ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

by wamdiness

 கோவை விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை உணர்ந்து, விரைவான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த வணிகச் சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. இதன்மூலமாக பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழ்நாடு விருப்பத் தேர்வாக உருவாகியுள்ளது.தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் தமிழ்நாட்டில் தழைத்து வளர, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (ELCOSEZ) உருவாக்குதல், கிராமம் மற்றும் நகர மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை நிரப்புதல், தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்ப மின் ஆளுமையில் சிறந்த மாநிலமாக மாற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் ரூ.158.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இடம் அளிக்கக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தின் அடித்தளங்களில் வாகனங்கள் நிறுத்துமிடமும், தரை மற்றும் ஐந்து மேல்தளங்களில் தகவல் தொழில்நுட்ப அலுவலகத்துக்கான இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 மின்தூக்கிகள், தீயணைப்பு வசதிகள். தொலைத்தொடர்பு வசதிகள். மழை நீர் சேகரிப்பு வசதிகள். 72 மணி நேரம் ஜெனரேட்டர் இயக்கத்திற்காக 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் சேகரிப்பு கட்டமைப்பு, ஆறு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்த்தொட்டி, ரூ.1.35 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 130 கேஎல்டி 3 வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

நேற்று நடந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பல்வேறு நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். புதிய கட்டிடத்தின் மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, மக்களைவ உறுப்பினர்கள் கணபதி பி. ராஜ்குமார், கே. ஈஸ்வரசாமி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்