by 9vbzz1

அர்ஜுன் அலோசியஸ் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது குற்றப்புலனாய்வு பிரிவினர் ஏன் அமைதி காத்தனர் பண மோசடி தொடர்பில் டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கடந்த 6 ஆம் திகதி விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் அமைதியாக இருந்தமை குறித்து அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் 50 கோடி ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அர்ஜுன்  அலோசியஸ் கடந்த 06 ஆம் திகதி அன்று அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது, நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு அமைதியாக இருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மறுநாள் (07) அர்ஜுன்  அலோசியஸிற்கு எதிராக நீதிமன்றில் மனு தாக்கல் செய்து அவரை வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அர்ஜுன்  அலோசியஸ் முன்னிலையில் அமைதியாக இருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மறுநாள் மனு தாக்கல் செய்வதற்கான காரணம் என்ன என அநுராதபுரம் பிரதான நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

குற்றப் புலனாய்வு திணைக்களம் என்பது அரச திணைக்களமாகும். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் வேண்டுக்கோளுக்கு இணங்கவே அர்ஜுன்  அலோசியஸ் கடந்த 6 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆனால், இதன்போது அர்ஜுன்  அலோசியஸிடமிருந்து எந்த வாக்கு மூலமும் பெற்றுக் கொள்ளப்படவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அநுராதபுரம் பிரதான நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் கோரிக்கையை ஆராய்ந்து பார்த்த நீதவான் அர்ஜுன்  அலோசியஸை வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்