”நான் ஒரு முன்னாள் போராளி. விடுதலைப் புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம். யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள்.
இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம்” என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.