உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இத்தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸுக்கும் பலத்த போட்டி நிலவி வருகின்றது.
இந்நிலையில் இத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று தாய்லாந்து நீர்யானை கணித்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தாய்லாந்தில் ஜோன்புரி பகுதியில் இருக்கும் கா கேவோவ் என்ற திறந்தவெளி உயிரியல் பூங்காவில் மூ டெங் (Moo Deng) என்ற பெண் நீர்யானைக் குட்டியொன்று உள்ளது.
குறித்த நீர்யானை முன்பாக தாய் மொழியில் டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரிஸ் எனப் பெயரிடப்பட்ட இரு தர்பூசணிப் பழங்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் ட்ரம்பின் பெயர் எழுதியிருந்த பழத்தையே குட்டி நீர் யானை உட்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்புக்கே வெற்றி என மூ டெங் கணித்துள்ளதாக உயிரியல் பூங்கா ஊழியர்கள் கூறுகின்றனர்.
குட்டி நீர் யானையின் இந்த கணிப்பு வீடியோ இப்போது உலகம் எங்கும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ மூலம் – ABS-CBN News