பயங்கரவாதத் தடைச்சட்டம்:தேர்தலின் பின் பார்க்கலாம்!

by 9vbzz1

தேர்தல் வாக்குறுதியின் பிரகாரம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் அல்லது மறுசீரமைக்கும் தீர்மானத்தில் அரசாங்கம் உறுதியாக இருப்பதுடன், புதிய நாடாளுமன்றத்தில் அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அச்சட்டம் நீக்கப்படாதென அரசாங்கம் கருத்துகளை வெளியிட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்  தற்போது நாடாளுமன்றமொன்று இல்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சராக நானும் தான் உள்ளோம். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது அல்லது திருத்தம் செய்வது குறித்து நாடாளுமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த  மூவரை  குற்றமற்றவர்கள் என இனங்கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், மூவரையும், இன்று புதன்கிழமை குற்றச்சாட்டிலிருந்து முற்றாக  விடுவித்துள்ளார்.   

வவுனியா பெரிய புளியங்குளத்தைச் சேர்ந்த, சுப்பிரமணியம் கிரிஜா,கந்தப்பு கயேந்திரன்,  பூந்தோட்டத்தை சேர்ந்த காக்கை சிங்கம் காந்தரூபன், ஆகியோரே  விடுவிக்கப்பட்டனர். 

சாளம்பைக்குளம் பகுதியில்  2019ஆண்டு தை மாதம், தீங்கு விளைவிக்க கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வழக்கு தொடுனரால் சந்தேகத்திற்கு அப்பால்  நிரூபிக்க தவறியுள்ளதாக     நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு அந்த மூவரையும் விடுவித்தார்.

தொடர்புடைய செய்திகள்