40 வருட காலத்திற்கு மேலாக உங்களுக்கு எதிராக செயற்பட்டு , படுகொலை செய்தவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா ? உங்கள் உரிமைக்காக போராடி வருபவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா ? என்பதனை தமிழ் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தலைவரும் நாடளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சத்துர சந்தீப சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரச்சார கூட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை குருநகர் பகுதியில் இடம்பெற்றது.
குறித்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க உள்ளோம். வடக்கில் மக்களுக்கு அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைளை முன்னெடுத்து , தேசிய நல்லிணக்கத்திற்காக தொடர்ச்சியாக போராடி வருகிறோம். எங்களை நசுக்குவதற்கு பலரும் முயன்று வருகின்றனர்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக வந்த தீர்வு திட்டத்தை குழப்ப தெற்கில் 6 ஆயிரத்திற்கு அதிகமான உயிர்களை காவு வாங்கியவர்களே இன்று ஆட்சியில் உள்ளனர்.
ஆனால் எனது தந்தையார் ராஜித சேனாரட்ன தென்னிலங்கையில் ஜே.வி.பி அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இடதுசாரி கொள்கையுடன் பயணித்தவர். இன்றும் அவர் தன் கொள்கையுடனே பயணிக்கிறார்.
இன்று 13ஆம் திருத்தம் தொடர்பில் பேசும் ஜே.வி.பி யினர், 13 ஆம் திருத்திற்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகின்றார்கள் ?
கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கான தீர்வை எதிர்த்து வந்தவர்கள் தற்போது வாக்கு பிச்சை வேண்டி, தமிழர்களுக்கு தீர்வு தருவதாக கூறுகின்றார்.
அரசியல்வாதிகள் நிலைமாற கொள்கையோடு இருக்க வேண்டும். 40 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை நசுக்கி படுகொலை செய்தவர்கள் தமிழர்களுக்கு தீர்வு தருவதாக கூறுகின்றனர்.
ஆனால் தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் எனது தந்தையார் உள்ளிட்ட சில உண்மையான இடதுசாரிகள் மட்டுமே என்பதனை கூறிக்கொள்கிறேன்.
வடக்கிற்கு ஒன்றும் தெற்குக்கு ஒன்றும் கூறும் அரசியல் நிலைப்பாட்டை கொண்டவர்கள் தான் இப்ப ஆட்சி அமைத்துள்ளனர்.
ஆனால் நாங்கள் அனைத்து இன மத மக்களும் சம உரித்துடன் வாழ வேண்டும். வடக்கு கிழக்கு மக்களுடன் தெற்கு மக்கள் ஒன்றாக வாழவேண்டும் என போராடி வருகின்றோம்.
விடுதலைப்புலிகள் கூட எனது தந்தையார் ராஜித சேனாரத்னாவை நம்பினார்கள். அவரே கொள்கையுடன் பயணிப்பவர்கள் என புலிகளின் தலைவர் கூட கூறியுள்ளார். தெரிவித்தனர்.
வடக்கு மக்களின் வாக்குகளை பெற்று சென்ற பின்னர். வடக்கு மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் அல்ல நாம். நாடு முழுவதும் ஒரே கொள்கையுடன் பயணிப்பவர்கள்.
எனவே எமது கட்சி சார்பில் யாழில் போட்டியிடும் சுலக்சன் விஜயகாந்த் உள்ளிட்டவர்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்புங்கள். அவர்களையும் அரவணைத்து மாபெரும் சக்தியாக நாம் பயணிப்போம்.
வடக்கு மக்களின் தேவைகள் அபிலாசைகளை முடிந்தளவுக்கு நிறைவேற்றுவோம். எனது தந்தையார் ராஜித அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் வடக்கில் பல தொழில் வாய்ப்புக்களை வழங்கினார்
40 வருடமாக உங்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள், படுகொலை செய்தவர்களுக்கு வாக்களிக்க போக்கின்றீர்களா ? இல்லை உங்கள் உரிமைக்காக போராடிய எமக்கு வாக்களிக்க போக்கின்றீர்களா ?
அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுப்பவர்கள் தான் புதிய அரசியல் கலாச்சரத்தை உருவாக்க முடியும் என்பதால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூக்குக்கண்ணாடி சின்னத்திற்கு வாக்களித்து முதன்மை வேட்பாளர் சுலக்சனின் 3ஆம் இலக்கத்திற்கு விருப்பு வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.