தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் புது பாதையை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வறட்டு தத்துவத்தை பேசியும், மலட்டு போராட்டங்களையும் நாம் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என பொறியியலாளர் எம்.சூரியசேகரம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் , விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் என 16 பேர் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியினருக்கு வாக்களிக்க வேண்டும் என கோரி கையொப்பம் இட்டுள்ளனர்.
அவர்கள் சார்பில் யாழ் . ஊடக அமையத்தில் சட்டத்தரணி புவீந்திரன் றெக்னோ, கலாநிதி செங்கரப்பிள்ளை அறிவழகன், பொறியியலாளர் எம்.சூரியசேகரம் மற்றும் விரிவுரையாளர் கபிலன் உள்ளிட்டோர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பை நடாத்தி இருந்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் பொறியியலாளர் எம்.சூரியசேகரம் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் ரீதியாகவும் , சமூக ரீதியாகவும் நாம் அடிப்படை மாற்றங்களை உருவாக்க வேண்டும். சர்வதேச விசாரணைகள் தான் வேண்டும் என காலம் காலமாக காத்திருக்க முடியாது. எமக்கான தீர்வுகள் விரைவாக கிடைக்க வேண்டும். அதனை நாம் ஜனநாயக ரீதியாக தான் அணுக முடியும். அந்த வகையில் பொது தேர்தல் முடிந்த பின்னர் தீர்வுகள் கிடைக்கும்.
நாங்கள் எங்களை போல தெற்கில் உள்ளவர்களுடனும் சேர்ந்து வேலை செய்கிறோம். எங்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன என்பது அவர்களுக்கும் தெரியும். நாங்கள் தமிழ் மக்களுக்காக செய்யவில்லை. அனைத்து மக்களும் கூட்டாக சேர்ந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்
ஜேவிபி யினரும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களே. புலிகளை விட அதிகமான போராளிகளை இழந்தவர்கள். அவர்கள் அதில் இருந்து படிப்பினைகளை பெற்று , தற்போது ஜனநாயக ரீதியாக போராடுகிறார்கள். தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றார்கள். அவர்களின் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
புத்திஜீவிகளான நாங்கள் அனைத்து கட்சிகளையும் ஒப்பிட்டு அதில் சிறந்த கட்சியாக தேசிய மக்கள் சக்தியினரே உள்ள நிலையில் தான் அவர்களை நாங்கள் ஆதரிக்க முடிவெடுத்தோம் என தெரிவித்தார்.