தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி 2024.

by 9vbzz1

சுவிஸ் நாட்டில் எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத்  தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி

தமிழர் நினைவேந்தல் அகவத்தினால் 03.11.2024 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் பத்தாவது தடவையாக நடாத்தப்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி பேர்ண் மாநிலத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.

பொதுச்சுடர் ஏற்றலுடன்  தொடங்கிய இப்போட்டியானது முற்பகல் கவிதை எழுதுதலும் பிற்பகல் அதனை அவையோர் முன்னிலையில் சமர்ப்பித்தலுமாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.   கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவென நான்கு பிரிவுகளாக நடாத்தப்பட்ட இக்கவிதைப்போட்டியில் நாற்பது கவிஞர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மாவீரர் நினைவுகளைத் தாங்கியவாறு நேர்த்தியாக ஒப்பனை செய்யப்பட்டிருந்த மண்டபம் எழுச்சிக்கு வலுச்சேர்த்தது. தமிழீழம், மாவீரர், தமிழீழத் தேசியத் தலைவர், தமிழீழத் தேசிய சின்னங்கள் ஆகிய விடயப்பரப்புகளிலே கவிதைகள் படைக்கப்பட்டிருந்தன. 2024 ஆம் ஆண்டுக்கான எழுச்சிக்கவி விருதினை திரு. அன்ரனி டான்சன் அவர்கள் தனதாக்கிக் கொண்டார். பங்குபற்றிய அனைவரும் ஆர்வமும் இனப்பற்றும் மேலோங்க உணர்வெழுச்சியோடு கவிபாடியிருந்தமை பாராட்டுதற்குரியது. இவ்வாண்டு கூடுதலான இளையவர்கள் போட்டியில் பங்குபற்றியிருந்தமை நம்பிக்கை ஊட்டியது.

தமிழின உணர்வையும் வரலாற்றையும் கடத்துவதோடு தன்னம்பிக்கையம் ஆளுமையும் கொண்டவர்களாக வாழ்வதற்கும் இதுபோன்ற போட்டிகள் துணைபுரிகின்றமை மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டது. பங்குபற்றிய போட்டியாளர்களுக்கும் ஊக்குவித்து வழிகாட்டிய அனைவருக்கும் நிகழ்வு சிறப்புற உழைத்த எல்லோருக்கும் எமது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ்

தொடர்புடைய செய்திகள்