வடக்கை சுரண்ட அனுமதிக்கமுடியாது!

by 9vbzz1

வடக்கின் இயற்கை வளங்களை சூறையாட யாரையும் அனுமதிக்கமுடியாது.ஒருபுறத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படலாமென்ற அச்சத்தின் மத்தியில் மறுபுறம் நிலத்தடி நீர் முற்றாக உவர் நீராகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பளையின் புதுக்காடு மற்றும் பூநகரி கௌதாரிமுனை பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பாரிய  மணல் அகழ்வினை தடுத்து நிறுத்துவது தொடர்பில் வடக்கு ஆளுநர் நாகலிங்கம் வேதநாதன் தலைமையில் விசேட கூட்டம் மீ;ண்டும் கடந்த செவ்வாய் கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.

குறிப்பாக கொழும்பிலிருந்து வழிநடத்தப்படும் மணல் அகழ்வு அனுமதி பத்திரங்கள் மாவட்ட செயலர்களதோ அனுமதியின்றி விநியோக்கிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டுமெனவும் ஆளுநர் பணித்துள்ளார்.

குறிப்பாக மணல் அகழ்வினால் கௌதாரிமுனை,வெட்டுக்காடு மற்றும் பரமன்கிராய் உள்ளிட்ட கிராமங்கள் முற்றாக அழிந்து போகின்ற நிலையில் காணப்படுகிறது. அதேவேளை பளையின் புதுக்காடு பகுதியில் நடைபெறும் மணல் அகழ்வினால் புகையிரத பாதை மூழ்கிப்போகலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே  மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக, பொது மக்களாலும் பொது அமைப்புகளாலும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி பகுதியில் கனிய மணல் அகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில் மன்னார் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அப்பகுதி விஜயம் மேற்கொண்ட குழுவினர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான போராட்டங்கள் மேற்கொள்ள முடியாது என்பதால் இப்பகுதியில் இருந்து கலைந்து செல்லுமாறு விரட்டியிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்