டொனால்ட் டிரம்ப்: இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக அவரது ஆட்சி எப்படி இருக்கும்?
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.
அவரின் புதிய ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கான அறிகுறிகளை அவரின் கடந்த கால ஆட்சியே கூறியள்ளதாக சில அரசியல் விமர்சகர்கள் தங்களின் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு அவர் எங்கே எதை விட்டுச் சென்றாரோ அதைத் தொடர்வார் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றும் திட்டம்
அப்படி விட்டுச்சென்ற பல திட்டங்களில், அமெரிக்காவின் தெற்கு எல்லையில், குடியேறிகள் வருவதை தடுக்க தடுப்புச் சுவர் எழுப்புவதும் ஒன்று. அவரின் அந்தத் திட்டத்திற்கு நிதி அளிப்பதற்கான நாடாளுமன்ற ஒப்புதல் அவருக்கு அப்போது கிடைக்கவில்லை.
இந்த முறை தேர்தல் பிரசாரத்தின்போது அந்தக் கட்டுமானத்தை விரைவில் முடிப்பேன் என்று கூறியே வாக்கு சேகரித்தார். அதை அவர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான அவருடைய திட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அவர் நாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில், 2022ஆம் ஆண்டில் 11 மில்லியன் மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறியுள்ளார்கள் என்ற தரவுகளை வெளியிட்டது பியூ ஆராய்ச்சி அமையம். ஆனால் டிரம்ப் மற்றும் அவருடைய பிரசாரம் இந்த எண்ணிக்கைக்கும் அதிகமாக சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர் என்று கூறியுள்ளது.
குடியேறிகளை நாட்டைவிட்டு வெளியேற்றும் திட்டமானது அதிக செலவீனத்தைக் கொண்டது என்றும் கடினமானது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் ஆவணப்படுத்தப்படாத பணியாட்கள் முக்கியப் பங்காற்றும் பொருளாதாரத்தின் சில பகுதிகளில் எதிர்மறையான தாக்கம் ஏற்படக் கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, பணவீக்கம், வட்டி விகிதத்தைக் குறைப்பேன், எரிசக்திப் பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்படும் என்றும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்ட பிறகு கடந்த ஜூலையில் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்தார்.
அடுத்த ஆண்டுக்குள் நிறைவடைய உள்ள, அவர் அறிமுகம் செய்த வரிக்குறைப்பை நீட்டிக்க உள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். 2017ஆம் ஆண்டு வரிகளை எளிமைப்படுத்தவும், வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கவும், பல பத்தாண்டுகளுக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்ட வரி மறுசீரமைப்புத் திட்டம் அது.
ஆனால் அத்தகைய குறைப்பானது வர்த்தகம் மற்றும் அதிக வசதி படைத்தவர்களுக்கு உதவும் வகையில் அமைந்தது. அதை மாற்றக் கூறி ஜனநாயகக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர்.
கார்ப்பரேட் வரிகளை 15% ஆகக் குறைக்கவும், ‘டிப்ஸ்’ மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான ‘சோசியல் செக்யூரிட்டி’ பரிவர்த்தனைகளுக்கான வரிகளை டிரம்ப் நீக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு வர்த்தகப் போர்?
கச்சா எண்ணெய் உற்பத்தியில் அவர் அதிக நாட்டம் செலுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க இது பயன்பட்டது என்று அவர் நம்புகிறார். வருங்காலத்தில் எரிசக்திப் பொருட்களின் விலையை இதைக் கொண்டு குறைக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார். ஆனால் நிபுணர்கள் இதற்கான சாத்தியத்தைச் சந்தேகிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கும் பொருட்களுக்கு 10 முதல் 20% வரை வரி விதிக்கப்படும் என்றும் சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 60% வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பொருளாதார ஆய்வாளர்கள் இதனால் ஏற்படக்கூடிய பாதகங்களைப் பட்டியலிட்டினர். இது விலைவாசியை அதிகரித்து, அமெரிக்க நுகர்வோர்கள் அதிக பணம் கொடுக்கும் சூழலுக்கு ஆளாகக் கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
தன்னுடைய முதல் ஆட்சியின்போது, சீனா நியாயமற்ற வர்த்தக முறைகளைப் பின்பற்றுவதாகவும், அறிவுசார் சொத்துகளைத் திருடுவதாகவும் குற்றம் சுமத்தி வர்த்தகப் போரை துவங்கினார்.
அவர் நினைத்தது போன்ற மாற்றங்களை கொள்கைகள் மூலமாகக் கொண்டு வர இயலுமா என்பதை அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானிக்கும்.
கடந்த 2017 முதல் 2019 வரை குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் செனெட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அமெரிக்க நாடாளுமன்றம் எப்படிப் பணியாற்றுகிறது என்பது குறித்து முழுமையாக அறியாத காரணத்தால், வெள்ளை மாளிகையில் இருந்த குடியரசுக் கட்சியின் பலத்தையும், நாடாளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மையையும் பயன்படுத்திப் பெரிய கொள்கைகளை அறிமுகம் செய்து டிரம்பால் வெற்றி பெற இயலவில்லை என்று அரசியல் நிபுணர்கள் அந்தக் காலகட்டத்தில் கூறினார்கள்.
கருக்கலைப்பு தடை
கடந்த 1973ஆம் ஆண்டு கருக்கலைப்பிற்கான அரசியலமைப்பு உரிமையை நிலைநாட்டிய வழக்கின் தீர்ப்பை மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு திரும்பப் பெற்றது.
இந்தக் குழுவை நியமித்தவர் டொனால்ட் டிரம்ப். தற்போது மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார் என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
செப்டம்பர் மாதம் கமலா ஹாரிஸுடன் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்வில் நாடு முழுமைக்குமான கருக்கலைப்பு தடைக்கு ஆதரவு வழங்க மாட்டேன் என்று கூறினார்.
தனிமைவாதம், ஒருதலைப்பட்சவாதம்
வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தமட்டில், உலகின் பல பகுதிகளில் நடந்து வரும் போர்களில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது என்ற கடந்த ஆட்சியில் அவர் பின்பற்றிய கொள்கைகளையே தற்போதும் பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் யுக்ரேன் போரை நிறுத்துவேன் என்று அவர் கூறியுள்ளார். இது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வலுவாக்கும் என்று ஜனநாயகக் கட்சியினர் வாதாடுகிறார்கள்.
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் போரைப் பொறுத்தவரை, அவர் இஸ்ரேலுக்கு ஆதரவானவர் என்ற நிலைப்பாட்டை ஏற்கெனவே கூறிவிட்டார். காஸாவில் நடைபெறும் போரை நிறுத்துவது எப்படி என்று இதுவரை அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.
“தனிமைவாதம் மற்றும் ஒருதலைப்பட்ச நிலைப்பாடுகளைக் கொண்ட ஆட்சியாகவே டிரம்பின் ஆட்சியை நான் பார்க்கிறேன். அந்த ஆட்சியில் குறைவான நன்மைகளையே வழங்குகின்றன ஆனால் அது சர்வதேச அளவிலான நிச்சயமற்ற தன்மையை ஆழப்படுத்தும்” என்கிறார் மார்டின் க்ரிஃபித்ஸ்.
மார்டின் க்ரிஃபித்ஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளைச் சிறப்பாக நடத்தும் மத்தியஸ்தர் என்று அறியப்பட்ட அவர் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைச் செயலாளராகவும், அவசரக் கால நிவாரண ஒருங்கிணைப்பாளராகவும் அவர் பணியாற்றி வந்தார்.
முன்னாள் நேட்டோ அதிகாரியும், எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் வியூகம் மற்றும் பாதுகாப்புப் பிரிவு பேராசிரியருமான ஜேமி ஷியா, டொனால்ட் டிரம்பின் முந்தைய ஆட்சியானது சீர்குலைக்கும் தன்மையைக் கொண்டிருந்தது. ஆனால் அதில் ஒரு தொடர்ச்சி இருந்து வந்தது,” என்று கூறுகிறார்.
“அவர் நாட்டோவில் இருந்து வெளியேறவில்லை. ஐரோப்பாவில் இருந்து தன்னுடைய ராணுவ துருப்புகளை வெளியேற்றவில்லை. யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கிய முதல் அதிபர் அவரே” என்றும் மேற்கோள் காட்டுகிறார் ஷியா.
அமெரிக்க வரலாற்றில் இரண்டு முறை (தொடர்ச்சியாக அல்லாமல்) அதிபராகப் பதவியேற்கும் இரண்டாவது அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இதற்கு முன்பு க்ரோவர் க்ளீவ்லேண்ட், 1885 முதல் 1889ஆம் ஆண்டு வரை அமெரிக்காவை ஆட்சி செய்தார். அதற்கு அடுத்த தேர்தலில் அவரால் வெற்றிபெற இயலவில்லை. பிறகு 1893ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர் 1897ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்தார்.
முன்னதாகத் தனது வெற்றி உறுதியான பிறகு, புளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், “இந்த நாட்டை மீட்டெடுக்க நாங்கள் உதவப் போகிறோம்” என்று கூறினார்.
“இது அமெரிக்காவின் பொற்காலம்” என்று கூறிய டிரம்ப், “இது அமெரிக்க மக்களுக்குக் கிடைத்த அற்புதமான வெற்றி, இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.