“புதிய நட்சத்திரம்” – டிரம்ப் யாரை இவ்வாறு குறிப்பிட்டார்? டிரம்ப் ஆற்றிய உரை முழு விவரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களில் இருந்து அடுத்தடுத்து வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதில், ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் இதுவரை 266 தேர்வாளர் குழு (எலக்ட்டோரல் காலேஜ்)வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தீர்மானிக்கும் ஏழு மாகாணங்களில், வடக்கு கரோலினா, ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய 3 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார். எனவே டிரம்பின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்றே கூறலாம். இதைத் தொடர்ந்து அவர் புளோரிடாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றி வருகிறார்.
கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், ஓரிகன், இல்லினாய்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களை வசப்படுத்தியுள்ள அவர் இதுவரையிலும் 219 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
டிரம்ப் உரை
புளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், “இந்த நாட்டை மீட்டெடுக்க நாங்கள் உதவப் போகிறோம்” என்று கூறினார்.
டிரம்பை அதிபர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையான தேர்வாளர் குழு வாக்குகளை அவர் இன்னும் பெறவில்லை என்றாலும் கூட, தான் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் அறிவித்துக் கொண்டுள்ளார்.
“இது அமெரிக்காவின் பொற்காலம்” என்று கூறிய டிரம்ப், “இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும், இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்” என்றார்.
“அமெரிக்கர்கள், வரும்காலத்தில் இந்த நாளைப் பற்றி எண்ணிப் பார்க்கையில், இதுதான் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனக் கருதுவார்கள்” என்றார் டிரம்ப்.
மேடையில் தன்னுடன் இருந்த மனைவி மெலனியா மற்றும் தனது குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், “அவர் (மெலனியா) ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளார். மக்களுக்கு உதவ மிகவும் கடினமாக உழைக்கிறார்” என்று கூறினார்.
தனது பிரசாரக் குழுவில் முக்கிய பங்கு வகித்த ஈலோன் மஸ்க் குறித்து பேசிய டிரம்ப், அவரை குடியரசுக் கட்சியின் ‘புதிய நட்சத்திரம்’ என்றும், அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும் விவரித்தார்.
வடக்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி
அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றாக கருதப்படும் வடக்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 தேர்வாளர் குழு வாக்குகளை டிரம்ப் வென்றுள்ளார்.
வடக்கு கரோலினாவில் இதுவரை 90.1% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், டிரம்ப் 50.7% வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 47.8% வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வடக்கு கரோலினாவின் வெற்றி குடியரசுக் கட்சியினருக்கு முக்கியமானது என்றாலும், இது கடந்த காலங்களில் இந்த மாகாணம் எவ்வாறு வாக்களித்தது என்பதற்கு ஏற்பவே உள்ளது. டிரம்ப், 2016இல் வடக்கு கரோலினாவை 3.66% வித்தியாசத்திலும், 2020இல் 1.34% என்ற சிறிய வித்தியாசத்திலும் வென்றார்.
ஜனநாயகக் கட்சி கடைசியாக 2008ஆம் ஆண்டு இங்கு வெற்றி பெற்றது. அப்போது முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெற்றி பெற்றார். பின்னர் ஒபாமா 2012ஆம் ஆண்டில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்ட போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியிடம் இந்த மாகாணத்தை இழந்தார்.
ஜார்ஜியாவிலும் டிரம்ப் வெற்றி
ஜார்ஜியாவில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப், 50.7% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் டிரம்புக்கு கூடுதலாக 16 தேர்வாளர் குழு வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்த மாகாணத்தில் 98.4% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கமலா ஹாரிஸ் 48.3% வாக்குகளைப் பெற்றுள்ளார். கடந்த 2020 தேர்தலில் இந்த மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பென்சில்வேனியாவைக் கைப்பற்றிய டிரம்ப்
வடக்கு கரோலினா, ஜார்ஜியாவைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் மிக முக்கியமான ‘முடிவைத் தீர்மானிக்கும் மாகாணமான’ பென்சில்வேனியாவில் வெற்றி பெற்று, அதன் 19 தேர்வாளர் குழு வாக்குகளை வென்றுள்ளார் டிரம்ப்.
இங்கு டிரம்ப் 50.9% வாக்குகளைப் பெற்றுள்ளார், கமலா ஹாரிஸ் 48% வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அமெரிக்க செனட் சபையைக் கைப்பற்றும் குடியரசுக் கட்சி
அமெரிக்க செனட் சபையை குடியரசுக் கட்சி கைப்பற்றும் என்று பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி முகமை கணித்துள்ளது.
இன்னும் வாக்கு எண்ணிக்கை முழுமையடையவில்லை, ஆனால் ஜனநாயகக் கட்சியினர் தனிப் பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளில், அமெரிக்க செனட் சபையில் 51 இடங்களை குடியரசுக் கட்சியினரும், 40 இடங்களை ஜனநாயகக் கட்சியினரும் பெற்றுள்ளனர். ஒரு இடத்தை சுயேட்சை வேட்பாளர் பெற்றுள்ளார். 8 இடங்களுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அமெரிக்க செனட் சபையில் பெரும்பான்மையை பெற ஒரு கட்சிக்கு 51 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்மானிக்கும் மாகாணங்களில் என்ன நடக்கிறது?
அமெரிக்க அதிபரைத் தீர்மானிக்கும் 7 முக்கிய மாகாணங்களில் வடக்கு கரோலினா, ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா ஆகியவற்றில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் மற்ற தீர்மானிக்கும் மாகாணங்களில் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தற்போதைய நிலவரப்படி, அரிசோனா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மற்ற 4 மாகாணங்களிலும் டிரம்பே முன்னிலை வகிக்கிறார்.
கமலா ஹாரிஸ் தரப்பு என்ன செய்கிறது?
“இன்றிரவு கமலா ஹாரிஸ் இங்கு வரமாட்டார்” என்று பிரசாரக் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் அறிவித்த பின்னர், ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்தில் கூடியிருந்த கூட்டம் கிட்டத்தட்ட காணாமல் போனது.
வடக்கு கரோலினா, ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய 3 முடிவை தீர்மானிக்கும் மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் உற்சாக மனநிலையை இழந்துவிட்டனர்.
சில மணிநேரங்களுக்கு முன்புவரை கூட, ஹாவர்ட் பல்கலைக்கழக வளாகத்தில் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் குழுமியிருந்தனர். ஆனால் பின்னர் அவர்கள் கலைந்து செல்லத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், இன்று இரவு நடக்கவிருந்த கொண்டாட்ட நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாகவும், கமலா ஹாரிஸ் உரை நிகழ்த்தப் போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2024 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்?
அமெரிக்க அதிபர் தேர்தலின் முதல் வாக்கெடுப்புகள் செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க நேரப்படி மாலை 6 மணிக்கு (1800 EST), அதாவது இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு முடிவடைந்தது. கடைசி வாக்கெடுப்புகள் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு (0100 EST), அதாவது இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு முடிவடையும்.
சில அதிபர் தேர்தல்களில், வெற்றி பெற்றவர் யார் என்பது தேர்தல் நாளன்று இரவில் தாமதமாகவோ அல்லது அடுத்த நாள் அதிகாலையிலோ அறிவிக்கப்படும்.
இந்த முறை, பல மாகாணங்களில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால், யார் வெற்றியாளர் என்பதை விரைவாக அறிவிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
ஆனால் வெற்றி யாருக்கு என்பதை முன்கூட்டியே எளிதில் கணிக்கக்கூடிய வகையில் இருந்த மாகாணங்களில் இருந்து, எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
எனவே மிகக் குறைவான வாக்கு வித்தியாசமே இருந்தால், அது மறு வாக்கு எண்ணிக்கையின் அறிகுறியாக இருக்கலாம்.
உதாரணமாக, பென்சில்வேனியாவில், வெற்றியாளருக்கும் தோல்வியுற்றவருக்கும் இடையில் 0.5 சதவீத வாக்கு வித்தியாசம் மட்டுமே இருந்தால், மறுவாக்கு எண்ணிக்கை தானாகவே நடைமுறைக்கு வந்துவிடும். 2020ஆம் ஆண்டில், இந்த வித்தியாசம் 1.1 சதவீதமாக இருந்தது.
சட்ட ரீதியான சிக்கல்கள் எழவும் சாத்தியங்கள் உள்ளன. ஏற்கனவே,100க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வாக்காளர் தகுதி மற்றும் வாக்காளர் பட்டியல் நிர்வாகத்தை எதிர்த்து குடியரசுக் கட்சியினரால் தாக்கல் செய்யப்பட்டவை ஆகும்.
கடந்த தேர்தலை விட இம்முறை குறைவான தபால் வாக்குகளே பதிவாகியுள்ளன. 2020 அதிபர் தேர்தல் கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறுகிறது?
வழக்கமாக, தேர்தல் நாளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் முதலில் கணக்கிடப்படும். அதைத் தொடர்ந்து முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகள், தபால் வாக்குகள், சந்தேகத்திற்குரிய வாக்குகள், பின்னர் வெளிநாட்டு மற்றும் ராணுவ வாக்குகள் கணக்கிடப்படும்.
உள்ளூர் தேர்தல் அதிகாரிகள் கேன்வாசிங் (Canvassing) என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையில் தனிப்பட்ட வாக்குகளைச் சரிபார்க்கிறார்கள் மற்றும் எண்ணுகிறார்கள்.
கேன்வாசிங் செயல்முறையில் யார் பங்கேற்கலாம், வாக்குகள் செயலாக்கப்படும் வரிசை மற்றும் எந்தெந்த பகுதிகள் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன, வாக்கு எண்ணிக்கையில் பக்கச்சார்பான பார்வையாளர்கள் எவ்வாறு கண்காணிக்கலாம் மற்றும் தலையிடலாம் என்பது உள்பட ஒவ்வொரு மாகாணத்திலும் வட்டாரத்திலும் தேர்தல் தொடர்பான கடுமையான விதிகள் உள்ளன.
குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முடிவுகள் வெளியானால், அது செய்தி ஊடகங்கள் தங்கள் கணிப்புகளை வெளியிடக் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்.
அது மட்டுமல்லாது அத்தகைய முடிவுகள் மறுவாக்கு எண்ணிக்கை மற்றும் சட்டரீதியான சவால்கள் போன்ற பெரிய பிரச்னைகளையும் எழுப்புகின்றன.
அதிபர் தேர்தல் முடிவுகளில் சிக்கல் ஏற்பட்டால் என்ன நடக்கும்?
ஒவ்வொரு அதிகாரப்பூர்வ வாக்கும் இறுதி முடிவுகளில் சேர்க்கப்பட்டவுடன், மறுவாக்கு எண்ணிக்கை போன்ற செயல்முறைகள் முடிந்த பிறகு, தேர்தல் முடிவுகள், முதலில் உள்ளூர் அதிகார வரம்புகளில், பின்னர் மாகாண அளவில், சான்றளிக்கப்படுகின்றன.
பிறகு ஒரு மாகாண நிர்வாகி (பொதுவாக ஆளுநர்) ‘தேர்வாளர் குழுக்களில்’ தங்கள் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்களின் பட்டியலுக்கு சான்றளிக்கிறார். இந்த வாக்காளர்கள் டிசம்பர் 17 அன்று அந்தந்த மாகாணங்களில் கூடி வாக்களித்து, அதை வாஷிங்டனுக்கு அனுப்புகிறார்கள்.
ஜனவரி 6 அன்று, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை கூடி, தேர்வாளர் குழு வாக்குகளை எண்ணும் செயல்முறையில் ஈடுபடும். அதற்கு தற்போதைய துணை அதிபர் தலைமை தாங்குவார்.
புதிய அதிபர் எப்போது பதவி ஏற்பார்?
இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்படுபவர், 2025, ஜனவரி 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தின் மைதானத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்.
அமெரிக்க வரலாற்றில் நடைபெறவிருக்கும் 60வது அதிபர் பதவியேற்பு விழா இது.
இந்த நிகழ்வில் புதிய அதிபர் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழியுடன் பதவியேற்பார், பின்னர் தொடக்க உரையை நிகழ்த்துவார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.