கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பிடம் தோற்கும் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை தோற்கடித்து, அமெரிக்க அதிபராக மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைகிறார் டொனல்ட் டிரம்ப்.

டிரம்புக்கும் ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி, பலர் எதிர்ப்பார்த்தது போல மிக நெருக்கமானதாக இல்லை. 2020-ஆம் ஆண்டு போல் அல்லாமல், ஆரம்பம் முதலே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் பெரும்பாலான அமெரிக்கர்கள் டிரம்புக்கு தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் கடந்த ஜுலை மாதம் விலகிய பிறகு, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் கமலா ஹாரிஸ். 2016-ஆம் ஆண்டு டிரம்ப் அதிபரான போது ஹிலாரி கிளிண்டன் அவரிடம் தோல்வியை தழுவினார். அதன் பிறகு டிரம்புக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆவார்,

அவர் தோற்றதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள் என்னென்ன?

பொருளாதாரம்

வேலையின்மை குறைவாகவும், பங்குச் சந்தை வலுவாகவும் இருந்த போதிலும் கூட அமெரிக்கர்கள் பலர் பணவீக்கத்தின் விளைவுகளை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் அவர்களுக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. 1970-களில் இருந்ததை விட பணவீக்கம் அதிகரித்தது. இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்ப டிரம்புக்கு ஒரு வாய்ப்பாக இது அமைந்தது. “நீங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது செழிப்பாக இருக்கிறார்களா?” என்ற கேள்வியை அவர் மக்களிடம் முன் வைத்தார்.

2024-ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு பகுதிகளில், ஆட்சியில் இருக்கும் கட்சியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நிலவும் பணவீக்கம் இதற்கு ஒரு காரணமாகும். அமெரிக்க வாக்காளர்களும் மாற்றத்துக்காக காத்திருந்துள்ளனர்.

நான்கில் ஒரு அமெரிக்கர் மட்டுமே நாட்டின் போக்கு குறித்து திருப்தியாக இருக்கின்றனர். மூன்றில் இரண்டு பேர் நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரிய நம்பிக்கைக் கொள்ளவில்லை.

“பண வீக்க உயர்வுக்கு பைடனின், பெரிய செலவுகளை உள்ளடக்கிய திட்டங்களும் காரணமாகும். இது மக்களுக்கு கவலை அளிக்கக் கூடியதாகவே இருந்தது. பைடனின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகின. இதனால் கமலா ஹாரிஸுக்கு தேர்தல் வெற்றி சவாலானது” என்று வெளியுறவுக் கொள்கைகள் குறித்து எழுதி வரும் மைக்கேல் ஹிர்ஷ் கூறினார்.

சி.என்.என் ஊடகத்தின் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்புகளின் படி, பொருளாதாரத்தை கையாள்வதில் ஹாரிஸை விட டிரம்புக்கே தங்கள் ஆதரவு என 50%க்கும் மேலானவர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரம் தங்களின் பிரதான பிரச்னை என்று 31% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பைடனின் செல்வாக்கின்மை

கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பைடனின் பொருளாதாரக் கொள்கைகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன

மாற்றத்துக்கான வேட்பாளர் என்று கமலா ஹாரிஸ் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், ஜோ பைடன் ஆட்சியின் துணை அதிபராக இருந்து கொண்டு, தனது தலைமையிடமிருந்து தன்னை தனித்துக் காட்டுவதில் அவர் சிரமப்பட்டார்.

பணவீக்கத்தை கையாள்வதிலும், அமெரிக்கா – மெக்சிகோ எல்லை பிரச்னையை கையாள்வதிலும் அமெரிக்கர்களுக்கு பைடன் மீது அதிருப்தி இருந்த போதிலும், கமலா ஹாரிஸ் பைடனுக்கு விசுவாசமாக இருந்துள்ளார்.

இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாக, ஏபிசி ஊடகத்தின் தி வியூ என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பங்கேற்ற போது நிகழ்ந்ததை அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தனது பின்புலத்தைப் பற்றி தெரியாத அமெரிக்கர்களுக்கு கமலா ஹாரிஸ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பலர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தனர். ஆனால், பைடனை விட தான் எவ்வாறு மாறுபட்டவராக இருப்பார் என்று கேட்டதற்கு விளக்கமளிக்க கமலா தடுமாறினார். “எனக்கு எதுவும் தோன்றவில்லை” என்று அவர் பதிலளித்தார்.

இது டிரம்பின் பிரசார விளம்பரத்தில் பின்பு பயன்படுத்தப்பட்டது. இந்த உரையாடல் கமலாவுக்கு ‘நாசகரமானதாக’ அமைந்தது என்று பராக் ஒபாமாவின் முன்னாள் ஆலோசகர் டேவிட் எக்செல்ராட் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சியில் ஒரு “பிம்பச் சிக்கல்” நிலவுவதாக அந்தக் கட்சியுடன் தொடர்புடையவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒருவர், முதலில் கட்சியில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மேல்தட்டு ஆட்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று பிபிசியின் லோன் வெல்ஸிடம் கூறினார்.

வேறு சிலர், கட்சியின் பிரசாரத்துக்கான முயற்சிகளை பாராட்டினர். விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, கட்சியின்‘பிம்பச் சிக்கலுக்கு’ காரணம் என்று கருதினர்.

குடியரசு கட்சி ஆதரவாளருடன் டிரம்பின் பிரசாரக் கூட்டத்தின் போது நடந்த உரையாடல் தனக்கு நினைவுக்கு வருவதாக வெல்ஸ் கூறுகிறார்.

“குடியரசுக் கட்சியை டிரம்ப் முற்றிலும் ‘மறு உருவாக்கம்’ செய்துள்ளார் என்று அந்த ஆதரவாளர் கூறினார். மேல் தட்டு மக்களின் கட்சி என்ற பிம்பத்திலிருந்து விலகி, உழைக்கும் வர்க்கத்தினரை டிரம்ப் அணுகினார். அதே நேரம் ஜனநாயகக் கட்சியினர் ஹாலிவுட்டின் கட்சியாக மாறிவிட்டதாக அவர் கூறினார்” என்று வெல்ஸ் தெரிவித்தார்.

சமூக பிரச்னைகள்

கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கருத்தடை விவகாரத்தை கமலா ஹாரிஸ் கையில் எடுத்த வேளையில் குடியேற்ற விவகாரத்தை டிரம்ப் பேசினார்

பொருளாதாரத்தை தவிர, தேர்தலை தீர்மானிக்கக் கூடியவை உணர்ச்சி மிகுந்த விவகாரங்கள் ஆகும்.

கருத்தடை விவகாரத்தை ஜனநாயகக் கட்சியினர் கையில் எடுத்த போது, குடியேற்ற விவகாரம் குறித்து டிரம்ப் பேசினார்.

பைடனின் ஆட்சியில் நடைபெற்ற வரலாறு காணாத எல்லை மோதல்களும், குடியேற்றம் காரணமாக எல்லைக்கு அருகில் இல்லாத மாகாணங்களிலும் ஏற்பட்ட தாக்கங்களும், இந்த விவகாரத்தில் பைடனை விட டிரம்ப் மீது மக்கள் அதிக நம்பிக்கைக் கொள்ள காரணமாக இருந்தன என்று ப்யூ ஆய்வு மையம் நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

எடிசன் ஆய்வு கருத்துக்கணிப்புகளின் படி, கருத்தடை உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த கமலா ஹாரிஸின் தீவிர பிரசாரம், பெண் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு 54% ஆதரவை பெற்றுத் தந்தது. டிரம்புக்கு 44% ஆதரவு மட்டுமே இருந்தது. எனினும், 2020-ஆம் ஆண்டில் தனது போட்டியாளருக்கு 42% பெண் வாக்காளர்களின் ஆதரவு இருந்த போது, பைடனுக்கு 57% பெண்களின் ஆதரவு இருந்தது. தனது போட்டியாளரை விட கமலா பெற்றிருந்த முன்னிலை, பைடன் பெற்றிருந்ததை விட குறைவாகும். டிரம்பின் ஆதரவாளர்களில் 54% ஆண்கள், 44% பெண்கள் ஆவர்.

இறுதியில், 2022-ஆம் ஆண்டு கருத்தடை விவகாரத்துக்கு இருந்த தாக்கம் இந்த முறை இல்லை.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் ஹூவர் நிறுவனத்தில் உள்ள பிரிட்டன் அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் நியால் ஃபெர்குசன், “அமெரிக்க வாக்காளர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி கடந்த நான்கு ஆண்டுகளின் கொள்கைகளை மறுத்துள்ளனர்” என்கிறார்.

பண வீக்கத்தை உண்டாக்கிய பொருளாதாரக் கொள்கைகள், மத்திய கிழக்கில் போருக்கு இட்டுச் சென்ற வெளியுறவுக் கொள்கை, சமூக கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறுகிறார்.

“ஜனநாயக கட்சி தனது பல முற்போக்கான முன்னெடுப்புகளில், வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தை மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்கர்களையும், ஹிஸ்பானிக் மக்களையும் அந்நியப்படுத்தியது. நாடு முழுவதிலும் மக்களை அந்நியப்படுத்தியது” என்று அவர் பிபிசி ரேடியோ-4 நிகழ்ச்சியில் பேசிய போது தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சிக்கு தெளிவான செய்தி கிடைத்துள்ளது. அமெரிக்க மக்களுக்கு இந்த கொள்கைகள் தேவை இல்லை. அவர்களுக்கு வலிமையின் மூலம் அமைதி வேண்டும். பணவீக்கம் இல்லாத செழிப்பு வேண்டும்.

கருப்பின மற்றும் லத்தீன் வாக்காளர்களிடையே குறைந்த செல்வாக்கு

கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லத்தீன் அமெரிக்கர்கள், குறிப்பாக ஆண்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றார்.

பென்சில்வேனியா மாகாணத்தையும் அதன் 19 தேர்வாளர் குழு வாக்குகளையும் டிரம்ப் கைப்பற்றிய போது, அவர் வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் நுழையப் போகிறார் என்பது உறுதியானது. 1988-ஆம் ஆண்டு முதல் அந்த மாகாணத்தை ஜனநாயகக் கட்சி ஒரே ஒரு முறை மட்டுமே, 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டனை டிரம்ப் தோற்கடித்த போது மட்டுமே இழந்துள்ளது.

அரிசோனா, நெவேடா, ஜார்ஜியா, வட காரோலினா போன்ற முக்கியமான மாகாணங்களில் ஹாரிஸ் தனது பிரசாரத்தின் போது அதீத கவனம் செலுத்தியிருந்தார். டிரம்ப் ஆட்சியின் போது ஏற்பட்ட பிரிவினைகளால் வெறுப்படைந்த, அங்குள்ள ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களையும் தன் பக்கம் ஈர்க்க இந்த முயற்சிகளை ஹாரிஸ் மேற்கொண்டார். ஆனால் அது பலனளிக்கவில்லை.

கருப்பினத்தவர், லத்தீன் அமெரிக்கர்கள், இளம் வாக்காளர்களிடம் ஜனநாயகக் கட்சிக்கு வழக்கமாக கிடைக்கும் ஆதரவு இந்த முறை சிதறியது. கல்லூரி படிப்பை முடிந்த நகரவாசிகளிடம் கமலா தனது ஆதரவை தக்க வைத்துக் கொண்டாலும், ஜனநாயகக் கட்சியின் கோட்டைக்குள் டிரம்புக்கு கிடைத்த ஆதரவை தோற்கடிக்க அது போதவில்லை.

எடிசன் ஆய்வு மையத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, கமலா ஹாரிஸ் கருப்பின மக்களின் 86% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 53% வாக்குகளையும் பெறுவார் என்று கூறியது. எனினும் 2020-ஈல் பைடன் இதை விட அதிக முன்னிலை வகித்திருந்தார். அவர் கருப்பின மக்களின் 87% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 65% வாக்குகளையும் பெற்றிருந்தார்.

லத்தீன் ஆண் வாக்காளர்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர்களிடம் கமலாவுக்கு 44% வாக்குகளும் டிரம்புக்கு 54% வாக்குகளும் இருந்தன. இதே பிரிவு மக்களிடம் பைடனுக்கு 2020-ஈல் 59% வாக்குகள் இருந்தன.

குடியரசுக் கட்சிக்கு ஆதரவான கிராமப்புற பகுதிகளில், 2020-ஆம் ஆண்டு பைடனுக்கு கிடைத்ததை விட, ஹாரிஸுக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன. இது 2016-ஆம் ஆண்டு கிளிண்டனுக்கு கிடைத்த ஆதரவுக்கு நிகராக குறைவாகவே இருந்தது.

டிரம்பை மையப்படுத்திய பிரசாரம்

கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம், Getty

2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் செய்தது போலவே, கமலா ஹாரிஸும் டிரம்பை மையப்படுத்தியே தனது பிரசாரத்தை மேற்கொண்டார். இந்த தேர்தலை டிரம்ப் மீதான பொது வாக்கெடுப்பாக அவர் முன்னிறுத்தினார். பிரசாரத்தின் கடைசி வாரங்களில், வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் (chief of staff) ஜான் கெல்லி, டிரம்ப் ஹிட்லரை ஆராதிப்பவர் என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, “டிரம்பை பாசிசவாதி, மனநோயாளி, நிலையற்றவர்” என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். இந்த தேர்தலை ஜனநாயகத்துக்கான போராட்டம் என்று கமலா ஹாரிஸ் வர்ணித்தார். ஜூலை மாதம் அதிபர் தேர்தலில் இருந்து விலகும் முன் பைடனும் இதையே தான் கூறியிருந்தார்.

“டொனால்ட் டிரம்பை தாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்திய கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்” என்று தனது எக்ஸ் பக்கத்தில், தேர்தல் கருத்து கணிப்பாளர் ஃப்ராங் லுண்ட்ஸ் பதிவிட்டிருந்தார்.

“டிரம்பைப் பற்றி வாக்காளர்களுக்கு ஏற்கனவே தெரியும். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அவர் முதலாம் ஆண்டில் என்ன செய்வார் என்று தெரிந்துக் கொள்ளவே மக்கள் விரும்பினர்” என்று அவர் கூறியிருந்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.