ஊவா மாகாணத்திலுள்ள இந்திய வீடமைப்புத் திட்டங்களைப் பார்வையிட்டார் இந்திய உயர் ஸ்தானிகர் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தில் உள்ள நாரங்கலை பிரிவில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களில் ஒரு தொகுதியைக் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா செவ்வாய்க்கிழமை (5 ) பார்வையிட்டிருந்தார்.
இத்தொகுதியில் உள்ள 54 பயனாளிக் குடும்பங்களை உயர் ஸ்தானிகர் இவ்விஜயத்தின்போது சந்தித்திருந்தார்.
இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்தமையினை குறிக்கும் முகமாகக் கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட 750 மில்லியன் இந்திய ரூபா பல்நோக்கு நன்கொடை உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய உயர் ஸ்தானிகரால் இவ்வீட்டுத்திட்டங்களின் பயனாளிக் குடும்பங்களுக்கு சூரிய சக்தி மின் விளக்குகளும் வழங்கிவைக்கப்பட்டன.
அதேபோல நாரங்கலை தமிழ் வித்தியாலயத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிகழ்வொன்றிலும் கலந்து கொண்டிருந்த உயர் ஸ்தானிகர், பல் நோக்கு உதவிகளை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த உதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக தலௌதா மற்றும் கந்தெகெதெர பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் நாரங்கலை சுகாதார பணிமனை ஆகியவற்றுக்கான மின் சேமிப்புடனான மின்பிறப்பாக்கிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், நாரங்கலை மற்றும் லெஜர்வத்தை இலக்கம் 02 மற்றும் இலக்கம் 03 தமிழ் வித்தியாலயங்களுக்கான விளையாட்டுஉதவிப் பொருட்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கான மழை அங்கிகள் உள்ளிட்டவை வழங்கி வைக்கப்பட்டன.
அதனை அடுத்து புதன்கிழமை 6 ஆம் திகதி உயர் ஸ்தானிகர் அவர்கள் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் அப்புத்தளையில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டப் பணிகளை பார்வையிட்டு அத்திட்டம் குறித்து மீளாய்வு செய்ததுடன் பயனாளிகள் சிலருடனும் கலந்துரையாடியிருந்தார்.
இந்திய வீடமைப்புத் திட்டமானது நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தது, முதல் இரு கட்டங்களின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 46000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதுடன் புனரமைப்பும் செய்யப்பட்டன. மூன்றாம் கட்டம் இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த திட்டத்தில் 4000 வீடுகள் திட்டமிடப்பட்டுள்ள நாரங்கலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 3900க்கும் அதிகமான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. நான்காம் கட்டத்தின் கீழ் அப்புத்தளை உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் 10000 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் அண்மைய காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.