கனடாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த தூதரக முகாம்களை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்துள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு வாழ்க்கைச் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்ட தூதரக முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து இந்திய தூதரகம் தெரிவிக்கையில், “சமூக முகாம் அமைப்பாளர்களுக்கு பாதுகாப்பு நிறுவனங்கள் தங்களது குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்க முடியாததால் திட்டமிடப்பட்ட சில தூதரக முகாம்களை ரத்து செய்ய துணைத் தூதரகம் முடிவு செய்துள்ளது.
உள்ளூர் இணை அமைப்பாளர்களின் முழு ஒத்துழைப்புடன் எங்கள் துணைத் தூதரகங்களால் ஏற்பாடு செய்யப்படும் வழக்கமான தூதரகப் பணிகளுக்கு இதுபோன்ற இடையூறுகள் அனுமதிக்கப்படுவதைப் பார்ப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்திய குடிமக்கள் உள்பட விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பில் நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இவ்விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.
இதற்கிடையே கனடாவின் பிரம்ப்டன் நகரில் இந்து கோவிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.