ஆண் கொசுவை செவிடாக்கினால் டெங்கு காய்ச்சல் பரவாது – புதிய கண்டுபிடிப்பு
- எழுதியவர், மிச்செல் ராபர்ட்ஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
-
டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க விஞ்ஞானிகள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். ஆண் கொசுக்களின் கேட்கும் திறனை மட்டுப்படுத்தினால் அவை இனச்சேர்க்கையில் ஈடுபட முடியாது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு.
பெண் கொசுக்கள் சிறகடிக்கும் ஓசையைக் கேட்டே ஆண் கொசுக்கள் ஈர்க்கப்படும். அவையிரண்டும் காற்றில் பறந்து கொண்டிருக்கும் போதே உடலுறவில் ஈடுபடும்.
கொசுக்களின் செவித்திறன் மரபணுவை மாற்றிய ஆராய்ச்சியாளர்கள், இந்த மாற்றத்திற்கு பிறகு ஆண் கொசுக்கள் ஒரே கூண்டில் இருந்தும் கூட மூன்று நாட்கள் ஆகியும் எந்த பெண் கொசுவுடனும் உறவில் ஈடுபடவில்லை என்பதைக் கண்டுபிடித்தனர்.
பெண் கொசுக்கள் தான், மக்களுக்கு நோய்களை பரப்பக் கூடியவை. அந்த கொசுக்களை முட்டை இடாமல் தடுப்பதன் மூலம், அவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை குறைக்கும்.
செவித்திறனை நீக்கியதால் கொசுக்களின் இனச் சேர்க்கையில் பாதிப்பு
ஆண்டொன்றுக்கு நாற்பது கோடி மக்களுக்கு நோய் பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்களை பரப்பும் ஏடிஸ் எஜிப்டய் (Aedes aegypti) எனும் கொசுக்களைப் பற்றி இர்வினில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் கொசுக்களின் இனச் சேர்க்கை பழக்கங்களை ஆய்வு செய்தார்கள். இதன் கால அளவு சில நொடிகளிலிருந்து ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே இருந்தது. பிறகு தான் மரபணுக்களை கொண்டு எப்படி இதை தடுப்பது என்று கண்டுபிடித்தனர்.
டி.ஆர்.பி.வி.எ. (trpVa) என்ற புரதத்தை அவர்கள் குறிவைத்தனர். இந்த புரதம் தான் கொசுக்களின் செவித்திறனுக்கு முக்கியமானது.
மரபணு மாற்றம் பெற்ற கொசுக்கள், அவற்றின் இணையின் இறக்கை சத்தத்திற்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை.
அந்த சத்தம் கேட்கமுடியாத அவற்றின் காதுகளில் விழுந்தது.
இதற்கு மாறாக, மரபணு மாற்றம் பெறாத கொசுக்கள் பல்வேறு முறை உடலுறவில் ஈடுபட்டு அந்த கூண்டில் இருந்த அனைத்து பெண் கொசுக்களையும் கருத்தரிக்க செய்தன.
பிஎன்ஏஎஸ் அறிவியல் இதழில் தங்கள் படைப்புகளை வெளியிட்ட கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த மரபணு மாற்றம் ஏற்படுத்திய செவித்திறன் நீக்கம், கொசுக்களின் இனச்சேர்க்கையை முற்றிலுமாக தடுத்து விட்டது என்று கூறினார்கள்.
உணவுச்சங்கிலியில் கொசுக்களின் பங்கு
ஜெர்மனியிலுள்ள ஓல்டன்பர்க் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோர்க் ஆல்பர்ட், கொசுக்களின் இனப்பெருக்கத்தைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர். அவரிடம் இந்த ஆய்வை பற்றி நான் கேட்டேன்.
“கொசுக்களின் செவித்திறனை அழிப்பது கொசுக்களை கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாக இருந்தாலும் இதில் இன்னும் நிறைய அறிய வேண்டியுள்ளது.” என்று அவர் கூறினார்.
“இந்த ஆய்வில் வழங்கப்பட்ட முதல் நேரடி மூலக்கூறு சோதனையின் முடிவில், கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு செவித்திறன் முக்கியமானது மட்டுமல்ல இன்றியமையாததும் கூட என்பதைக் காட்டுகிறது.” என்றார்.
“ஆண் கொசுக்களின் செவித்திறன் மட்டுப்படுத்தப்பட்டாலோ, அவை சத்தத்தினை கேட்டு ஈர்க்கப்படவில்லை என்றாலோ கொசுக்களின் இனமே அழிந்துவிடும்.” என்றும் ஆல்பர்ட் கூறுகிறார்.
கொசுக்களை கட்டுப்படுத்த மற்றொரு வழியையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், அதாவது கொசுக்களால் அதிகம் நோய்கள் பரவும் இடங்களில் மலட்டு ஆண் கொசுக்களை நாம் விட்டுப் பார்க்கலாம்.
என்னதான் கொசுக்கள் நோய்களை பரப்பினாலும், இவை உணவுச்சங்கிலியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக மீன்கள், பறவைகள், வவ்வால்கள் மற்றும் தவளைகள் போன்ற உயிரினங்களுக்கு இவை ஊட்டச்சத்து ஆதாரமாக விளங்குகின்றன. இவற்றில் சில வகை கொசுக்கள் முக்கியமான மகரந்த சேர்க்கையாளர்களாகவும் இருக்கின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு