டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியை ஏற்க மறுத்த முன்னாள் ஜனாதிபதியின் அசாதாரண மறுபிரவேசமாக இது அமைந்துள்ளது.
இரண்டு படுகொலை முயற்சிகள் மற்றும் 34 குற்றச் செயல்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்த வெற்றி வந்துள்ளது.
விஸ்கான்சினில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர், ஜனாதிபதி பதவிக்கு தேவையான 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றார்.
அலாஸ்கா, விஸ்கான்சினின் அண்மைய மற்றும் முக்கியமான முடிவுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் இப்போது 279 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதனிடையே கமலா ஹாரிஸ், நியூ ஹாம்ப்ஷயரில் வெற்றி பெற்ற நிலையில் 223 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்றுள்ளார்.
ட்ரம்பின் வெற்றியானது அமெரிக்காவின் பணவீக்கம் மற்றும் குடியேற்றத்தைச் சுற்றியுள்ள பொது மக்களின் விரக்திகள் எவ்வளவு ஆழமாக இருந்தன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
க்ரோவர் க்ளீவ்லேண்டிற்குப் (Grover Cleveland) பின்னர், இரண்டு சந்தர்ப்பங்களில் பதவி வகிக்கும் இரண்டாவது ஜனாதிபதியாக ட்ரம்ப் ஆவார்.
க்ரோவர் க்ளீவ்லேண்ட் அமெரிக்காவின் 22 ஆவது ஜனாதிபதியாக 1885 முதல் 1889 வரையும் 24 ஆவது ஜனாதிபதியாக 1893 முதல் 1897 வரையும் இருந்தார்.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக முதல் முறையாக 2016 முதல் 2020 க்கு இடையில் இருந்தார்.
எனினும், 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த பிறகு அவர் இரண்டாவது முறையாக வெற்றிபெறத் தவறினார்.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக ட்ரம்ப் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் 78 வயதில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மிக வயதான நபர் ட்ரம்ப் ஆவார்.