பச்சிளம் குழந்தைகளின் மலத்தை சேகரித்து நடத்தப்பட்ட ஆய்வு வெளிப்படுத்திய ரகசியங்கள்
- எழுதியவர், ஸ்மிதா முண்டாசாத்
- பதவி, சுகாதார செய்தியாளர், பிபிசி நியூஸ்
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மல மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.
இந்த மாதிரிகள் மூலம், பிறந்த குழந்தையின் குடலில் எந்த வகையான பாக்டீரியா முதலில் வளர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் முயன்றனர்.
அந்த ஆய்வில், குழந்தைகளின் மலம் மூன்று வெவ்வேறு நுண்ணுயிரியல் வகைகளின் கீழ் வருவதை அறிந்து ஆச்சரியமடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொன்றிலும் வெவ்வேறு “முன்னோடி பாக்டீரியாக்கள்” அதிக அளவில் காணப்பட்டன.
இந்த முன்னோடி பாக்டீரியாக்கள் எந்தப் புதிய சூழலிலும் முதலில் குடியேறி வளரக் கூடியவை.
1288 குழந்தைகளின் மல மாதிரிகள் ஆய்வு
இவற்றில் ஒன்று பி.ப்ரீவ் (பிஃபிடோபாக்டீரியம் ப்ரீவ்) என்று ஆரம்ப சோதனைகள் சுட்டிக்காட்டின. இது குழந்தைகளுக்கு தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கிறது.
இந்த பாக்டீரியாவின் மற்றொரு வகை தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும் குழந்தைகளுக்குத் தொற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நேச்சர் மைக்ரோபயாலஜி என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.
ஒரு நபரின் மைக்ரோபயோம் அதாவது அவரது குடலில் வாழும் லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் அந்த நபரின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.
ஆனால் ஒரு குழந்தையின் மைக்ரோபயோம் குறித்து மிகக் குறைந்த ஆய்வுகளே செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் இது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் உருவாகிறது.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் வெல்கம் சேங்கர் கழகம் மற்றும் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 1,288 ஆரோக்கியமான குழந்தைகளின் மல மாதிரிகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மல மாதிரிகள் அனைத்தும், பிரிட்டனில் உள்ள மருத்துவமனைகளில் ஒரு மாதத்திற்கு உள்ளாகப் பிறந்த குழந்தைகளிடம் இருந்து சேகரிப்பட்டன.
பெரும்பாலான மாதிரிகள் மூன்று பரந்த குழுக்களாகப் பிரிந்ததை இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதில் வெவ்வேறு பாக்டீரியாக்கள் ஆதிக்கம் செலுத்தின.
பி.ப்ரீவ் மற்றும் பி.லோங்கம் பாக்டீரியா குழு, நன்மை செய்யக்கூடியவை எனக் கருதப்படுகிறது.
தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பயன்படுத்த அவை குழந்தைகளுக்கு உதவ முடியும் என்று அவற்றின் மரபணு விவரம் தெரிவிக்கிறது.
குழந்தைகளுக்கு சில நேரங்களில் எ.ஃபேகலிஸ் காரணமாகத் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பூர்வாங்க சோதனைகள் கூறுகின்றன.
பல காரணிகள்
விஞ்ஞானிகளால் ஆய்வில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, பிறந்த முதல் சில வாரங்களில் முழுமையாகவோ அல்லது ஓரளவோ தாய்ப்பால் கொடுக்கப்பட்டது.
ஆனால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது அல்லது ஃபார்முலா பால் கொடுப்பது அவற்றின் குடலில் வாழும் முன்னோடி பாக்டீரியா மீது எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பிரசவத்தின்போது ஆன்டிபயாடிக்குகள் கொடுக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு எ.ஃபேகலிஸ் (Enterococcus faecalis) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும் கண்டறியப்பட்டது.
இது ஆரோக்கியத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துமா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மேலும் தாயின் வயது, இனம் மற்றும் தாய்க்கு எவ்வளவு குழந்தைகள் உள்ளன என்பன போன்ற பிற காரணிகளும் வளரும் நுண்ணுயிரிகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குழந்தைகளின் நீண்டகால ஆரோக்கியத்தில் இந்த நுண்ணுயிரிகளின் சரியான தாக்கத்தை அறிய மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
“நாங்கள் 1,200க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் இருந்து உயர் தெளிவுத் திறன் கொண்ட மரபணு தகவல்களைப் பகுப்பாய்வு செய்து மூன்று முன்னோடி பாக்டீரியாக்களை அடையாளம் கண்டுள்ளோம். இவை குடல் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை இயக்கும் பாக்டீரியாக்கள்.
எனவே நாம் அவற்றை குழந்தைகளின் மைக்ரோபயோம் பிரிவில் வகைப்படுத்தலாம்,” என்று வெல்கம் சேங்கர் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் யான் ஷாவோ கூறுகிறார்.
“இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் உள்ள கட்டமைப்பு மற்றும் வேறுபாடுகளை காட்சிப்படுத்துவதும் புரிந்துகொள்வதும், ஆரோக்கியமான மைக்ரோபயோமை உருவாக்கப் பயனுள்ள ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையிலான சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கான முதல் படியாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
“இந்த ஆய்வு வாழ்க்கையின் முதல் மாதத்தில் குடல் நுண்ணுயிரிகளை உருவாக்குவது பற்றிய தற்போதைய அறிவை கணிசமாக விரிவுபடுத்துவதாக” இந்த ஆய்வில் பங்கேற்காத, ஸீ பீச்சில் உள்ள லண்டன் குயின் மேரி பல்கலைக் கழகத்தில் நுண்ணுயிர் அறிவியல் விரிவுரையாளராக இருக்கும் டாக்டர் ருய்ரி ராபர்ட்சன் கூறினார்.
“சமீபத்திய ஆண்டுகளில் நாங்கள் குடல் மைக்ரோபயோம் கலவை, ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற பொதுவான குழந்தைப் பருவ நோய்கள் மீது பிறப்பு முறை மற்றும் தாய்ப்பாலின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது பற்றி நிறைய கற்றுக் கொண்டோம்,” என்று அவர் கூறுகிறார்.
“ஆனால் இது இன்னமும் பயனுள்ள நுண்ணுயிர்-மையப்படுத்தப்பட்ட சிகிச்சையாக உருமாறவில்லை,” என்றார் அவர்.
குழந்தைப் பேறு மற்றும் தாய்ப் பாலூட்டுதல் பற்றிய முடிவுகள் “சிக்கலானவை மற்றும் தனிப்பட்டவை.” இதில் சிறந்த வழிகள் என்று வரும்போது, ‘அனைத்து அணுகுமுறைகளுக்கும் பொருந்தக்கூடிய’ வழி என எதுவும் இருக்க முடியாது என்று லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லூயிஸ் கென்னி கூறினார்.
“பிறப்பு முறைகள் மற்றும் குழந்தைக்குப் பாலூட்டும் முறைகள், குடல் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, பிற்காலத்தில் இது அவர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பன பற்றிய முழுமையான தகவல்கள் எங்களிடம் இல்லை. எனவே இந்த ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆராய்ச்சி யுகே பேபி பயோம் என்ற ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வெல்கம் மற்றும் வெல்கம் சேங்கர் கழகம் இதற்கு நிதியளித்தது.
இதில் பங்கேற்றவர்களில் ஒருவரான டாக்டர். ட்ரெவர் லாலி, வயது வந்தோருக்கான ப்ரோபயாடிக்குகளில் பணிபுரியும் ஒரு நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பதோடு, வெல்கம் சேங்கர் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு