அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றது உலக வர்த்தகப் போரைத் தூண்டுமா?

அமெரிக்கா - டொனால்ட் டிரம்ப் - பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பைசல் இஸ்லாம்
  • பதவி, பொருளாதார ஆசிரியர்

தான் மீண்டும் அதிபரானால், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் தனது பிரசாரத்தின் போது உறுதியளித்திருந்தார். அவரது வெற்றியைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள வணிகங்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், டொனால்ட் டிரம்ப் தனது வாக்குறுதியில் எவ்வளவு தீவிரமாக இருப்பார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர்.

இந்த வரி அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும், வேலை பாதுகாப்பிற்கும், வரி வருவாயை அதிகரிப்பதற்குமான ஒரு வழியாக டிரம்ப் பார்க்கிறார்.

முன்னதாக, அவர் சீனா போன்ற குறிப்பிட்ட நாடுகளுக்கோ அல்லது எஃகு உற்பத்தி போன்ற குறிப்பிட்ட தொழில்துறைகளுக்கோ மட்டும் இறக்குமதி வரியை விதித்தார்.

அனைத்து வெளிநாட்டுப் பொருட்களுக்கும் 10% முதல் 20% வரை வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் கூறியதை அமல்படுத்தினால், அது உலகம் முழுவதும் விலைவாசியின் நிலையை பாதிக்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கார் ஏற்றுமதிச் சந்தை என்ன ஆனது?

கடந்த மாதம், டிரம்ப் ஐரோப்பாவைக் குறிவைத்துப் பேசியிருந்தார்.

“ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் அருமையாக இருக்கிறது அல்லவா? அது சிறிய ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு. ஆனால் அமெரிக்க கார்களை ஏற்றுமதி செய்ய அந்நாடுகள் விரும்புவதில்லை. மேலும் நமது விவசாய விளை பொருட்களையும் அவர்கள் விரும்புவதில்லை,” என்று அவர் கூறியிருந்தார்.

“ஆனால் அந்நாடுகளில் இருந்து கோடிக் கணக்கான கார்கள் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இனிமேல் அது போல நடக்காது. இறக்குமதி செய்ய அந்நாடுகள் இனிமேல் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்,” என்றிருந்தார்.

டிரம்பின் வெற்றி உறுதி செய்யப்பட்ட பிறகு BMW, மெர்சிடீஸ் மற்றும் வோக்ஸ்வேகன் போன்ற நிறுவங்களின் பங்குகள் 5% முதல் 7% வரை சரிந்தன. ஜெர்மன் கார் உற்பத்தியாளர்களுக்கான மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா இருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவைக் கட்டுப்படுத்துவது, சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு, வரி விதிப்பதே தீர்வாக இருக்கும் என்று தனது பிரசாரத்தின்போது டிரம்ப் கூறி வந்தார்.

அமெரிக்கா - டொனால்ட் டிரம்ப் - பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

‘வரி – ஒரு அழகான சொல்’

டிரம்ப், “இறக்குமதிக்கான சுங்கக் கட்டணம் (tariff) என்பது அகராதியில் இருக்கும் மிகவும் அழகான சொல்,” என்று கூறினார். இந்தச் சொல்லை அவர் மிகவும் தெளிவாகவும் சாமர்த்தியமாகவும் பயன்படுத்தி வருகிறார்.

இது போன்ற செயல்பாடுகள் பலதும் சீனாவைக் குறிவைத்து சொல்லப்படுவதாக இருந்தாலும், இதில் பாதிக்கப்படப் போவது சீனா மட்டுமல்ல.

ஏற்கனவே வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தி வந்ததைப் பல்வேறு அமைச்சர்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை, இதற்கு முன்பு ஆட்சிகக்கு வந்ததும் டிரம்ப் அதனை அமலுக்கு கொண்டுவந்தார். அதனால் இந்த முறை ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகள் அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க ஆலோசனை செய்து வருகின்றன.

உலகப் பொருளாதாரத்திற்கு தற்போது ஒரு வர்த்தக போர் அவசியமில்லை, டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் ஒத்துழைப்பே நட்பு நாடுகளுக்கு தேவை என்பதை அவருக்கு நினைவூட்ட முயற்சிப்பதாக ஜி7 நட்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் கூறினார்கள்.

ஆனால், மிகவும் வலுவான பரந்த அதிகாரம் கொண்ட நாடான அமெரிக்கா இவ்வாறு செயல்பட்டால், ஐரோப்பாவும் அதற்கான தக்க எதிர்வினையாற்றும்.

இதற்குமுன், இரும்பு மற்றும் அலுமினியம் பொருட்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதற்காக வரி விதிக்கப்பட்டதையடுத்து, அமெரிக்கப் பொருட்களான ஹார்லி டேவிட்சன் பைக்குகள், போர்பன் விஸ்கி மற்றும் லீவைஸ் ஜீன்ஸ் மீது ஐரோப்பிய ஒன்றியமும் வரிகளை விதித்தது.

அமெரிக்கா வரி விதித்ததால் மட்டுமே ஐரோப்பாவில் பணவீக்கம் ஏற்படவில்லை, இதற்கு ஐரோப்பா ஆற்றிய எதிர்வினைகளும் காரணமாகும் என்று யூரோப்பகுதி மத்திய வங்கி உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்கா - டொனால்ட் டிரம்ப் - பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் வெற்றி உறுதி செய்யப்பட்ட பிறகு BMW, மெர்சிடீஸ் மற்றும் வோக்ஸ்வேகன் போன்ற நிறுவங்களின் பங்குகள் 5% முதல் 7% வரை சரிந்தன

பிரிட்டனின் பொருளாதார திட்டம் என்ன?

ஒரு பெரிய வர்த்தகப் போர் ஏற்பட்டால், அது உலகப் பொருளாதாரத்தை 7% வரை பாதிக்கக்கூடும் அல்லது அது பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் பொருளாதாரங்களின் அளவிற்கு குறையக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பிரெக்சிட்டிற்குப் பிறகு பிரிட்டன் ஒரு கடினமான நிலையை எதிர்கொள்கிறது. அது மீண்டும் எவ்வாறு நம்பகத்தன்மையைப் பெறுவது, அட்லாண்டிக் கடல்கடந்து பிற நாடுகளுடன் எவ்வாறு வர்த்தகத்தைக் கையாள வேண்டும் என்ற மிகப்பெரிய கேள்விகள் உள்ளன.

தற்போது பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் உணவு, பண்ணை போன்ற பல துறைகளில் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவுடன் நெருக்கமான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பிரிட்டனுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

பைடன் அரசு இதுபோன்ற ஒப்பந்தம் செய்ய விருப்பம் காட்டவில்லை. பிரிட்டன் தனது சொந்த வணிகங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாக இருக்கிறது என்று தோன்றியதால், தான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளாமல் தடுத்ததாக டிரம்பின் அதிக செல்வாக்கு பெற்ற உயர் வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் பாப் லைட்ஹைசர் குறிப்பிட்டார்.

“ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவை விட பிரிட்டனுக்குத்தான் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளி,” என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அமெரிக்கா - டொனால்ட் டிரம்ப் - பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டன் முயற்சி செய்து, நடுநிலையாக இருக்கலாம். ஆனால் மருந்துகள் மற்றும் கார்களின் வர்த்தகம் போன்றவற்றில் இரு தரப்பிற்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க அந்நாடு போராடக்கூடும்.

உலக வர்த்தகப் போரில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக பிரிட்டன் அரசு கூறி வருகிறது. ஆனால் அதனைப் பிற நாடுகள் ஒப்புக்கொள்ளுமா?

இதில் பிரிட்டன் ஒரு தரப்பினைத் தேர்ந்தெடுத்து அதைச் சார்ந்து இருந்தால், டிரம்பின் வரி விதிப்பில் இருந்து அந்நாடு தப்பிக்க முயற்சிக்கலாம்.

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பின் பக்கம் சிறந்த பொருளாதார ஆலோசகர்கள் இருப்பதை வரவேற்கும் ராஜ்ஜீய அதிகாரிகள், நட்பு நாடுகளுக்கு இது பலன் அளிக்கும் என்று கருதுகின்றனர்.

அல்லது இதுபோன்ற வர்த்தக வரிகள் விதிப்பதைத் தடுக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயல்பட்டால் உலக நாடுகளுக்கு அதிக பலன் கிடைக்குமா?

அமெரிக்காவிலிருந்து விலகி உள்ள மற்ற உலக நாடுகளின் நிலை என்ன?

உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் மற்ற நாடுகள் மீது வர்த்தக விதிகளை விதிப்பதாகக் கூறினால், மற்ற சிறிய பொருளாதார நாடுகளும் இது போலவே செயல்படாமல் தடுப்பது கடினமாக இருக்கும்.

இது நடக்கலாம். டிரம்பின் இந்த அச்சுறுத்தலை உன்னிப்பாகப் பார்க்கவேண்டும். தற்போது என்ன நடக்கப்போகிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இதுபோலவே எப்பொழுது வேண்டுமானாலும் உலக அளவில் வர்த்தகப் போர்கள் தொடங்கலாம்.