அமெரிக்க அதிபர் தேர்தல் நாளன்று இஸ்ரேலில் ராணுவ அமைச்சர் பதவிநீக்கம் – மக்கள் போராட்டம் ஏன்?
- எழுதியவர், ஜான் டொன்னிசன், ஜார்ஜ் ரைட்
- பதவி, பிபிசி செய்திகள்
-
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்டை பதவியில் இருந்து நீக்கிய பிறகு போராட்டங்கள் வெடிக்கத் துவங்கியுள்ளது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட நம்பிக்கையின்மை காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக நெதன்யாகு அறிவித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக கேலண்ட் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையத் துவங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள இஸ்ரேல் கட்ஸ் பாதுகாப்பு அமைச்சராகிறார்.
மூன்று முக்கியமான விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது என்று கேலண்ட் கூறியிருக்கிறார். காஸாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களை, சில தியாகங்கள் செய்வதன் மூலமாக மீட்டுவிடக் கூடும் என்ற அவரது நம்பிக்கையும் இந்த விவகாரத்தில் ஒன்று.
இந்த சூழலில் நெதன்யாகு பதவி விலகவும், பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்க முக்கியத்துவம் அளிக்கும் நபரை பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கவும் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நெதன்யாகு – கேலண்ட் கருத்து முரண்பாடு
நெதன்யாகுவும் கேலண்டும் மாறுபட்ட கருத்துகளோடு ஒன்றாக பணிபுரிந்த ஒரு வரலாற்றை கொண்டிருக்கின்றனர். கடந்த காலங்களில் இஸ்ரேலின் போர் யுத்திகள் குறித்த மாறுபட்ட கருத்துகள் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
மத ரீதியாக தீவிரமான மரபுகளைப் பின்பற்றுகிற இஸ்ரேல் குடிமக்கள் ராணுவத்தில் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதை எதிர்த்தார் கேலண்ட்.
2023-ஆம் ஆண்டு காஸாவில் போர் துவங்குவதற்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக கேலண்ட்டை நெதன்யாகு பதவியில் இருந்து நீக்கினார். பொதுமக்களின் போராட்டங்களுக்கு பிறகு அவர் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார்.
ஆனால் செவ்வாய்க்கிழமை அன்று (நவம்பர் 06), “முன்பைக் காட்டிலும் போருக்கு மத்தியில் பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே முழுமையான நம்பிக்கை தேவையாக இருக்கிறது,” என்று கூறினார் நெதன்யாகு.
“போரின் ஆரம்ப காலத்தில் அது பலனளிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது, கடந்த சில மாதங்களாக அந்த நம்பிக்கை முழுமையாக தகர்ந்து போயுள்ளது” என்று கூறினார் நெதன்யாகு.
அரசாங்கம் எடுத்த முடிவுகளுக்கு எதிர்மாறான அவரது கருத்துகளும் செயல்பாடுகளும் இந்த நம்பிக்கை இழப்புக்கு காரணமாக அமைந்தன என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தி வெளியான பிறகு, சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேலண்ட், “இஸ்ரேலின் பாதுகாப்பு தான் என்னுடைய வாழ்க்கையின் இலக்காக இருந்தது. அதுவே என் வாழ்நாள் முழுவதும் இலக்காக இருக்கும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
“மூன்று முக்கியமான விவகாரங்களில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள்,” காரணமாகவே இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட முழுமையான அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ராணுவ சேவைகளில் யாருக்கும் விலக்கு அளிக்கக் கூடாது, காஸாவில் பிணைக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை உடனே அழைத்து வர வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
பிணைக்கைதிகள் குறித்து குறிப்பிட்ட போது, “இதில் வெற்றி பெற வலி மிகுந்த சில தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். இஸ்ரேலும், இஸ்ரேல் ராணுவப்படையும் அந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் போராட்டம்
இந்த அறிவிப்பு வெளியான பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரான யெய்ர் அமித், “நெதன்யாகு மொத்த நாட்டையும் அழிவின் பக்கம் இழுத்துச் செல்கிறார். அவர் உடனடியாக தன்னுடைய பதவியில் இருந்து விலக வேண்டும். மக்கள் நலனைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் நபர் தான் இஸ்ரேலை ஆட்சி செய்ய வேண்டும்,” என்று கூறினார்.
அயலோன் நெடுஞ்சாலையில் சில போராட்டக்காரர்கள் தீயைப் பற்ற வைத்தனர் என்றும், இரு பக்கமும் போக்குவரத்துக்கு இடையூறு தரும் வகையில் போராட்டம் நடத்தினார்கள் என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று ஹமாஸ் படையினரால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களின் உறவினர்கள் உருவாக்கியுள்ள குழுவும் பிரதமரின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்துள்ளது. கேலண்டை பதவியில் இருந்து நீக்கியது பிணைக்கைதிகளை விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் அவர்கள்.
அவர்கள் உருவாக்கியிருக்கும் ‘பிணைக்கைதிகள், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமைப்பு’ (Hostages and Missing Families Forum), புதிதாக வர இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் போரை முடிவுக்கு கொண்டு வரவும், பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள் பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்யவும் தன்னுடைய அர்ப்பணிப்பை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஹமாஸ் குழுவால் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 251 நபர்களில் நூறு பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
புதிதாக பதவியேற்க இருக்கும் கட்ஸ், ராணுவ விவகாரங்களைப் பொருத்தவரை போருக்கான அதீத நிலைப்பாட்டைக் கொண்டவர் என்று அறியப்படுபவர்.
நெதன்யாகுவிற்கு நெருக்கமான கிடியோன் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
நெதன்யாகு முதல்முறையாக 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேலண்டை பதவியில் இருந்து நீக்கினார். நீதித்துறையை சர்ச்சைக்குரிய வகையில் மறுசீரமைக்க எடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் இதற்கு எதிராக போராட்டங்கள் எழுந்த நிலையில் அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை அவர்கள் ‘கேலண்ட் நைட்’ என்று நினைவுகூர்கின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளன்று இஸ்ரேலில் அமைச்சர் பதவிநீக்கம்
இந்த ஆண்டு மே மாதம், காஸாவுக்கான போருக்கு பிந்தைய திட்டங்களை வகுக்காமல் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக கேலண்ட் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தார். காஸாவின் நேரடியாக அதிகாரம் செலுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று இஸ்ரேல் மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்று நெதன்யாகுவை கேலண்ட் கேட்டுக் கொண்டார்.
ராணுவ நடவடிக்கை செல்லும் திசைக்கும் இஸ்ரேலின் போர் அமைச்சரவைக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிளவை வெளிப்படையாக்கியது அந்த வேண்டுகோள்.
“அக்டோபர் மாதத்தில் இருந்து இதுகுறித்து நான் கேள்வி எழுப்பி வருகிறேன். ஆனால் அரசிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை,” என்று கேலண்ட் கூறினார்.
பாலத்தீன அமைப்புகளான ஹமாஸ் மற்றும் ஃபத்தாவை குறிப்பிட்டு, ஹமாஸ்தானுக்கு பதிலான ஃபத்தாஸ்தானை பெற நான் தயாராக இல்லை என்று பதில் கூறினார் நெதன்யாகு.
நவம்பர் 5-ஆம் தேதி அன்று நெதன்யாகுவின் செயல்பாட்டை கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தனர்.
காஸாவுக்கு எதிரான இஸ்ரேல் போருக்கு ஆதரவு அளிக்கும் முக்கியமான நாடான அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற நாளன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று சில இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.
நெதன்யாகுவைக் காட்டிலும் கேலண்ட் வெள்ளை மாளிகையுடன் நல்ல உறவில் இருந்தவராக அறியப்பட்டார்.
இஸ்ரேல் பாதுகாப்பு விவகாரங்களில் முக்கியமான கூட்டாளியாக அமைச்சர் கேலண்ட் திகழந்தார் என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதி ஒருவர் கூறினார். “நெருங்கிய கூட்டாளிகளாக இஸ்ரேலின் புதிய அமைச்சருடன் நாங்கள் தொடர்ச்சியாக பணியாற்றுவோம்,” என்று கூறினார் அவர்.
தீவிர யூத மரபுகளை பின்பற்றும் இஸ்ரேலியர்களுக்கு ராணுவத்தில் இருந்து விலக்கு அளிக்கக் கூடிய மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தீவிர வலதுசாரிகள் நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுத்து வந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு தீவிரமான எதிர்ப்பை பதிவு செய்து வந்தார் கேலண்ட்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.