on Saturday, November 09, 2024
எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவுடன் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் அலுவலகங்களை அகற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகங்களை ஸ்தாபித்துள்ளனர்.
அவற்றில் வாக்களிப்பு நிலையங்களை அண்மித்து ஸ்தாபிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள், 12ஆம் திகதி நள்ளிரவுடன் நீக்கப்பட வேண்டும்.
அன்றைய தினத்துக்கு பின்னர் தேர்தல் தொகுதி ஒன்றில் பிரதான கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்களுக்காக ஒரு அலுவலகத்தை மாத்திரம் வைத்திருக்க முடியும்.
அன்று முதல் வேட்பாளர்கள் தேர்தல் தொகுதிக்கென ஒரு அலுவலகத்தை மாத்திரம் வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வேட்பாளர்கள் தங்களது வீடுகளை தேர்தல் அலுவலகமாக பயன்படுத்த முடியும்.
எனினும் அவ்வாறான தேர்தல் அலுவலகங்களின் ஊடாக எந்தவித தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.
அதேபோன்று வாக்களிப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றருக்குள் காணப்படும் சகல தேர்தல் அலுவலகங்களும் அகற்றப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.