அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றது குறித்து அமெரிக்கவாழ் தமிழர்கள் என்ன நினைக்கின்றனர்?
- எழுதியவர், விஷ்ணு வி ராஜா, நியூயார்க் மற்றும் ஐயப்பன் கோதண்டராமன், வாஷிங்டன் டி.சி.
- பதவி, பிபிசி தமிழுக்காக
அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்கவுள்ளார் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப். அவர் பெற்றுள்ள தேர்வாளர் குழு வாக்குகள் 294. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் பெற்றுள்ள தேர்வாளர் குழு வாக்குகள் 223.
தேர்தலுக்கு முன் அமெரிக்கவாழ் தமிழர்கள் பலரிடம் பேசியபோது, கமலா ஹாரிஸுக்கு ஆதரவான மனநிலையில் இருந்ததை காண முடிந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை டிரம்ப் கைப்பற்றியிருப்பது குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
இந்தத் தேர்தலில் ‘நாட்டின் பொருளாதாரம் மற்றும் குடியேற்றப் பிரச்னையை’ முன்னிறுத்தியே டிரம்ப் பரப்புரை செய்தார். அப்படியிருக்க குடியேற்றக் கொள்கைகளில் அவர் கொண்டுவரப்போகும் மாற்றங்கள் குறித்து அவர்களின் கருத்து என்ன?
‘டிரம்பின் வரவு அமெரிக்காவிற்கு சாதகமல்ல’
டெக்சாஸ் மாகாணத்தில் வங்கியாளராக பணிபுரியும் கீர்த்தி ஜெயராஜ், டொனால்ட் டிரம்ப் அதிபராவது அமெரிக்காவிற்கும் நேட்டோ நாடுகளுக்கும் சாதகமான விஷயம் அல்ல என்று பிபிசி தமிழிடம் கூறினார்.
“டிரம்பிற்கு எனது வாழ்த்துகள். ஆனால், நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அமெரிக்காவிற்கும் நேட்டோ (NATO) நாடுகளுக்கும் நல்லதல்ல. காரணம், நேட்டோவுக்கான ஆதரவை அவர் குறைப்பார். 2021ஆம் ஆண்டு, ஜனவரி 6ஆம் தேதி, அமெரிக்கா மீது இவரது தூண்டுதலின் ஒரு தாக்குதல் நடைபெற்றதை மறக்க முடியாது.” என்கிறார் ஜெயராஜ்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2020 அதிபர் தேர்தலில், டிரம்பை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் தோற்கடித்தார். அந்தத் தேர்தல் முடிவுக்கு எதிராகச் சவால் விடுத்த டிரம்பின் வாதங்களை நீதிமன்றங்கள் நிராகரித்தன.
தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து, டிரம்ப் வாஷிங்டனில் ஆதரவாளர்களைத் திரட்டினார். பைடனின் வெற்றிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் முறையாகச் சான்றளிக்க வேண்டிய நாளில் (ஜனவரி 6, 2021) ஆதரவாளர்களை அலுவலகத்தில் ஒன்றிணைய டிரம்ப் வலியுறுத்தினார். அந்தப் பேரணி ஒரு கலவரமாக மாறியது. நூற்றுக்கணக்கான சட்ட அமலாக்க அதிகாரிகள் காயமடைந்தனர்.
“பெண்கள், பால் புதுமையினர் (LGBTQIA+) சமூக நல ஆர்வலர்களுக்கும் டிரம்பின் வரவு நல்லதல்ல. அவரால் பயனடையப்போவது அவரது பணக்கார நண்பர்கள் தான், காரணம் அவர் உறுதியளித்துள்ள வரிச் சலுகைகள்,” என்று கூறுகிறார் ஜெயராஜ்.
‘டிரம்ப் ஆட்சியில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்’
டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சதீஷ் பூண்டி ஜெயராமன் பேசுகையில், “டிரம்பின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்” என தான் நம்புவதாக தெரிவித்தார்.
“டிரம்ப் பெற்றிருப்பது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. முதல் காரணம், 2016இல் அவர் முதல்முறையாக வெற்றி பெற்ற போது கூட அதிக வெகுமக்கள் வாக்குகளை (popular vote) பெற முடியவில்லை. ஆனால், இம்முறை அதிக வெகுமக்கள் வாக்குகளை அவர் வென்றுள்ளார்.” என்கிறார் சதீஷ்.
கடந்த 2016ஆம் ஆண்டு, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது போட்டியாளரான ஹிலாரி கிளிண்டனைவிட சுமார் 30 லட்சம் வாக்குகள் குறைவாகவே பெற்றிருந்தார். இவை அமெரிக்க மக்கள் அளித்த வாக்குகள் (Popular vote). ஆனால், போதுமான தேர்வாளர் குழு வாக்குகளை ஹிலாரி கிளிண்டன் பெறாததால் டிரம்ப் அதிபராக அறிவிக்கப்பட்டார்.
“இரண்டாவது, பெரும்பான்மையான செனட் அவை உறுப்பினர்கள் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது. மூன்றாவது, பிரதிநிதிகள் அவையின் அதிகாரத்தையும் குடியரசுக் கட்சி கைப்பற்றும் எனத் தெரிகிறது. ஒரு நெருக்கடியான தேர்தலிலும் இதை அவர் சாதித்துள்ளார். ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றுவோம்’ (Make America great again) என்ற டிரம்பின் முழக்கத்திற்கு ஏற்ப, அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரம் புதிய உயரத்தை அடையும் என நம்புகிறோம்.” என்று கூறினார் சதீஷ்.
‘இது மாற்றத்திற்கான தேர்தல்’
வடக்கு கரோலினா மாகாணத்தில் வசிக்கும், தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர் ரம்யா ரவீந்திரன், “குடியேற்றப் பிரச்னை, மத்திய கிழக்கு மற்றும் யுக்ரேன்-ரஷ்யா போர்கள், அமெரிக்காவின் பொருளாதாரச் சூழல், இம்மூன்றும் தான் டிரம்பின் வெற்றிக்குக் காரணம். மறுபுறம், கருக்கலைப்பு உரிமைகள், நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரச் சூழல், எல்லோருக்குமான மருத்துவச் சேவைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி போட்டியிட்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெறவில்லை”.
“இது மாற்றத்திற்கான தேர்தல். ஏனெனில் மற்ற எல்லாவற்றையும் விட பணவீக்கம், விலைவாசி உயர்வு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை யார் சரி செய்யக்கூடும் என்ற அடிப்படையில் டிரம்பை அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் கணிப்பு சரியா என்பது அடுத்து வரக்கூடிய 4 ஆண்டுகளில் தெரியும்” என்று கூறினார்.
அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. 1970-களில் இருந்ததை விட பணவீக்கம் அதிகரித்தது.
சி.என்.என் ஊடகத்தின் தேர்தலுக்குப் பிந்தையை கருத்து கணிப்புகளின் படி, பொருளாதாரத்தை கையாள்வதில் ஹாரிஸை விட டிரம்புக்கே தங்கள் ஆதரவு என 50%க்கும் மேலானவர்கள் தெரிவித்திருந்தனர். பொருளாதாரம் தங்களின் பிரதான பிரச்னை என்று 31% வாக்காளர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
‘பல இந்திய அமெரிக்கர்கள் டிரம்பிற்கு வாக்களித்தனர்’
டெக்சாஸ் மாகாணத்தின் டாலஸ் நகரில் வசித்து வரும் பாரி டேன்பால், ஓரல்ஸ் எல்எல்சி (Orals, LLC) எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “டெக்சாஸில் நாங்கள் ஒரு 150 பேர் குழுவாக இணைந்து, கடந்த 2 ஆண்டுகளாகவே டிரம்ப் வெற்றி பெறவேண்டுமென பல முயற்சிகள் எடுத்தோம். அவரது பிரசாரங்களிலும் கலந்து கொண்டோம். பொருளாதாரத்தையும், சட்டவிரோத குடியேற்றத்தையும் சரி செய்வேன் என அவர் கூறியுள்ளார். எனவே தான் அவருக்கு ஆதரவாக செயல்பட்டோம்” என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியேற்றம் தொடர்பான விவகாரங்கள் ஒரு முக்கியப் பிரச்னையாக எழுப்பப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக, டொனால்ட் டிரம்ப் குடியேற்றத்திற்கு எதிராகப் பலமுறை எச்சரிக்கை விடுத்தார். சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த பெரும் பகுதியினரை அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதாக உறுதியளித்தார்.
“அமெரிக்கர்களின் வளர்ச்சிக்காக செலவிடப்பட வேண்டிய நிதி, சட்டவிரோத குடியேற்றப் பிரச்னைக்கு செலவிடப்படுகிறது என்ற வருத்தம் எல்லோருக்கும் உள்ளது. அதுமட்டுமல்லாது, சட்டப்பூர்வமான குடியேற்றத்தில் உள்ள சிக்கல்களையும் தீர்ப்பதாக அவர் கூறியுள்ளார். இது இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் தான் பல இந்திய அமெரிக்கர்கள் அவருக்கு வாக்களித்தனர்” என்று கூறுகிறார் பாரி.
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2023இல் சுமார் 4.78 கோடியை எட்டியது. அமெரிக்க மக்கள்தொகையில் இது 14.3 சதவிகிதம். இதில் அதிகபட்சமாக 1.06 கோடி பேர் மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்கா வந்தவர்கள். இதற்கு அடுத்தபடியாக, சுமார் 28 லட்சம் இந்தியர்களும் சுமார் 25 லட்சம் சீனர்களும் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் மக்கள்தொகையில் பங்கு வகிக்கின்றனர்.
‘அமெரிக்கர்கள் எடுத்த சிறந்த முடிவு’
அமெரிக்காவில் உள்ள குடியரசு இந்து கூட்டணியின் (Republican Hindu Coalition- ஆர்எச்சி) செயற்குழு உறுப்பினர் சேஷா பரிமலரங்கன், “டிரம்பைத் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம், ஒரு மிகச்சிறந்த முடிவை அமெரிக்க மக்கள் எடுத்திருக்கிறார்கள்.” என்று கூறுகிறார்.
குடியரசு இந்து கூட்டணி என்பது அமெரிக்காவில் உள்ள இந்து-அமெரிக்கர்களின் நலன் சார்ந்த ஒரு பழமைவாத குழுவாகும். இந்து-அமெரிக்க சமூகத்திற்கும் குடியரசுக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தலைவர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்பட 2015இல் இது நிறுவப்பட்டது.
“நாட்டின் தெற்கு எல்லை வழியாக பலர் சட்டவிரோதமாக உள்ளே வருகிறார்கள். அமெரிக்கர்களின் வரிப்பணம் அவர்களைப் பாதுகாக்க பயன்படுகிறது. உலகின் பல பகுதிகளில் நடக்கும் போர்களால் பாதிக்கப்பட்டுள்ள உலக அமைதி, உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் தலையீடு, இதையெல்லாம் சரிசெய்ய அமெரிக்காவிற்கு ஒரு சக்தி வாய்ந்த தலைவர் தேவை. அது டிரம்ப் தான் என நம்பி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர்.” என்று கூறுகிறார் சேஷா பரிமலரங்கன்.
தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், அமெரிக்கர்களில் கால்வாசி பேர் மட்டுமே அமெரிக்கா சென்று கொண்டிருக்கும் பாதையில் திருப்தி அடைந்துள்ளனர் என்றும், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பொருளாதாரம் மோசமாக உள்ளது என்ற கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.
கோடிக்கணக்கில் நிதியை யுக்ரேனுக்கும், இஸ்ரேலுக்கும் அமெரிக்கா அனுப்புகின்ற சூழலில், நிறைய அமெரிக்கர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும் அமெரிக்கா ஜோ பைடனின் ஆட்சியின் கீழ் பலவீனமாக இருந்தது என்ற கருத்தும் நிலவுகிறது.
‘டிரம்ப் அதிபரானது பெரும் வருத்தம்’
அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வரும் பிரியா சங்கர் பிபிசியிடம் பேசுகையில், “ஒரு பெண்ணை தங்களின் அதிபராக ஏற்றுக்கொள்ள அமெரிக்கர்கள் இன்னும் தயாராகவில்லை என்றே நான் நினைக்கிறேன்” என்கிறார்.
“டிரம்ப் தான் வெற்றி பெறுவார் என தெரியும், ஆனால் கமலா ஹாரிஸ் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். ஆனால், மக்கள் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். கருக்கலைப்பு உரிமைகள் தொடர்பான விஷயத்தில் கமலா ஹாரிஸுக்கு பெண்கள் ஆதரவு இருந்தது. ஆனால், பெரும்பாலான ஆண்கள் டிரம்புக்கு வாக்களித்துள்ளார்கள் என நினைக்கிறேன்” என்கிறார் பிரியா.
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை, கடந்த 2022இல் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. கருக்கலைப்பு தொடர்பான நடைமுறைகளை ஒழுங்கப்படுத்தும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களிடமே மீண்டும் அளித்தது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கருக்கலைப்புக்கான தடைகள் அதிகரித்து வருவதைப் பற்றி பேசுவதற்காக கமலா ஹாரிஸ் நாடு முழுவதும் பயணம் செய்தார். கருக்கலைப்பு மருத்துவமனைக்குச் சென்ற முதல் துணை அதிபர் இவர்தான். எனவே, இந்த விவகாரம் அவருக்கு சாதகமாக பார்க்கப்பட்டது.
“அதிபர் பதவி, பிரதிநிதிகள் அவை, செனட் என அனைத்தும் குடியரசுக் கட்சியின் கையில் உள்ளது. எனவே, மசோதாக்களை எந்தத் தடையும் இன்றி நிறைவேற்றுவார்கள். அவர்கள் பொறுப்பாக இருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், ஒரு புலம்பெயர்ந்தவர் என்ற முறையில், டிரம்ப் அதிபரானது எனக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது” என்கிறார் பிரியா.
‘டிரம்பின் வருகை இந்தியர்களை பாதிக்கும்’
விர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸ் நகரில் வசித்துவரும் வழக்கறிஞர் அச்சுதன் ஸ்ரீஸ்கந்தராஜா, “டிரம்ப் நிச்சயம் குடியேற்றக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருவார், அது இந்தியர்களை பாதிக்கும்” என்று கூறுகிறார்.
குடிவரவு சட்டம் மற்றும் உலகளாவிய சட்ட சிக்கல்களில் நிபுணத்துவம் பெற்ற அச்சுதன், “கடந்த முறை டிரம்ப் அதிபராக இருந்தபோது கூட எச்1பி விசாவில் மாற்றம் கொண்டு வர அவர் முயற்சிகள் செய்தார். இப்போது செனட் சபையிலும் பெரும்பான்மை இருப்பதால், எச்1பி விசா குறித்த புதிய சட்டங்களை டிரம்ப் எளிதாக இயற்றுவார். அதனால் நிச்சயம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார்.
அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகின்றனர், அவர்கள் எச்1பி விசாவில் அங்கு செல்கின்றனர். டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் எச்1பி விசா விதிகளில் கடுமை காட்டினார். அதன் தாக்கம் இந்தியப் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பிரதிபலித்தது.
இந்தக் கொள்கை தொடர்ந்தால், அமெரிக்காவில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறையும். கடுமையான குடியேற்றக் கொள்கை, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளில் முதலீடு செய்ய ஊக்குவிக்கக் கூடும்.
“பொருளாதாரம் மற்றும் குடியேற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவார் என்பதற்காக தான் அமெரிக்க மக்கள் டிரம்புக்கு வாக்களித்துள்ளனர். எனவே, எச்1பி விசாவில் தங்கியிருக்கும் இந்தியர்கள், புதிய விதிகள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். விரைவில், கிரீன் கார்டு பெற முயற்சிக்க வேண்டும்.” என்று அறிவுறுத்துகிறார் அச்சுதன் ஸ்ரீஸ்கந்தராஜா.
அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கவும் வேலை செய்யவும் அவசியமான கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால் கிரீன் கார்டுகளின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது.
யு.எஸ்.சி.ஐ.எஸ் (USCIS) எனப்படும் அமெரிக்க குடியேற்ற நிறுவனத்தின் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டில் பத்து லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக வரிசையில் காத்திருந்தனர்.
அதேபோல, ஒவ்வோர் ஆண்டும் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதற்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, யு.எஸ்.சி.ஐ.எஸ் இந்தத் தேர்வை லாட்டரி முறை மூலம் செய்கிறது. கடந்த ஆண்டு நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இருந்தனர், ஆனாலும் 85,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
“இருப்பினும் டிரம்பின் வருகை அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என நினைக்கிறேன். கடந்த முறை அதிபராக இருந்தபோது (2016-2020) அதை அவர் செய்து காட்டினார். எனவே, அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்முனைவோருக்கு அவரது வருகை நிச்சயம் பயனளிக்கும்” என்று கூறுகிறார் அச்சுதன் ஸ்ரீஸ்கந்தராஜா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.