இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில கனடா செல்வதில் புதிய சிக்கல்
வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவும் வகையில் கனடாவில் நடைமுறையில் இருந்த ‘ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (SDS)’ என்ற திட்டத்தை கைவிடுவதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. நைஜீரிய மாணவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘நைஜீரியா ஸ்டூடெண்ட் எக்ஸ்பிரஸ்’ (NSE) என்ற திட்டமும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் அந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வெளி நாட்டு மாணவர்களுக்கான படிப்பு அனுமதி விண்ணப்பங்களை சரிபார்க்கும் செயல்முறையை நியாயமாகவும், சமமாகவும் வைத்திருக்க இந்த முடிவு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SDS என்ற திட்டம் 2018-ஆம் ஆண்டு, கனடாவில் கல்லூரி படிப்பை மேற்கொள்ள விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்ய உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிரேசில், ஆன்டிகுவா மற்றும் பார்படாஸ், கொலம்பியா, கோஸ்டாரிகா, மொராக்கோ, பெரு, பிலிப்பைன்ஸ், செனேகல், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் வியட்நாம் ஆகிய நாட்டு மாணவர்களுக்காக SDS திட்டம் உருவாக்கப்பட்டது.
இதே போன்று நைஜீரியாவில் இருந்து கனடாவுக்கு பல்கலைக்கழக படிப்பை மேற்கொள்ள வரும் மாணவர்களுக்காக NSE என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
மாணவர் சேர்க்கை திட்டங்களில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவது, மாணவர்களை பாதிப்பிலிருந்து பாதுகாப்பது மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான மற்றும் நியாயமான விண்ணப்ப செயல்முறையை வழங்குவதே தங்களின் குறிக்கோள் என்று கனடா கூறுகிறது.
சர்வதேச மாணவர்களுக்கு சாதகமான கல்வி அனுபவத்தை வழங்குவது தொடர்பாகவும் கனடா ஆலோசனை செய்துவருவதாக கூறியுள்ளது.
இந்த இலக்குகளை அடைவதற்காகவே இந்த இரண்டு திட்டங்களும் கைவிடப்பட்டதாக நவம்பர் 8-ஆம் தேதி கனடாவின் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய நிபந்தனை
வருங்காலத்தில் கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்களை நேரடியாக தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான கல்வி அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது கனேடிய அரசாங்கம்.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீட்டு ஆவணங்களை, மாணவர்களின் தற்போதைய நிதி நிலையை அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாக வழங்க வேண்டும் என்றும் கனடா அறிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளில் இருந்து கனடாவில் படிக்க மாணவர்களை தொடர்ந்து வரவேற்போம் என்றும் கனடா கூறியுள்ளது.
நவம்பர் 8-ஆம் தேதி அன்று பகல் 2 மணிக்கு முன்னதாக SDS மற்றும் NSE திட்டங்களுக்கு கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள், அந்தந்த திட்டங்களுக்கு கீழே இருக்கும் நடைமுறைப்படியே பரீசிலிக்கப்படும்.
அதன் பிறகு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் வழக்கமான கல்வி அனுமதிக்கான திட்டத்தின் கீழ் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
SDS அல்லது NSE திட்டங்களின் கீழ் உள்ள நாடுகளிலிருந்து படிப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் தகுதிகளை இந்த மாற்றம் பாதிக்காது என்று கனடா அறிவித்துள்ளது.
இருப்பினும், இவ்விரண்டு திட்டங்களுக்கு தகுதியானவர்களா இல்லையா என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அனைத்து மாணவர்களும், கனடாவில் படிக்க வழங்கப்படும் விண்ணப்பங்களில் உள்ள தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்று கனேடிய அரசு கூறியுள்ளது.
நிரந்தர குடியேற்றத்திற்கான இலக்கு குறைப்பு
கனடா சமீபத்தில் குடியேற்ற கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிரந்தர குடியேற்றத்திற்கான (Permanant Residence) இலக்கு குறைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நிரந்தர குடியேற்ற அந்தஸ்த்தை பெற விரும்பும் சர்வதேச மாணவர்களின் நிலைமையை இது சவாலானதாக்கும். இந்தியாவில் இருந்து கனடாவுக்கு படிக்கச் சென்ற மாணவர்களுக்கும் இது சவாலானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கனடாவில் வசிக்கும் தற்காலிக பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான இலக்கை நிர்ணயித்து அறிவித்திருப்பது இதுவே முதல்முறை என்கிறது அதிகாரப்பூர்வ அறிக்கை.
2025-ஆம் ஆண்டு கனடாவில் ‘தற்காலிகமாக வசிப்பவர்களின்’ இலக்காக 3 லட்சத்து 5 ஆயிரத்து 900 மாணவர்கள் உட்பட 6 லட்சத்து 73 ஆயிரத்து 650 பேர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தமிழ்நாடு, பஞ்சாப், அரியாணா மற்றும் குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகப்படியான மாணவர்கள் கனடாவில் படித்து வருகின்றனர். கனடாவில் வாழும் அதிகப்படியான தற்காலிக பணியாளர்கள் இந்தியர்களே.
அக்டோபர் மாதம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிரந்தர குடியிருப்பாளர்களின் இலக்கு குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். “கனடாவுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கையை நாங்கள் கணிசமாக குறைக்க உள்ளோம்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
“எங்களின் பொருளாதாரம் மீண்டும் இயல்பான பாதையில் செல்லும் வகையில், எங்கள் மக்கள் தொகை வளர்ச்சியை நாங்கள் தற்காலிகமாக நிறுத்தப் போகிறோம்,” என்று கூறியிருந்தார் அவர்.
விசா நடைமுறையிலும் மாற்றம்
சர்வதேச மாணவர்களுக்கான விண்ணப்ப முறைகள், தற்காலிக பணியாளர்களின் இலக்குகளை குறைத்த பிறகு இந்த மாதத்தில் விசாக்களிலும் பல மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது கனேடிய அரசு.
பலமுறை கனடாவுக்கு வர ஒரே விசாவை பயன்படுத்தும் (Multiple visa entry rules) விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு அதன் நெறிமுறைகள் கனேடிய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வழங்கப்பட்ட ‘மல்டிபிள் எண்ட்ரி விசா’ ஆவணங்களை பயன்படுத்தி இனிமேல் ஒருவர் கனடாவுக்குள் வர இயலாது.
ஒருமுறையா அல்லது பலமுறை கனடாவுக்குள் வரக்கூடுமா என்பதை குடியேற்ற அதிகாரி தான் முடிவு செய்வார் என்றும், ஒரு நபர் எத்தனை முறை கனடாவுக்கு அந்த ஆவணத்தின் மூலம் வர முடியும் என்பதையும் அவரே தீர்மானிப்பார் என்றும் கனேடிய அரசு அறிவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு