சலுகை அரசியலாகவும் , இனவாத அரசியலாகவும் உள்ள அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட்டு , புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக வேண்டும் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு – 02 இல் ஊஞ்சல் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி ஈ.எஸ்.பி கமலரூபன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசியல் நிலைப்பாடு, இனவாத அரசியலாகவும் , சலுகை அரசியலாகவும் காணப்படுகிறது.
இனவாத அரசியலை தேசிய கட்சிகளாக இருந்தாலும் தமிழ் தேசிய கட்சிகளாக இருந்தாலும் அதனை முன்னெடுக்கின்றனர்.
அதேவேளை சில தேசிய கட்சியின் சலுகை அரசியல் வியாபாரமாகவே காணப்படுகிறது.
இந்த அரசியல் கலாச்சாரம் மாறவேண்டும் அரசியல் மக்கள் மயப்படுத்த வேண்டும். அரசியல் தலைவர்கள் மக்களை அரசியல் மையப்படுத்தவில்லை.
தமிழ் மக்கள் இனவாத, சலுகை அரசியலில் இருந்து இம்முறை மக்கள் வெளியே வந்து மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்
தமிழ் மக்கள் மத்தியில் பிரதான பிரச்சனையாக இனப்பிரச்சனை மற்றும் பொருளாதார பிரச்சனைகள் காணப்படுகின்றன.
தேசிய மக்கள் சக்தியினர் கூறுவது போன்று, தமிழ் மக்களுக்கு தனியே பொருளாதார பிரச்சனை மாத்திரம் இல்லை. 75 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத அரசியல் பிரச்சனையும் உண்டு.
நாடு முழுவதுமே பொருளாதார பிரச்சனை உள்ளது. அதில் இருந்து மீள சுற்றுலாத்துறையை மேம்ப்படுத்த வேண்டும்.
தெற்கில் இடதுசாரி கொள்கையுடையவர் ஜனாதிபதியாக வந்துள்ளார். அவர் இனவாத சிந்தனை இல்லாதவராக இருந்தால் அவருடன் சேர்ந்து இயங்க தயார் என மேலும் தெரிவித்தார்.