பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவிருக்கிறது. தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை இன்றும், நாளையும் மேற்கொள்ளும் வாய்ப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
திங்கட்கிழமை நள்ளிரவின் பின்னர் அமைதிகாலம் அமுல்படுத்தப்படவிருக்கிறது. இந்தக் காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
வீடு வீடாகச் சென்று பிரசார நடவடிக்கைகளை இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிது.
சமய வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்று ஆணைக்குழு வலியுறுத்தியிருக்கிறது.
இதேவேளை, பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சில அரச தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய முறையில் விடுமுறை வழங்கப்படுவதில்லை என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் கிடைத்திருக்கின்றன. பாராளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய, சகல ஊழியர்களுக்கும் தொழில் வழங்குனர்கள் விடுமுறையை வழங்குவது அவசியமாகும்.
இந்த விடுமுறைக்காக சம்பளக் குறைப்பை மேற்கொள்ளவும் முடியாது. எழுத்துமூலம் வாக்களிப்பதற்கான விடுமுறையை கோரும் அனைவருக்கும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது அவசியமாகும்.
சமயாசமய ஊழியர்கள் உட்பட சகல ஊழியர்களுக்கும் வாக்களிப்பதற்கான விடுமுறை வழங்கப்படுவது அவசியம் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.