காவிரியில் தமிழக பங்கை மாதம்தோறும் வழங்க வேண்டும்: மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல் காவிரியில் தமிழகத்துக்கான பங்கினை மாதம்தோறும் வழங்க வேண்டும். காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தமிழக நீர்வளத்துறை செயலர் க.மணிவாசன் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம் ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலர் க.மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபிராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். உதவி செயற்பொறியாளர் குளஞ்சிநாதன், உதவிப் பொறியாளர் நிஷா ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த கூட்டம் முடிந்த பிறகு நீர்வளத் துறை செயலர் க.மணிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய பங்கு, அதுபோல தமிழகத்தில் இருந்து காரைக்காலுக்குச் சேர வேண்டிய பங்கு வழங்குவது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும். இந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி வரை நமக்கு வரவேண்டிய காவிரி நீர் 2.2 டிஎம்சி. ஆனால், 4.2 டிஎம்சி வந்து சேர்ந்துள்ளது. இந்த மாதம் முழுவதும் நமக்கு 13.78 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு தர வேண்டும். அதைத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
அதுபோல டிசம்பர் மாதத்தில் 7.35 டிஎம்சி தர வேண்டும். மொத்தமாக ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, 145.65 டிஎம்சி தர வேண்டும். ஆனால், 248 டிஎம்சி வந்து சேர்ந்துள்ளது. இருப்பினும், கர்நாடக அரசு தமிழகத்துக்கு மாதந்தோறும் தரவேண்டிய காவிரி நீரை வழங்க வேண்டும் என்றுதான் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதிக மழை பெய்து கர்நாடக அணைகளில் தேக்கி் வைக்க முடியாத நிலையில் திறந்துவிடப்படும் உபரிநீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 7,000 கனஅடி காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது. மழையும் பெய்து வருகிறது. அதனால் இந்தாண்டு டெல்டா பகுதி விவசாயத்துக்கும் குடிநீர் தேவைக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது. இருப்பினும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மாதந்தோறும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால்தான் விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழகம் சார்பில் தொடர்ந்து வலியுறத்தி வருகிறோம்.
தமிழக அரசு தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாகவே மேகேதாட்டு அணை குறித்து காவிரி மேலாண்மை வாரியத்தின் நிகழ்ச்சி நிரலிலேயே இல்லை. தமி்ழகம் காரைக்காலுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முறையாக வழங்க வேண்டும் என்று சொன்னார்கள். அதுபோல நாமும் முறையாக காரைக்காலுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். இவ்வாறு க.மணிவாசன் தெரிவித்தார்.