நெல்லை: பட்டியல் பிரிவு மாணவர் மீது தாக்குதல்; வீட்டையும் அடித்து நொறுக்கினர் – என்ன நடந்தது?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் தகவல்கள் உங்கள் மனதை சங்கடப்படுத்தலாம்.
நெல்லையில் பட்டியல் பிரிவை சேர்ந்த மாணவர் மீது ஆதிக்க சாதியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டதாக 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
மாணவரின் தற்போதைய நிலை என்ன? இச்சம்பவம் குறித்து காவல்துறை கூறுவது என்ன?
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது மேலப்பாட்டம் கிராமம். இந்த கிராமத்தில் பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.
மேலப்பாட்டம் கிராமத்திற்கு அருகில் திருமலைக்கொழுந்துபுரம் எனும் ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் வேறு சாதிபிரிவினரே பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மேலப்பாட்டம் சாலையை பொதுவழியாக பயன்படுத்தி வருகின்றனர்.
சாலையில் நடந்த மோதல்
கடந்த திங்கட்கிழமையன்று (நவம்பர் 4) மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், தனது வீட்டுக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக திருமலைக்கொழுந்துபுரம் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் காரில் வந்துள்ளனர். இதன்பிறகு நடந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தார், மாணவரின் தாய்.
“மதியம் 3 மணி இருக்கும். வீட்டுக்கு வருவதற்காக என் மகன் சாலையை கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தான். அப்போது காரில் வந்த சிலர் என் மகனை இடிப்பது போன்று வேகமாக ஓட்டியிருக்கின்றனர். ‘ஏன் இப்படி இடிப்பது போன்று போகிறீர்கள்?’ என அவர்களிடம் கேட்டிருக்கிறான். அதுக்கு காரில் இருந்த மூன்று பேரும் இறங்கி வந்து என் மகனுடைய சட்டையைப் பிடித்து அடித்திருக்கின்றனர்” என்கிறார் அவர்.
பதிலுக்கு தன் மகனும் அவர்களுடைய சட்டை காலரை பிடித்து கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“இதைப் பார்த்துவிட்டு அவர்களுடைய (பிற பிரிவை) ஆள் ஒருவர் வந்து, இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார். என் மகனும் வீட்டுக்கு வந்துவிட்டான்” என்கிறார்.
ஒன்பது பேர் நடத்திய தாக்குதல்
இதன்பிறகு மாலை 5.30 மணியளவில் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஒன்பது பேர் அந்த மாணவரின் வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கு தனியாக இருந்த அவரை அரிவாளால் கடுமையாக தாக்கியதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் துறை விசாரணையில் கூறிய அந்த மாணவர், “உள்ளே வந்தவர்கள் பீர் பாட்டிலால் தலையில் அடித்தனர். அரிவாளால் இரண்டு காலிலும் தலையிலும் வெட்டினார்கள். வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டனர். அவர்கள் சென்றது பக்கத்து வீட்டில் சென்று ஒளிந்துகொண்டேன். அங்கேயும் வந்து அடித்தனர்” எனக் கூறியிருக்கிறார்.
“அரிவாளால் காலில் வெட்டியதால் என் மகனால் எங்கும் ஓட முடியலை. அவனை படுக்க வைத்து வயிற்றில் உதைத்திருக்கின்றனர். பாட்டிலை வைத்து மண்டையில் அடித்ததும் வலி தாங்காமல் கீழே விழுந்துவிட்டான்.
ஆனால், ‘இன்னும் உயிரோடு தான் இருக்கிறான்’னு சொல்லி சொல்லி அடித்திருக்கின்றனர். அவர்களுடன் முன் பகை என எதுவும் இல்லை. சாலையில் கேள்வி கேட்டதற்காக அடித்திருக்கின்றனர். 17 வயது சிறுவனை ஒன்பது பேர் சேர்ந்து வெட்டியிருக்கின்றனர். எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்புகிறார் தாய் சுகந்தி.
தற்போது பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் காயமடைந்துள்ள மாணவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாலை மறியல்; போராட்டம்
மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மேலப்பாட்டம்-திருமலைக்கொழுந்துபுரம் கிராமங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தின.
இந்த தாக்குதலைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் பின்னணியில் உள்ள நபர்களைக் கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதாகக் கூறி, கடந்த செவ்வாய்கிழமை அருகில் மலைக்குன்றின் மீது ஏறி போராட்டம் நடத்தும் முயற்சியில் மேலப்பாட்டம் மக்கள் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து, கிராம மக்களிடம் நெல்லை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவரை தாக்கிய நபர்களைப் பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் எஸ்.பி., கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் மாணவரின் தாய் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாக்குதலில் தொடர்புடையதாக திருமலைக்கொழுந்துபுரம் கிராமத்தில் வசிக்கும் முத்துக்குமார், லட்சுமணன், தங்க இசக்கி உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலரை காவல்துறை தேடி வருகிறது.
கைதான நபர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை திருத்த சட்டம், கொலை முயற்சி, அவதூறாகப் பேசுதல் உள்பட எட்டு பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
டி.எஸ்.பி சொல்வது என்ன?
“மாணவரை தாக்கியதாக கைதான நபர்களும் 17 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் தான். இவர்களில் ஒரு நபர் மீது மட்டும் குற்ற வழக்குகள் உள்ளன” என்கிறார், பாளையங்கோட்டை டி.எஸ்.பி ரகுபதி ராஜா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “காரை மறிக்கும்போது இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளது” என்கிறார்.
இந்த சம்பவத்தால் இரு கிராமங்களிலும் பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார், டி.எஸ்.பி ரகுபதி ராஜா.
“4 சிறுவர்களால் ஏற்பட்ட பதற்றம்”
மாணவர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து, திருமலைக்கொளுந்துபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஐயப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது.
“இரு கிராம மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். நான்கு சிறுவர்களின் செயலால் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டுவிட்டது. இதைப் பற்றி மேலப்பாட்டம் கிராமத்தில் உள்ள ஊர்ப் பெரியவர்களிடமும் பேசியிருக்கிறோம்.
இதனால் இரண்டு ஊர்களுக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. காரை வேகமாக ஓட்டியதாக எழுந்த தகராறு தான் பிரச்னைக்கு காரணம். அந்த ஊர் வழியாகத் தான் நாங்கள் செல்ல வேண்டும்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த வழியாக செல்வதற்கு மேலப்பாட்டம் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இரு தரப்பிலும் எந்தப் பிரச்னையும் இல்லை” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.