அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வென்றது எப்படி?
- எழுதியவர், சாரா ஸ்மித்
- பதவி, வட அமெரிக்க ஆசிரியர்
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் இது மிகவும் சிறப்பு மிக்க மீள்வரவாக (comeback) பார்க்கப்படுகிறது.
கோடிக்கணக்கான அமெரிக்க மக்கள் டிரம்ப் அதிபராக இரண்டாவது வாய்ப்பு வழங்கியுள்ளனர். இதனால் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அங்கு செல்ல இருக்கிறார்.
அவரது தேர்தல் பிரசாரமும் வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்தது. அதில் அவர் இரண்டு கொலை முயற்சிகளில் இருந்து தப்பினார். அவரது போட்டியாளரான தற்போதைய அதிபர் ஜோ பைடன் தேர்தல் நாளுக்கு சில மாதங்களுக்கு முன்பு போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் உள்ள மக்கள் பொருளாதாரம் மற்றும் குடியேற்ற பிரச்னையை ஒரு முக்கிய கவலையாகக் குறிப்பிட்டு வந்தனர். அங்கு உள்ள பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர்.
அவரது இந்த வெற்றி ஒரு மாபெரும் தோல்விக்கு பிறகு வருகிறது. 2020 அதிபர் தேர்தலில் அவர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். அதை ஏற்க அவர் மறுத்தார். அதிபர் பதவியில் நீடிக்க தேர்தல் முடிவுகளை மாற்றவேண்டும் என்றும் அவர் கோரி வந்தார்.
2021 ஜனவரி 6 ஆம் தேதி அன்று, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறை தாக்குதல்களை தூண்டியதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று அதிபர் பதவி வகிக்க இருக்கும் முதல் நபர் என்ற வரலாற்றையும் அவர் உருவாக்குவார்.
தனது அரசியல் எதிரிகளை பழிவாங்குவதாக அச்சுறுத்துவது, முறையற்ற நகைச்சுவைகளை செய்வது என்று அவர் தனது சொல்லாட்சியை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்தார்.
பொருளாதாரம் பற்றி டிரம்ப் பேச்சு
டிரம்ப் விஷயத்தில் சில மக்கள் நடுநிலையான கருத்தை கொண்டுள்ளார்கள். பிரசாரத்தின் போது நான் பேசிய பெரும்பாலான வாக்காளர்கள், “டிரம்ப் ஏதும் பேசாமல் இருக்க வேண்டும்”, என்று விரும்புவதாக தெரிவித்தனர். ஆனால் இவர்களால் அவரது சொல்லாட்சியை கடந்து ஆராய்ந்து பார்க்க முடிந்தது.
அந்த மக்கள், ஒவ்வொரு பிரசார பேரணியிலும் டிரம்ப் கேட்ட கேள்விகள் மீது கவனம் செலுத்தினர். “இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?”
டிரம்ப் பதவியில் இருந்தபோது பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருந்ததாக அவர்கள் உணர்ந்ததாகவும், தற்போது செலவுகளை சமாளிக்கும் முயற்சிகளில் அவர்கள் சலித்துப் போயிருப்பதாகவும் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களித்த பலர் என்னிடம் கூறினர். அமெரிக்க பொருளாதாரத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று போன்ற பிற காரணங்களால் பணவீக்கம் ஏற்பட்டாலும், அமெரிக்க மக்கள் அப்போதைய அரசாங்கத்தையே குற்றம் சாட்டினர்.
பைடன் அரசின் கீழ் சட்டவிரோத குடியேற்றம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியது, இதனால் அமெரிக்க மக்கள் மிகவும் கவலை கொண்டிருந்தனர். டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறியது போல, அமெரிக்க மக்கள் குடியேறிகள் மீது இனவெறி கருத்துகளை வெளிப்படுத்தவில்லை அல்லது அவர்கள் செல்லப்பிராணிகளை உண்ணுகிறார்கள் என்றும் நம்பவில்லை. அமெரிக்க மக்கள் எல்லையில் வலுவான நிர்வாகத்தையே விரும்பினர்.
“அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை”
“அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை” என்பது டிரம்பின் மற்றொரு முழக்கமாகும். இது உண்மையில் வாக்காளர்களை மிகவும் கவர்ந்தது. யுக்ரேனுக்கு ஆதரவு அளிப்பதற்காக பில்லியன்கணக்கான டாலர்கள் செலவளிக்கப்படுவதைப் பற்றி நாடு முழுவதும் மக்கள் குற்றம் சாட்டுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கமலா ஹாரிஸ் அதிபரானால், இந்த நிலை இன்னும் அதிகமாக இருக்கும் என்று அமெரிக்கர்கள் கருதினார். அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர். இதனால் நான்கு ஆண்டுகள் பைடன் ஆட்சியில் துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்க அவர்கள் விரும்பவில்லை.
மாற்றத்தை விரும்பிய மக்கள், வாக்களிக்க வேண்டிய மற்றொரு வேட்பாளர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தில் இருந்தவர் என்பதே இந்த தேர்தலின் முரணாக இருந்தது. ஆனால் அதிலும் தற்போது பல வேறுபாடுகள் உள்ளன.
2016 ஆம் ஆண்டு டிரம்ப் முதன்முதலில் ஆட்சிக்கு வந்த போது, சில காலத்திற்கு அவர் அரசியலில் ஒரு புதிய முகமாக இருந்தார். அவர் மூத்த அரசியல் ஆலோசகர்கள் மற்றும் பிற ஊழியர்களின் உதவி கொண்டே அரசியல் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் தற்போது அவர் அரசியல் விதிகளின் படி செயல்பட ஆர்வம் காட்டவில்லை.
இதே ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் அவரை “பொய் கூறுபவர்”, “பாசிஸ்ட்” மற்றும் “தகுதியற்றவர்” என்று அழைத்தனர். அவர் தனது விசுவாசிகளுடன் மட்டுமே இருந்தால், அவரது முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளை தடுக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அவர் பதவியை விட்டு வெளியேறியதும், அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலில் பங்கு வகித்ததாகவும், தேசிய பாதுகாப்பு ஆவணங்கள் தொடர்பாகவும், ஒரு ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாகவும் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
அதிபர் பதவியில் இருக்கும் போது, ஒருவர் செய்த எந்த ஒரு செயல்பாடுகளையும் எதிர்த்து அவர் மீது குற்றம் சுமத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
டிரம்ப் அதிபரான பிறகு, ஜனவரி 6 வன்முறை தொடர்பான அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு நீதித்துறைக்கு அறிவுறுத்தலாம். அவர் சிறை தண்டனை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதே சமயம், நாடாளுமன்ற வன்முறையில் ஈடுபட்டதாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்களை மன்னித்து விடுவிக்க அவரால்ர முடியும்.
இறுதியில், வாக்காளர்களுக்கு அமெரிக்காவின் இரண்டு வெவ்வேறு தெரிவுகள் முன்வைக்கப்பட்டன.
தற்போது தோல்வியுற்ற நாடாக இருக்கும் அமெரிக்காவை தன்னால் மட்டுமே மீண்டும் சிறந்த நாடாக்க முடியும் என்று டொனால்ட் டிரம்ப் அவர்களிடம் கூறினார்.
மறுபுறம், டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க ஜனநாயகமே அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்று கமலா ஹாரிஸ் எச்சரித்தார். தற்போது அவர் கூறியது போல நடக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பிரசாரத்தின் போது டிரம்ப் குறிப்பிட்ட ஒன்று மக்கள் மனதில் ஏற்படுத்திய அச்சம் இன்னும் விலகவில்லை. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போன்ற சர்வாதிகார தலைவர்களுக்கு அவர் பாராட்டுகளை தெரிவித்து வந்தார். “நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் அரசியலில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்”, என்று அவர் தெரிவித்தார்.
பத்திரிகைகளில் விமர்சகர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்பதாக பேசியுள்ளார். ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டாலும் அவர் பொருட்படுத்தப் போவதில்லை என்று தேர்தலுக்கு சில நாள் முன்பு அவர் தெரிவித்தார்.
சதி கோட்பாடுகளையும், ஆதாரமற்ற தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளையும் குறித்து அவர் வலுவாக கருத்து தெரிவித்து வருகிறார். ஆனால் அதே தேர்தலில் தான் அவர் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
பிரசாரத்தின் போது அவர் பேசியதில் எவை சரியானவை என்பது இனிமேல் தான் மக்களுக்கு தெரியவரும். இரண்டாவதாக டிரம்ப் பதவிக்காலத்தில் அவரது செயல்பாடுகளின் விளைவை எதிர்கொள்ள வேண்டியது அமெரிக்கர்கள் மட்டுமல்ல.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 20% வரை வரி விதிக்கப்படும், யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் நடக்கும் போர்கள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று அவர் முன்மொழிவுகள் செய்துள்ளார். “அமெரிக்காவின் நலனுக்கே முன்னுரிமை” என்பதற்கு உண்மையில் என்ன அர்த்தம் என்பதை உலகின் மற்ற நாடுகளுக்கு இனிமேல் தெரியவரும்.
டொனால்ட் டிரம்ப் முதல் பதவிக்காலத்தில் அவரது திட்டங்களை எல்லாம் செயல்படுத்த முடியவில்லை. இப்போது இரண்டாவது முறை பதவிக்கு வந்த பிறகு, அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அமெரிக்காவும் உலகமும் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.