தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று இருக்கின்றது. இனவாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது.
அவருடன் சேர்ந்து குழுவினராக செயல்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும் வீட்டுக்கு செல்ல வேண்டி என் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையிலே நாட்டிலே புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் ஊழல் வாதிகள், களவு செய்தவர்கள், கற்பழித்தவர்கள், கொமிசன் பெறுபவர்கள், போன்றவர்களை அரசாங்கத்துடன் இணைக்கமாட்டோம் என கூறியுள்ளார்.
அந்த வகையிலே நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஏனைய கட்சிகளை பார்க்கும் போது ஜனாதிபதி சொல்லும் நிலைமையையும் அவதானித்தால், எந்த ஒரு கட்சியும் ஜனாதிபதியுடன் சேர்ந்து செயல்படக்கூடிய நிலைமை இல்லை.
தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஏனெனில் ஜனாதிபதி 42 விதமான வாக்குகளால் தான் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்களை பெறுவது என்பது அவருக்கு சிக்கலாக அமையலாம். அந்த வகையில் பெரும்பான்மையை பெறுவதற்காக வேறு யாருடைய உதவியையும் தேட வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும்.
இன்னும் ஒரு கட்சியை தேடி வந்தால் அவர் கொலை செய்தவர்கள் உடனோ, களவு செய்தவர்களுடனோ, கற்பழித்தவர்களுடனோ, சேர முடியாது. ஆகவே அவர் சேர்ந்து வேலை செய்யக்கூடிய தகுதியுடைய கட்சி நாங்கள் மாத்திரமே தான் இருக்கின்றோம்.
அவ்வாறான ஒரு சூழ்நிலையிலே நாங்கள் தமிழ் மக்களுடைய சார்பிலே பேரம் பேசுகின்ற சக்தியாக நாங்கள் மாறலாம். நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது இரண்டாவது விடயம். ஆனால் ஜனாதிபதிக்கு அவ்வாறான ஒரு தேவை வருகின்ற போது அதிகளவான ஆசனங்கள் எங்களிடம் இருக்குமாயின் நாங்கள் ஒரு பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்கலாம்.
பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருந்தால் நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்சனைகளை பற்றி நாங்கள் பேரம் பேச முடியும்.
மக்களுக்கு பல்வேறுபட்ட சிக்கல்கள் உள்ளன. அவ்வாறான சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கு நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பதாக இருந்தால் அதிகாரம் எங்களுடைய கையில் இருக்க வேண்டும்.
அதிகாரம் உங்களுடைய கையில் இருக்க வேண்டுமாக இருந்தால் எங்களுடைய மக்கள் எங்களுடைய கட்சிக்கு அதிகளவான வாக்குகளை வழங்க வேண்டும்.
எனது கட்சிக்கு அதிகமான வாக்குகள் செலுத்தினால் நாங்கள் பேரம் பேசும் சக்தியாகவும் இந்த மாவட்டத்தின் நிருவாகத்திற்கும் நாங்கள் பொறுப்பாக இருந்து செயற்படுவோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.