சாம்ஸன் சாதனை சதம்: தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே புரட்டி எடுத்த இந்திய இளம்படை
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சஞ்சு சாம்ஸனின் தொடர்ச்சியான 2வது டி20 சதம், சுழற்பந்துவீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால், சொந்த மண்ணிலேயே தென் ஆப்பிரிக்க அணியை முதல் டி20 ஆட்டத்தில் அபாரமாக வென்றது சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி.
டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.
203 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டியில் 4வது அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணி பதிவு செய்தது.
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரு புறம் சீனியர் வீரர்கள் அடங்கிய இந்திய அணி டெஸ்ட் போட்டியில் உள்நாட்டில் நியூசிலாந்து அணியிடம் ஒயிட்வாஷ் ஆகி, மோசமான வரலாற்று தோல்வியைப் பதிவு செய்த நிலையில், இளம் இந்திய அணி அதிரடி வெற்றியைப் பெற்றுள்ளது.
சாம்ஸின் பேட்டில் பறந்த சிக்ஸர்கள், பவுண்டரிகள்
அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அந்த நாட்டு மண்ணில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய பேட்டர் என பெயரெடுத்த சஞ்சு சாம்ஸன்(107) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த பின், தொடர்ச்சியாக சாம்ஸன் அடித்த 2வது டி20 சதமாகும். சாம்ஸன் தொடர்ச்சியாக அடித்த 2வது சதமாகும்.
27 பந்துகளில் அரைசதத்தை எட்டிய சாம்ஸன், 47 பந்துகளில் சதத்தை அடைந்தார். சாம்ஸன் கணக்கில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். பவுண்டரி, சிக்ஸர் வகையில் மட்டுமே சாம்ஸன் 88 ரன்களை சாம்ஸன் சேர்த்தார்.
இந்திய அணி 202 ரன்களைச் சேர்த்ததில் பெரும்பாலும் சிக்ஸர், பவுண்டரிகள் முக்கியக் காரணம். இந்திய அணித் தரப்பில் மட்டும் நேற்றைய ஆட்டத்தில் 13 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. இதில் 10 சிக்ஸர்களை சாம்ஸன் மட்டும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்களான மார்க்ரம், கேசவ் மகராஜ், பீட்டர் ஆகியோரின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சாம்ஸன் 27 பந்துகளில் 58 ரன்களைச் சேர்த்தார். அது மட்டுமல்லாமல் கேப்டன் சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 37 பந்துகளில் 66 ரன்கள், திலக் வர்மாவுடன் இணைந்து 34 பந்துகளில் 77 ரன்கள் என முக்கிய பார்ட்னர்ஷிப்பை சாம்ஸன் அமைத்துக் கொடுத்து, ரன் சேர்ப்புக்கு உதவினார்.
ஒட்டுமொத்தத்தில் சாம்ஸனின் அபாரமான ஆட்டம், இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா இதுவரை பெரிய அளவில் எந்த போட்டியிலும் ஸ்கோர் செய்யவில்லை.
இந்திய அணியில் சாம்ஸன் தவிர்த்து கேப்டன் சூர்யகுமார்(21), திலக் வர்மா(33) ஆகியோரும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தனர். திலக் வர்மா களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முயன்றார். அதிரடியாகவே பேட் செய்த திலக் வர்மா 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை விளாசி 183 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார்.
கடைசியில் சொதப்பிய பேட்டர்கள்
உண்மையில் இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வேண்டும்.சாம்ஸன் ஆட்டமிழந்தபோது 16-வது ஓவரில் இந்திய 175 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால், 250 ரன்களை இந்திய அணி எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அடுத்த 28 ரன்களுக்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஸ்கோர் குறைவுக்கு காரணமாகும். ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர்படேல், ரவி பிஸ்னோய் விரைவாக ஆட்டமிழந்தது பின்னடைவாக அமைந்துவிட்டது. கடைசி 20 பந்துகளில் 28 ரன்களை மட்டுமே சேர்த்து 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.
வருண், பிஸ்னோய் கலக்கல்
பேட்டிங்கிற்கு சாதகமான கிங்ஸ்மெட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க பேட்டர்களும் பதிலடி கொடுப்பார்கள், வலுவான நடுவரிசை பேட்டிங் இருக்கிறது என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் சொந்த மண்ணிலேயே இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கு முன் சொதப்பலாக பேட் செய்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஸ்னோய் இருவரும் 8 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆவேஷ்கான் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினார்.
அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே மார்க்ரம் அதிரடியாக அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி மிரட்டிய நிலையில் அடுத்த பந்தை ஸ்விங் செய்து மார்க்ரமை வெளியேற்றி நம்பிக்கையளித்தார்.
அதன்பின், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்(11), விக்கெட்டை ஆவேஷ்கான் வீழ்த்தி வழி ஏற்படுத்திக்கொடுத்தார். அதன்பின் வருண் சக்ரவர்த்தி, பிஸ்னோய், அக்ஸர் படேல் ஆகியோர் சேர்ந்து தென் ஆப்பிரிக்க பேட்டர்களை பிழிந்து எடுத்தனர்.
குறிப்பாக வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே ஆபத்தான பேட்டர் ரெக்கெல்டான்(21) விக்கெட்டை வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவின் முதுகெலும்பை உடைத்தார். அதன்பின் ஆபத்தான பேட்டர்கள் கிளாசன்(25) டேவிட் மில்லர்(18) விக்கெட்டையும் வருண் சாய்த்து தென் ஆப்பிரிக்காவின் சுவாசத்தை பாதியாகக் குறைத்தார்.
கடைசி வரிசை பேட்டர்களான குர்கர்(1), யான்சென்(12), சமிலேன்(6) ஆகியோரின் விக்கெட்டுகளை பிஸ்னோய் வீழ்த்தவே தென் ஆப்பிரிக்கா தோல்வியில் விழுந்தது. கடைசி நேரத்தில் கோட்ஸி அதிரடியாக 3 சிக்ஸர்களை அடித்து 23 ரன்கள் சேர்த்தார்,.
பவர்பளேயில் 3 விக்கெட்
பவர்ப்ளே ஓவருக்குள் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 100 ரன்களை எட்டுவதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது. 79 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா அடுத்த 6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என தள்ளப்பட்டது.
தென் ஆப்பிரிக்க அணியில் எந்த பேட்டரும் 30 ரன்களைக் கூட எட்டவில்லை. கிளாசன் சேர்த்த 25 ரன்கள்தான் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். வலுவான நடுவரிசை, டாப்ஆர்டர் பேட்டர்ள் வைத்திருந்தும் தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது வியப்பாக இருந்தது.
இந்திய பந்துவீச்சாளர்கள் செய்த தவறுகளைக் கூட தங்களுக்கு சாதகமாக மாற்றி ரன் சேர்க்ககூட தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் முயலாதது வேதனைக்குரியதாகும். ஆவேஷ்கான் வீசிய பல பந்துகள் ஓவர் பிட்சில் வந்தபோதும் அதை சிக்ஸர்களாக மாற்ற முடியாமல் தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் வீணடித்தனர்.
தொடரும் மார்க்ரம் மோசமான ஃபார்ம்
தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் மார்க்ரமின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 25 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். 7-வது முறையாக மார்க்ரம் தொடர்ந்து ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பெரிய சுமையாக இருந்து வருகிறது. அர்ஷ்தீப் பந்துவீச்சில் அதிரடியாக 2 பவுண்டரிகளுடன் தொடங்கிய மார்க்ரம், அடுத்த பந்தில் மோசமான ஷாட் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார்.
தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் ரெக்கெல்டான், ஸ்டெப்ஸ் ஆகியோரும் பவர்ப்ளே ஓவருக்குள் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஐபிஎல் டி20 தொடரில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் நடுவரிசை, கீழ்வரிசையில் இறங்கி ஃபினிஷர் ரோலில் பேட் செய்யக்கூடியவர். ஆனால், இந்த ஆட்டத்தில் அவரை 3வது வீரராகக் களமிறக்கி, தென் ஆப்பிரிக்கா பரிசோதித்தது தோல்வியில் முடிந்தது. டி20 போட்டிகளில் அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கும் கிளாசன், மில்லரும் விரைவாக விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரிக்காவை தோல்வியை உறுதி செய்தது.
தென் ஆப்ரிக்காவின் பலவீனமான பந்துவீச்சு
தென் ஆப்பிரிக்க அணி என்றாலே வலுவான பந்துவீச்சு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். ஆனால், அது நேற்றைய ஆட்டத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 7 பந்துவீச்சாளர்களை கேப்டன் மார்க்ரம் பயன்படுத்தியும் இந்திய ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காயத்திலிருந்து குணமடைந்து வந்த கோட்ஸி 3 விக்கெட்டுகளை சாய்த்தாலும், ஓவருக்கு 9 ரன்களை வாரி வழங்கினார். யான்சென் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசினார். மற்ற வகையில் சுழற்பந்துவீச்சும், வேகப்பந்துவீச்சும் பலவீனமாகவே காட்சி அளித்தது.
வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சாம்ஸன்
ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு எடுப்பதால் கிடைத்த தொடக்க வீரர் இடத்தை சஞ்சு சாம்ஸன் நன்றாக பயன்படுத்தி வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் சதம் அடித்த சாம்ஸன், தொடர்ந்து அந்நிய மண்ணிலும் சதம் அடித்தார். இலங்கைக்கு எதிரான தொடரிலும் 2 போட்டிகளில் சொதப்பினாலும், 3வது ஆட்டத்திலும் சாம்ஸன் அற்புதமாக பேட் செய்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சாம்ஸன் கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார்.
அணியில் சாம்ஸனுக்கு கிடைத்துள்ள சுதந்திரம், ஷாட்களை தேர்ந்தெடுத்த ஆடுவதில் கட்டுபாடின்மை, விருப்பமான இடத்தில் பேட் செய்வது போன்றவை சாம்ஸனின் ஆட்டத்தை மெருகூட்டியுள்ளன.
கேப்டன்ஷிப் இவ்வளவு எளிமையா?
வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் கூறுகையில் “ நாங்கள் எப்போதுமே ஒரே மாதிரியாகவே விளையாடுகிறோம், எங்களின் பிராண்ட் கிரிக்கெட்டை மாற்றவில்லை. சாம்ஸனின் ஆட்டம் மகிழ்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. சாம்ஸன் எப்போதுமே தன்னுடைய சொந்த ஸ்கோரைவிட, அணியை முன்னிலைப்படுத்தி அணிக்காக விளையாடக்கூடியவர். அவர் 90 ரன்களில் இருந்தாலும் சாம்ஸன் வாய்ப்புக் கிடைத்தால் சிக்ஸர் அடிப்பாரே தவிர சதம் அடிக்க முயலமாட்டார். மற்றவர்களிடம்இருந்து தனித்து சாம்ஸன் தெரிய இதுவே காரணம்.
முக்கிய கட்டத்தில் கிளாசன், மில்லர் விக்கெட்டுகளை வீழ்த்தியது திருப்புமுனை. வரும், பிஸ்னோய் பந்துவீச்சு அற்புதம். கேப்டன்சி செய்வதை என் அணியினர் எளிமையாக்கி வருகிறார்கள். அச்சமில்லாத மனநிலை, ஒருங்கிணைந்த ஆட்டம், ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சியுடன் களத்திலும், வெளியிலும் இருப்பது என் பணியை மேலும் சுலபமாக்குகிறது. நாங்கள் கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் கவலையில்லை, அச்சமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம். இது டி20 கிரிக்கெட். விக்கெட்டை இழந்தாலும் 17 ஓவர்களுக்குள் 200 ரன்களை எட்டலாம்” எனத் தெரிவித்தார்.