்கும் ஐரோப்பா மீது மிகவும் கண்டிப்பான அணுகுமுறையே உள்ளது.
கடந்த வியாழன் அன்று, சோச்சி நகரத்தில் ஐரோப்பாவைப் பற்றி பேசிய புதின், “நான் எனது சகாக்கள் மற்றும் நிபுணர்களிடம் ‘இப்போது ஐரோப்பாவில் என்ன இல்லை?’ என்று கேட்டேன். ‘அவர்களிடம் மூளை இல்லை’ என்பது தான் பதிலாகக் கிடைத்தது” என்று கூறினார்.
ஜார்ஜ் ராபர்ட்சன், பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் 1999- 2003-க்கு இடையில் நேட்டோவின் பொதுச் செயலாளராக இருந்தவர். கடந்த ஆண்டு நவம்பரில், ‘முதலில் நேட்டோவில் ரஷ்யாவை சேர்க்க புதின் விரும்பியதாகவும், ஆனால் அதில் சேரும் வழக்கமான நடைமுறையை அவர் பின்பற்ற விரும்பவில்லை’ என்றும் ஜார்ஜ் ராபர்ட்சன் கூறியிருந்தார்.
“ஒரு வளமான, நிலையான மற்றும் செழிப்பான மேற்குலகின் ஒரு பகுதியாக இருக்க புதின் விரும்பினார்.” என்று ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.
புதின் ரஷ்யாவின் அதிபரானது 2000ஆம் ஆண்டில். புதினுடனான தனது முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த ஜார்ஜ் ராபர்ட்சன், “புதின் என்னிடம், ‘நேட்டோவில் சேர எங்களை எப்போது அழைக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘நாங்கள் நேட்டோவில் சேர யாரையும் அழைப்பதில்லை. இதில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்’ என்று பதிலளித்தேன். அதற்கு புதின், ‘நான் அந்தக் கூட்டத்தை (நேட்டோவில் இணைய விண்ணப்பிக்கும் நாடுகள்) சேர்ந்தவன் அல்ல’ என பதில் அளித்தார்” என்று கூறினார்.
இதற்குப் பிறகு, நேட்டோவின் விரிவாக்கம் குறித்த புதினின் கோபம் அதிகரித்தது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில், ருமேனியா, பல்கேரியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, லாட்வியா, எஸ்டோனியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் 2004-இல் நேட்டோவில் இணைந்தன. குரோஷியா மற்றும் அல்பேனியா 2009-இல் இணைந்தன. ஜார்ஜியா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளும் 2008-ஆம் ஆண்டில் நேட்டோவில் இணைந்திருக்க வேண்டும். ரஷ்யாவின் கடுமையான எதிர்வினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது இன்னும் சாத்தியமாகவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.