பாதுகாப்புத்துறை அமைச்சரை உடனடியாக நீக்கிய இஸ்ரேல் பிரதமர்!

by adminDev

இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சரான யோவ் காலண்ட்டை அந்நாட்டின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உடனடியாக பதவி நீக்கம் செய்துள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசாமுனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே போல் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா அமைப்பினரோடும் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. மேலும் ஈரான் மீதும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இச் சூழலிலேயே  இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரை பிரதமர் பதவி நீக்கம் செய்துள்ளார். அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே யோவ் காலண்ட்டை பிரதமர் நெதன்யாகு பதவிநீக்கம் செய்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து இஸ்ரேலின்  வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த காட்ஸ், பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார் எனவும், வெளியுறவுத்துறை அமைச்சராக கிதியோன் பதவியேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிநீக்க நடவடிக்கை குறித்து பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘போரின் ஆரம்பகட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சரின் செயல்பாடுகள் நல்ல பலன்களை கொடுத்தன எனவும், இதனால் அவர் மீது நம்பிக்கை இருந்தது எனவும், ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக இல்லை எனவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ”போரை வழிநடத்துவது குறித்து அமைச்சரவை எடுத்த முடிவுகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒத்துப்போகவில்லை எனவும், இதை சரிசெய்ய தான் நிறைய முயற்சிகளை எடுத்ததாகவும் ஆனால் இருவருக்கும் இடையிலான பிளவு மேலும் அதிகரித்துவிட்டதாகவும் நெதன்யாகு மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்நிலை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என்பதனாலேயே பாதுகாப்புத்துறை அமைச்சரி பதவிக்காலத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தனது பதவி நீக்கத்தை தொடர்ந்து யோவ் காலண்ட், ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இஸ்ரேலின் பாதுகாப்பு என்பதே எப்போதும் தனது வாழ்வின் முக்கியமான லட்சியமாக இருந்து வருகின்றது எனவும்,  இனிமேலும் அப்படியே இருக்கும்’ எனவும்  பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்