நாய்கள் கடித்து உயிருக்கு போராடிய குரங்கு குட்டியை பராமரித்த மருத்துவருக்கு….. தெரு நாய்கள் கடித்ததால் உயிருக்கு போராடிய குரங்கு குட்டிக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர், வண்டலூர் பூங்காவில் உள்ள அந்த குட்டியைப் பார்வையிட அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கால்நடை மருத்துவர் ஏ.வல்லயப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் கடந்த 2023 டிசம்பர் 4-ம் தேதி நடந்தது. தெருநாய்கள் கடித்ததால் காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாவலர் ஒருவர் அங்கு கொண்டு வந்தார். எனது பராமரிப்பில் பல மாத சிகிச்சைக்கு பிறகு அந்த குரங்கு குட்டி குணமடைந்தது.
இந்நிலையில், அந்த குரங்கு குட்டியை கடந்த மாதம் 26-ம் தேதி என்னிடம் இருந்து வாங்கி சென்ற வனத்துறை அதிகாரிகள், தற்போது அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடைத்து வைத்துள்ளனர். அந்த குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதால், அந்த குட்டி பூரண குணமடையும் வரை எனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, கே.கேசவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதி, ‘‘வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அந்த குரங்கு குட்டியை வரும் நவம்பர் 9-ம் தேதி காலை 11 மணிக்கு கால்நடை மருத்துவரான மனுதாரர் நேரில் பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த குரங்கு குட்டி தனக்கு சிகிச்சை அளித்த மனுதாரரை அடையாளம் கண்டு கொண்டதா என்பது குறித்து வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.