கடந்த அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களை ஒத்திவைக்க முடிவு – புதிய கல்வி அமைச்சு ! on Thursday, November 07, 2024
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்களை, ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க புதிய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சீர்திருத்த முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இச்சீர்திருத்தங்களின் கீழ், பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக ஒரு தொகுதி (அலகு) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான முன்னோடித் திட்டம் தேசிய கல்வி நிறுவனத்தால் (National Institute of Education) ஒன்று, ஆறு மற்றும் பத்தாம் ஆண்டு மாணவர்களைப் பயன்படுத்தி சுமார் இருநூறு பாடசாலைகளில் செயற்படுத்தப்பட்டது.
முன்னோடித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையையும் அந்நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கான (Module) தொகுதி முறையை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
இந்தச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலைக் கல்வியை பன்னிரண்டாம் வகுப்போடு முடித்துவிட்டு, பொதுத் தேர்வை பத்தாம் வகுப்பில் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டது.
இந்நிலையிலேயே புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை, ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது