அமெரிக்காவில் இருந்து பல லட்சம் குடியேறிகளை டிரம்பால் வெளியேற்ற முடியுமா?

சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவுக்கு வந்த குடியேறிகள் நாடுகடத்தப்படுவார்களா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பது டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக திகழ்ந்தது
  • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர், மைக் வெண்டிலிங்& வெலான்டினா ஒரோபேசா
  • பதவி, பிபிசி செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி உறுதி செய்யப்பட்ட இரவில் 47 வயதான நோரா மிகவும் பதற்றமாகக் காணப்பட்டார். 24 ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அமெரிக்காவில் அமைந்திருக்கும் அவருடைய நாடான நிக்கரகுவாவில் ஏற்பட்ட பயங்கரமான சூறாவாளிக்குப் பிறகு அமெரிக்காவுக்கு வந்தவர் நோரா.

24 வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்திருந்தாலும், அவருடைய இரண்டு மகளான க்றிஸ்டெலும் (30), லேயும் (19) அமெரிக்கக் குடிமக்களாக இருந்தாலும், நோரா சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வசிக்கவில்லை.

“தூக்கம் வரவில்லை. பயமாக இருக்கிறது,” என்று பிபிசி-யிடம் கூறுகிறார் நோரா. தன்னுடைய குடியேற்ற நிலைமையை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்தச் செய்தியில் அவருடைய குடியுரிமை தொடர்பான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘முதலில் 10 லட்சம் குடியேறிகள்…’

அதிகாரப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் அமெரிக்காவில் வசித்து வரும் லட்சக்கணக்கான குடியேறிகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் தன்னுடைய பிரசார உரையில் தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வாக்குறுதியை டொனால்ட் டிரம்ப் நிறைவேற்றக் கூடும் என்ற அச்சத்தில் உள்ளார் நோரா.

சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், வரலாற்றில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவிலிருந்து அதிகப்படியான மக்களை வெளியேற்றப்பட உள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்ப் துணை அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கும் ஜே.டி.வான்ஸ், “முதலில் 10 லட்சம் பேரை வெளியேற்றலாம். பிறகு அப்படியே தொடரலாம்,” என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த முயற்சி, சட்டப்பூர்வ மற்றும் நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவுக்கு வந்த குடியேறிகள் நாடுகடத்தப்படுவார்களா?

பட மூலாதாரம், Courtesy of Christell and Leah

படக்குறிப்பு, நோராவின் மகள் இருவரும் இந்த தேர்தலில் முதன்முறையாக தங்களின் வாக்குகளை செலுத்தினர்

அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் எவ்வளவு பேர்?

அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் மற்றும் பியூ ஆராய்ச்சி மையம் இணைந்து வெளியிட்ட தரவுகளில், 2022-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் 1.1 கோடி நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க மக்கள் தொகையில் 3.3% ஆகும்.

2005-ஆம் ஆண்டில் இருந்து இந்த எண்ணிக்கை நிலையாக இருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தரவுகளில் சில காரணிகள் இடம் பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, க்யூபா, ஹைத்தி, மற்றும் நிக்கரகுவா போன்ற நாடுகளில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் 5 லட்சம் குடியேறிகள் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டனர்.

சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியுள்ள நபர்கள் பலரும் அமெரிக்காவில் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர். அவர்களில் 80%-க்கும் அதிகமான நபர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மெக்ஸிகோவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள். அந்த நாட்டினரைத் தொடர்ந்து க்வாதமாலா, எல் சல்வடோர், ஹோண்ட்யூராஸ் நாட்டினர் அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக அதிகமாகக் குடியேறியுள்ளனர்.

அவர்களில் அதிகமானோர் கலிஃபோர்னியா, டெக்ஸாஸ், ஃப்ளோரிடா, நியூ யார்க், நியூ ஜெர்ஸி மற்றும் இலினாய் மாகாணங்களில் வசித்து வருகின்றனர்.

சட்ட சிக்கல்கள் என்ன?

அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லாத குடியேறிகளுக்கு நீதி விசாரணையை நாடும் அடிப்படை உரிமை உள்ளது. அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்றால் அதனை எதிர்த்து அவர்கள் நீதிமன்றங்களை நாட முடியும்.

டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கும் மிகப்பெரிய அளவிலான குடியேறிகளை வெளியேற்றும் பணிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட குடியேறிகளுக்கான நீதிமன்ற அமைப்பு தேவை. ஆனால், அமெரிக்காவின் நீதிமன்ற அமைப்பு ஏற்கனவே பணிச்சுமை நிறைந்ததாக உள்ளது.

குடியேறிகள் மற்றும் சுங்க அமலாக்கத் துறையினரால் (Immigration and Customs Enforcement) நேரடியாக இம்மக்கள் நாடுகடத்தல் திட்டத்தின் கீழ் இணைக்கப்படமாட்டார்கள். உள்ளூர் சட்ட அமலாக்கப்பிரிவினர் மூலமாகவே அவர்கள் அந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவார்கள்.

இருப்பினும், அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சட்டங்கள் உள்ளூர் காவல்துறையினர், குடியேறிகள் மற்றும் சுங்க அமலாக்கத் துறையினருடன் இணைந்து பணியாற்றுவதைத் தடுக்கிறது.

குடியேறிகளுக்கு ஆதரவாக இருக்கும் இத்தகைய நகரங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிரம்ப் தன்னுடைய பிரசாரத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், அமெரிக்காவில் உள்ள சிக்கலான உள்ளூர், மாகாண, மற்றும் தெசிய அளவிலான சட்டங்கள் தற்போதைய சூழலை மேலும் சிக்கலாக்குகின்றன.

‘மைக்ரேஷன் பாலிசி இன்ஸ்டியூட்’ என்ற சிந்தனைக் குழுவில் பணியாற்றும் கொள்கை வகுப்பாளரான கேத்லீன் புஷ்- ஜோசப், உள்ளூர் அதிகாரிகளுக்கும் குடியேறிகள் மற்றும் சுங்க அமலாக்கத் துறையினருக்கும் இடையேயான ஒத்துழைப்பு இதில் மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார்.

“உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கின்ற போது, குடியேறிகள் மற்றும் சுங்க அமலாக்கத் துறையினர் நேரடியாக ஒரு நபரை சிறையில் இருந்து தேர்வு செய்வது எளிமையாக இருக்கும். இல்லையென்றால் அந்த நபரைத் தேட வேண்டிய சூழல் ஏற்படும்,” என்று கூறினார்.

ஆனால் டொனால்ட் டிரம்பின் இந்தத் திட்டத்திற்கு நிறைய நபர்கள் ஒத்துழைப்பு வழங்குவது கடினம் என்று கூறுகிறார். மேலும், ஃப்ளோரிடாவின் ப்ரோவர்ட் மற்றும் பால்ம் பீச் கிராமப்புறங்களில் இந்தப் பணிக்காக காவல்துறையினர் நியமிக்கப்படமாட்டாரக்ள் என்று அதன் தலைமை காவல்துறை அலுவலகங்கள் (Sheriff’s office) தெரிவித்திருப்பதையும் கேத்லீன் சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டங்களை, குடியேறிகள் மற்றும் மனித உரிமைகளுக்காகப் போராடும் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பார்கள்.

2022-ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம், நீதித்துறையை குடியேறிகள் நாடினாலும் கூட குடியேறிகள் மற்றும் சுங்க அமலாக்கத் துறையினர் அவர்களின் பணியை மேற்கொள்ளலாம் என்ற தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவுக்கு வந்த குடியேறிகள் நாடுகடத்தப்படுவார்களா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2023ம் ஆண்டு முடிவில் அதிகப்படியான குடியேறிகள் மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்தனர். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

நடைமுறைச் சிக்கல்கள் என்ன?

இதுபோன்ற திட்டங்களை அமெரிக்க நிர்வாகம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றினாலும் கூட, எல்லைப்புறங்களிலும், உள்நாட்டிலும் அதிகாரிகள் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

பைடன் நிர்வாகம், எல்லையோரம் தடுத்து நிறுத்தப்பட்ட குடியேறிகளை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தியது. அமெரிக்காவின் உள்புறப் பகுதிகளில் 1 லட்சத்திற்கும் குறைவான நபர்களே ஆண்டுதோறும் வெளியேற்றப்பட்டாரகள். ஒபாமா ஆட்சியின் போது தான் 2.3 லட்சம் நபர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஓராண்டுக்கு 10 லட்சம் நபர்களை வெளியேற்ற மிக அதிகம் செலவாகும். ஆனால், தற்போது அந்தளவு நிதி இல்லை என்று கூறுகிறார் அமெரிக்கன் இமிக்ரேஷன் கவுன்சிலில் கொள்கை இயக்குநராகச் செயல்படும் ரெய்சிலின் மெல்னிக். இந்த அமைப்பு குடியேற்றங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் ஒரு அமைப்பாகும்.

குடியேறிகள் மற்றும் சுங்க அமலாக்கத் துறையில் பணியாற்றும் 22,000 அதிகாரிகளால், டிரம்பின் பிரசாரத்தில் கூறப்பட்ட இலக்குகளில் ஒரு பகுதியினரைக் கூடக் கண்டுபிடித்து நாடு கடத்தப்படுவார்களா என்று சந்தேகிக்கின்றனர் நிபுணர்கள்.

குடியேறிகளை நாடு கடத்தும் பணி மிக சிக்கலானது. நீண்டகாலம் எடுத்துக் கொள்ளக்கூடியது. இந்த நடைமுறையின் முதல் படி ஆவணங்களற்ற குடியேறிகளை கண்டுபிடித்து கைது செய்வது தான், ரெய்சிலின் கூறூகிறார்.

அதன் பிறகு, சிறையில் அடைப்பதற்கு மாற்றான முறையில் அவர்களை ஓரிடத்தில் தங்க வைக்க வேண்டும். பிறகு அவர்கள் குடியேற்ற நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள். இந்த நீதிமன்றங்களில் பல வழக்குகள் ஆண்டுக் கணக்கில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தான் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்களது சொந்த நாட்டில் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவார்களா என்பதை உறுதி செய்ய, தூதரக மட்டத்தில் ஒத்துழைப்பு இதற்குத் தேவைப்படுகிறது.

இந்த நடைமுறையில் எந்தக் கட்டத்தையும் செயல்படுத்தத் தேவையான திறன் குடியேறிகள் மற்றும் சுங்க அமலாக்கத் துறையிடம் இல்லை என்கிறார் ரெய்சிலின்.

டிரம்ப், இந்தத் திட்டத்திற்காகத் தேசிய பாதுகாப்பு பிரிவினர் மற்றும் ராணுவத்தினரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வரலாற்று ரீதியாக, இந்த விவகாரத்தில் ராணுவத்தின் பங்கு அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் முடிந்துவிடுகிறது. இதனை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்று சில விபரங்களைத் தெரிவித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

இந்த ஆண்டின் ஆரம்பித்தில் ‘டைம்’ இதழுக்கு அளித்த நேர்காணலில், குடியேறிகளுக்காகப் புதிதாகத் தடுப்பு மையங்கள் அமைக்கப்படலாம் என்று குறிப்பாக உணர்த்தினார். மேலும் காவல்துறையினரின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு, விசாரணையில் இருந்து விலக்கு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.

‘நம்பர்ஸ் யூ.எஸ்.ஏ’ அமைப்பின் ஆராய்ச்சி இயக்குநராகப் பணியாற்றும் எரிக் ரூராக், குடியேற்றக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும் என்று வாதிடுகிறார். மேலும் பலமான எல்லைப்புறங்கள் அமைப்பதை வலியுறுத்துகிறார்.

“இதற்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். இல்லையென்றால் உள்நாட்டில் சிறிய அளவிலேயே முன்னேற்றம் ஏற்படும்,” என்று அவர் கூறுகிறார்.

அதே நேரம், சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“உள்நாட்டில் அமலாக்கத்துறையினரின் செயல்பாடுகள் குறைவாக இருக்கின்ற காரணத்தினாலே, வேலை தேடி வரும் குடியேறிகளுக்கு வேலைகள் கிடைக்கின்றன,” என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவுக்கு வந்த குடியேறிகள் நாடுகடத்தப்படுவார்களா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எல்லையோரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின் போது தெரிவித்தார்.

இதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் என்ன?

10 லட்சம் குடியேறிகளை நாடுகடுத்த பல கோடிகள் செலவாகும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

2023-ஆம் ஆண்டு போக்குவரத்து மற்றும் நாடுகடத்தல் பணிகளுக்காக மட்டும் குடியேறிகள் மற்றும் சுங்க அமலாக்கத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மதிப்பு 42 கோடி அமெரிக்க டாலர்கள்.

கடந்த ஆண்டு மட்டும் 1.4 லட்சத்துக்கும் சற்று அதிகமான நபர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டனர்.

தடுப்பு மையங்கள், நாடுகடத்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் விமானங்களுக்காக லட்சக்கணக்கில் நிதி தேவைப்படும் என்கிறார் ரெய்ச்லின்.

இதுமட்டுமின்றி தெற்கு எல்லையில் தடுப்புசுவரை உருவாக்குதல், ஃபென்டனைல் போதைப் பொருள் ஊடுருவலை தடுத்தல் மற்றும் ஆயிரக்கணக்கில் துருப்புகளை எல்லையில் நிறுத்துதல் உள்ளிட்ட பல அம்சங்களையும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

லத்தீன் அமெரிக்காவுக்கான வாஷிங்டன் அலுவலகத்தில் குடியேற்றம் மற்றும் எல்லையோர பிரச்னைகள் நிபுணரான ஆடம் ஐசக்சன், “நாடுகடத்தல் திட்டம் டிரம்பின் நிர்வாகத்தின் மீதான மக்களின் கண்ணோட்டத்தையும் மாற்றும்,” என்று எச்சரிக்கிறார்.

“ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கு நன்கு பரிச்சயமான, அன்புக்குரிய நபர்களை பேருந்தில் ஏற்றுக் கொண்டு செல்லும் காட்சிகளைக் காண நேரிடும். அழும் குழந்தைகளையும், குடும்பத்தினரையும் நீங்கள் தொலைக்காட்சியில் காண நேரிடும். இது குடும்பங்களைப் பிரிக்கும் நிகழ்வாகப் பார்க்கப்படும்,” என்றும் அவர் கூறுகிறார்.

சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவுக்கு வந்த குடியேறிகள் நாடுகடத்தப்படுவார்களா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தெற்கு ஃப்ளோரிடாவில் எல்லையோர பாதுகாப்பு ரோந்து பணிகள் தொடர்பாக விவரிக்கும் கடலோர காவல்துறை அதிகாரி

இதற்கு முன்பு இப்படியாக நாடுகடத்தல் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளதா?

டிரம்பின் இதற்கு முந்தைய நான்கு ஆண்டுகால ஆட்சியின் போது 15 லட்சம் நபர்கள் நாடுகடத்தப்பட்டனர். பைடனின் ஆட்சியில் இந்த எண்ணைச் சமப்படுத்தும் முயற்சியில் மக்களைத் திருப்பி அனுப்பினார்கள்.

பாரக் ஒபாமாவின் ஆட்சி காலத்தின் போது 30 லட்சம் குடியேறிகள் நாடுகடத்தப்பட்டனர். குடியேறி உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளர்கள் ‘நாடுகடத்தப்படும் நிகழ்வின் தலைவர்’ என்று அவரை அழைத்தனர்.

1954-ஆம் ஆண்டு, வரலாற்று ரீதியாக மிகப்பெரிய அளவில் மக்கள் வெளியேற்றப்பட்டனர். 13 லட்சம் நபர்கள் ஆபரேஷன் வெட்பேக் (Operation Wetback) என்ற திட்டத்தின் கீழ் வெளியேற்றப்பட்டனர். அதில் மெக்ஸிகோவை சேர்ந்தவர்கள் அதிகமாக வெளியேற்ற்ப்பட்டனர்.

இந்த திட்டம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அமெரிக்கர்களும் இதில் வெளியேற்றப்பட்டதும் இதற்கு ஒரு காரணம். நிதிப் பற்றாக்குறை மற்றொரு காரணம். பிறகு 1955-ஆம் ஆண்டு இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இருப்பினும், தற்போது செயல்படுத்தப்படும் திட்டத்தோடு இதனை ஒப்பிட இயலாது. ஏன் என்றால் நீதித்துறையை நாடும் உரிமை அப்போது இல்லை. மேலும் மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த ஆண்களை மட்டுமே வெளியேற்றும் எண்ணத்தோடு அந்தத் திட்டம் செயல்பாட்டில் இருந்தது.

சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவுக்கு வந்த குடியேறிகள் நாடுகடத்தப்படுவார்களா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை தடுப்புக் காவலில் வைக்க தேவையான மையங்கள் கட்டுவதற்கு பல கோடி செலவாகக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை

கடினமான முடிவு

இதெல்லம் ஒருபுறமிருக்க,நோராவைப் பொறுத்தமட்டில் அவரின் சொந்த நாடான நிக்கராகுவாவுக்கு திரும்பிச் செல்வது யோசிக்க இயலாத ஒன்று.

“கடந்த 24 ஆண்டுகளாக நான் அமெரிக்காவில் தான் வாழ்ந்து வந்தேன். வேலைபார்த்தேன். வரிகளைச் செலுத்தினேன். என்னுடைய குடியேற்ற நிலையை மாற்றிக் கொள்வதற்கான வழியே இல்லை,” என்று நோரா கூறுகிறார். மேலும், “நிக்கராகுவாவுக்குத் திரும்பிச் செல்வதை யோசிப்பதே கடினமாக இருக்கிறது,” என்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன்முறையாக வாக்களித்த நோராவின் மகள்கள் தேவையென்றால் அவர்களின் அம்மாவோடு சொந்த நாடு திரும்பவும் தயாராக உள்ளனர்.

“எங்கள் அம்மாவுக்காக நாங்கள் எதையும் செய்வோம்,” என்கின்றனர் அவர்கள்.