டொனால்ட் டிரம்ப் அரசியல் படுகுழியில் இருந்து மீண்டு அதிபர் வேட்பாளர் ஆனது எப்படி?

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், அந்தோனி ஸர்ச்சர்
  • பதவி, வட அமெரிக்கா நிருபர், வாஷிங்டன்

கடந்த 2020-ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனிடம் தோற்றபோது, டொனால்ட் டிரம்பின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே பலர் கருதினர்.

டிரம்பின் முதல் பதவிக் காலம் குழப்பங்கள் மற்றும் விமர்சனங்கள் நிறைந்ததாக இருந்தது. அவரது குடியரசுக் கட்சியினர் மத்தியிலேயே விமர்சனங்கள் எழுந்தன.

இன்று (நவம்பர் 5) நடைபெறும் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால், அமெரிக்க தேர்தல் வரலாற்றில், தேர்தல் முயற்சியில் தோல்வியடைந்து பின்னர் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய இரண்டாவது நபர் ஆக டிரம்ப் இருப்பார்.

டிரம்ப் தனது 2016 பிரசாரத்தைத் தொடங்கியதில் இருந்து அவரின் அரசியல் ஆலோசகராக இருந்த பிரையன் லான்சா, “அவர் வீழ்த்தப்பட்டார், ஆனால் இரண்டு மடங்கு உறுதியுடன் மீண்டு வந்தார்,” என்று கூறினார்.

இப்போது 78 வயதாகும் டிரம்ப், தடைகளைத் தாண்டி அரசியல் மறுபிரவேசம் செய்திருக்கிறார். இந்தப் பயணத்தின் மூலம், அவர் அனைத்து தடைகளையும் உடைத்தெறியும் ஒரு அரசியல்வாதியாக, ஒரு விரிவான செயல் திட்டத்துடன், ஒரு விசுவாசமான குழுவை வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் ஒருமுறை அனுப்ப முடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தேர்தல் முடிவுக்கு எதிராக சவால் செய்த டிரம்பின் வாதங்களை நீதிமன்றங்கள் நிராகரித்தன.

டிரம்பின் ‘விரக்திப் பயணம்’

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, டிரம்ப் ஒரு தோல்வியுற்ற மனிதராகத் தோன்றினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 2020 அதிபர் தேர்தலில் டிரம்பை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அந்தத் தேர்தல் முடிவுக்கு எதிராகச் சவால் விடுத்த டிரம்பின் வாதங்களை நீதிமன்றங்கள் நிராகரித்தன.

தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து, டிரம்ப் வாஷிங்டனில் ஆதரவாளர்களைத் திரட்டினார். பைடனின் வெற்றியை காங்கிரஸ் முறையாகச் சான்றளிக்க வேண்டிய நாளில் ஆதரவாளர்களை அமெரிக்க நாடாளுமன்ற அலுவலகத்தில் ஒன்றிணைய டிரம்ப் வலியுறுத்தினார். அந்தப் பேரணி ஒரு கலவரமாக மாறியது. நூற்றுக்கணக்கான சட்ட அமலாக்க அதிகாரிகள் காயமடைந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்த பல டிரம்ப் நிர்வாக அதிகாரிகளில் கல்விச் செயலாளர் பெட்ஸி டிவோஸ் மற்றும் போக்குவரத்து செயலாளர் எலைன் சாவோ ஆகியோரும் அடங்குவர்.

“அந்த நிகழ்வில் நீங்கள் நிகழ்த்திய உரையின் தாக்கத்தை மறுக்க இயலாது. ஆனால் இதுவே எனது வரம்பு” என்று டிரம்புக்குத் தனது ராஜினாமா கடிதத்தில் டிவோஸ் எழுதினார்.

டிரம்பின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான குடியரசுக் கட்சியின் தென் கரோலினா செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூட, அவருக்கு (டிரம்ப்) எதிராகத் திரும்பினார்.

“நான் இனி டிரம்புடன் இணைந்து எதையும் செய்ய விரும்பவில்லை. நடந்தது எல்லாம் போதும்,” என்று அவர் செனட் தளத்தில் கூறினார்.

டிரம்ப் ஆதரவாளர்கள் மட்டுமின்றி வணிக நிறுவனங்களும் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றன. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மைக்ரோசாப்ட், நைக் மற்றும் வால்கிரீன்ஸ் உட்பட 10-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் 2020-ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை எதிர்த்த குடியரசுக் கட்சியினரை ஆதரிப்பதை நிறுத்துவதாக அறிவித்தன.

பைடன் பதவியேற்ற நாளில், டிரம்ப் அந்த விழாவில் கலந்து கொள்ள மறுத்து 152 ஆண்டுகால அமெரிக்கப் பாரம்பரியத்தை உடைத்தார். பதவியேற்பு நாளன்று காலையில், டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் சில நம்பகமான ஆலோசகர்களுடன், மார்-ஏ-லாகோ ரிசார்ட்டுக்குச் சென்றார்.

‘Trump in Exile’ என்பது வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபரின் வாழ்க்கையை விவரிக்கும் புத்தகம். அதன் ஆசிரியர் மெரிடித் மெக்ரா இந்த சூழலை விவரிக்கையில், ‘டிரம்பின் மனநிலை மந்தமாக இருந்தது’ என்று குறிப்பிட்டார்.

“டிரம்ப் கோபமாக இருந்தார், விரக்தியடைந்தார், நேரத்தை எப்படிக் கடத்துவது என்று தெரியாமல் தவித்தார். அரசியல் எதிர்காலத்திற்கான திட்டம் எதுவும் அப்போதைக்கு அவரிடம் இல்லை,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.

அந்த மாதம் வெளியான ஊடகச் செய்திகள் மற்றும் அரசியல் கருத்துகள் டிரம்பின் எதிர்காலம் குறித்த தெளிவின்மையைச் சுட்டிக்காட்டின.

தேர்தலில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி மற்றும் குழப்பமான எதிர்வினைகளுக்குப் பிறகு, டிரம்ப் மீண்டும் அரசியலுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்று பலர் நம்பினர்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், The Washington Post/Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் அரசியல் மறுப்பிரவேசத்திற்கான அறிகுறிகள் 2021ல் தெரிந்தது.

டிரம்புக்கு மீண்டும் கிடைத்த கட்சி ஆதரவு

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப்: தி எண்ட்’ என்ற தலைப்பிலும், ‘ஒரு பயங்கரமான சோதனை முடிவுக்கு வந்தது’ என்ற துணைத் தலைப்பிலும் ஒரு கட்டுரை வெளியிட்டது. டிரம்பின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டதாக நேரடியாக அதில் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் பைடனின் பதவியேற்பு நாளில் டிரம்ப் ஃபுளோரிடாவுக்குச் செல்வதற்கு முன்னதாக, அடுத்து என்ன நடக்கும் என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

மேரிலாண்டில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் தன் ஆதரவாளர்களிடம் பேசிய டிரம்ப் “நாங்கள் உங்களை நேசிக்கிறோம். ஏதோ ஒரு வழியில் மீண்டு வருவோம்,” என்று கூறினார்.

ஒரு வாரம் கழித்து, டிரம்ப் தனது அரசியல் செல்வாக்கை நிலைநாட்ட நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்பது தெளிவாகியது. குடியரசுக் கட்சி மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்தது.

குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் சபையின் தலைவரும், கலிஃபோர்னியா காங்கிரஸ் உறுப்பினருமான கெவின் மெக்கார்த்தி, மார்-ஏ-லாகோவுக்குச் சென்று, டொனால்ட் டிரம்ப் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி நடந்த கலவரத்திற்குப் பிறகு, மெக்கார்த்தி, வன்முறைக்கு டிரம்ப் தான் ‘பொறுப்பு’ என்று அறிவித்தார். மேலும் அந்த நடத்தைக்காகக் கட்சி அதிகாரப்பூர்வமாக அவரைத் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

ஆனால், ஒரு சிறிய இடைவெளியில், ​​டிரம்ப்பைச் சந்தித்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை மீண்டும் பெறுவதற்கு அவருடன் இணைந்து பணியாற்றுவதாக அவர் உறுதியளித்தார்.

ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த செனட், டிரம்ப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க தயாராகும் வேளையில், மெக்கார்த்தியின் சந்திப்பு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த குடியரசுக் கட்சியினரில் ஒருவர் இன்னும் முன்னாள் அதிபரை ‘கிங் மேக்கர்’ ஆகப் பார்க்கிறார் என்பதைக் காட்டியது.

“மெக்கார்த்தி டிரம்பைச் சந்தித்து மீண்டும் அவருடன் இணைந்தது, உண்மையில் டிரம்பிற்கு மீண்டும் அரசியல் கதவைத் திறந்தது,” என்று திருமதி மெக்ரா கூறினார்.

“டிரம்பை விமர்சித்த குடியரசுக் கட்சியினர் அவரை மன்னித்துவிட்டு முன்னேறத் தயாராக இருந்ததற்கான உரிமம் இது,” என்றார்.

சிறுபான்மைத் தலைவர் மிட்ச் மெக்கனெல் போன்ற சில வலுவான விமர்சகர்கள் உட்பட பெரும்பான்மையான குடியரசுக் கட்சியினர் டிரம்ப் எதிர்காலத்தில் தேர்தல் பதவிகள் வகிப்பதில் இருந்து தடைசெய்ய வழிவகுக்கும் ஒரு தண்டனைக்கு எதிராக வாக்களித்தனர். எனவே டிரம்புக்கு எதிரான செனட் விசாரணை அவருக்குச் சாதகமாக முடிந்தது.

ஜனவரி 6-ஆம் தேதி அன்று டிரம்ப்பின் நடவடிக்கைகள் “கடமையின் அவமானகரமான செயலிழப்பு” என்று மெக்கனெல் கூறியிருந்தார். ஆனால் முன்னாள் அதிபரின் (டிரம்ப்) அரசியல் வாழ்க்கையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையை அவர் எடுக்கவில்லை. அது தனது சொந்த அரசியல் பயணத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துவிடுமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.

டிரம்ப் ஒரு புதிய கட்சியை உருவாக்கி குடியரசுக் கட்சியின் ஆதரவைப் பறிக்க நேரிடும் என்று அந்த கட்சியினர் பலர் கவலை கொண்டனர்.

டிரம்பின் நீண்டகால தகவல் தொடர்பு உதவியாளரான ஜேசன் மில்லர், ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், “இந்த சந்தேகத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வது குடியரசுக் கட்சியினரின் பொறுப்பு,” என்றார்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் முதல் பதவிக் காலம் குழப்பங்கள் மற்றும் விமர்சனங்கள் நிறைந்ததாக இருந்தது.

மீண்டும் மக்கள் முன் தோன்றிய டிரம்ப்

டிரம்ப் 2021-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் பெரும்பகுதியை மார்-ஏ-லாகோவின் வசதியான எல்லைக்குள் கழித்தார். கோல்ஃப் விளையாடவும் தனிப்பட்ட இரவு விருந்தில் கலந்து கொள்ளவும் மட்டும் வெளியே சென்றார்.

பிப்ரவரி இறுதியில், ஜனவரி 6 நிகழ்வுகள் மீதான கோபம் குறையத் துவங்கியது. அவர் தனது முதல் பொது நிகழ்ச்சியை நடத்த ஆயத்தமானார்.

பழமைவாத அரசியல் கொள்கைகளைச் செயல்படுத்துவது குறித்த மாநாட்டில் (கன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை மாநாடு) கலந்து கொண்டார். பொதுவாக வாஷிங்டன் டி.சி-க்கு அருகில் நடைபெறும் வலதுசாரி மாநாடு, கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக புளோரிடாவின் ஆர்லாண்டோவுக்கு மாற்றப்பட்டது. அதில் கலந்து கொண்ட டிரம்ப், குடியரசுக் கட்சியினரின் விசுவாசம் தனக்கு இன்னும் இருப்பதாக நிரூபித்தார்.

ஹோட்டலின் பெரிய மாநாட்டு மையத்திற்குள் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்ய, டிரம்ப் உரையாற்றினார்.

“நாம் ஒன்றாகத் துவங்கிய அரசியல் பயணத்தைப் பற்றி அறிவிக்க இன்று உங்கள் முன் நிற்கிறேன். அது இன்னும் முடிவடையவில்லை,” என்று நகைச்சுவையாகவும் சூசகமாகவும் சொன்னார்.

அவர் 2024-இல் ஜனநாயகக் கட்சியை ‘மூன்றாவது முறையாகத்’ தோற்கடிக்கக்கூடும் என்றும் சூசகமாக கூறினார்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்கணிப்பு தெளிவாக ஒரு விஷயத்தைப் பிரதிபலித்தது. பதிலளித்தவர்களில் 68% பேர் டிரம்ப் மீண்டும் போட்டியிட வேண்டும் என்றும், 55% பேர் செனட் சபைத் தேர்தலில் அவருக்கு வாக்களிப்பதாகவும் கூறினர்.

“டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் அன்றைய உரையின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது பற்றி மிகவும் கவலைப்பட்டனர்,” என்று மெக்ரா கூறினார்.

“உளவியல் ரீதியாக டிரம்ப் மற்றும் அவரது கூட்டணியைச் சேர்ந்தவர்களுக்கு அது ஒரு முக்கியமான தருணம். அவர் அத்தகைய நேர்மறையான கருத்துக்களைப் பெறும்போது அவர்கள் அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது,” என்றார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, நிதி திரட்டும் மின்னஞ்சல்களை ஆதரவாளர்களுக்கு அனுப்பும் பணியை டிரம்ப் மீண்டும் தொடங்கினார். மீண்டும் பிரமாண்ட கூட்டங்களை ஏற்பாடு செய்யும் பணிகளில் ஈடுபட்டார்.

ஜூன் மாதம் ஓஹியோவில் நடந்த ஒரு பேரணியில் டிரம்ப், “என்னை ‘மிஸ்’ செய்கிறீர்களா?” என்று கேட்டதற்கு கூட்டத்தினர் உற்சாகத்துடன் ‘ஆம்’ என்பதுபோல் பதில் அளித்தனர்.

“அவர்கள் என்னை ‘மிஸ்’ செய்கிறார்கள்,” என்று டிரம்ப் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

இடைத்தேர்தல் முடிவுகளில் ஏற்ற இறக்கம்

டிரம்பின் அரசியல் மறுப்பிரவேசத்திற்கான அறிகுறிகள் 2021-இல் தெரிந்தது. குடியரசுக் கட்சியில் டிரம்பின் செல்வாக்கு தொடர்ந்தது. 2022 இடைத்தேர்தல் இதை உறுதிப்படுத்தியது.

அப்போது, ​​ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் அவசரமாக வெளியேறிவிட்டன. இது அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. எண்ணெய் விலையும் பணவீக்கமும் பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி கொரோனா தொற்றுநோயின் இடையூறுகளிலிருந்து மெதுவாக மீண்டு கொண்டிருந்தது.

ஜோ பைடன் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார். 2021-ஆம் ஆண்டின் துவக்கத்தில் டிரம்புக்கு விரோதன அரசியல் சூழல் மாறத் தொடங்கியது.

“வாக்காளர்களின் முக்கிய பிரச்னைகளை ஜோ பைடன் கவனிக்கத் தவறிவிட்டார். மேலும் இது டொனால்ட் டிரம்பிற்கு ஒரு வாய்ப்பை அளித்தது,” என்று லான்சா கூறினார்.

கட்சியின் வேட்புமனுவைக் கோரும் எந்தவொரு கன்சர்வேடிவ் வேட்பாளருக்கும் மார்-எ-லாகோ இன்றியமையாத நிறுத்தமாக மாறியது. டிரம்பின் ஆதரவு அவர்களுக்கு ஒரு மதிப்புமிக்க வெகுமதியாகக் கருதப்பட்டது. அடிமட்ட பழமைவாத தளத்திலிருந்து வரும் நிதி மற்றும் ஆதரவுக்கு இது முக்கியமானது.

இரண்டாவது முறையாக டிரம்பை பதவி நீக்கம் செய்ய வாக்களித்த ஆறு குடியரசுக் கட்சியினரில் நான்கு பேர், டிரம்ப் ஆதரவு பெற்ற வேட்பாளர்களிடம் தோல்வியுற்றனர். இதற்கிடையில், ஓஹியோவில் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஜார்ஜியாவில் ஹெர்ஷல் வாக்கர் போன்ற செனட் வேட்பாளர்கள் டிரம்பின் ஆதரவால் முதன்மைத் துறைகளில் முன்னேறினர்.

2016-இல் அரிசோனாவுக்கான டிரம்பின் பிரசார இயக்குநராகவும், 2017-இல் மேற்கு பிராந்திய இயக்குநராகவும் பணியாற்றிய பிரையன் செர்ச்சிக், “அவரது ஆதரவு உங்களுக்கு ஒரு முதன்மை வெற்றியை உறுதிப்படுத்துகிறது,” என்று கூறினார்.

ஆனால் 2022-இன் முதல் பாதி டிரம்பிற்கு நல்ல செய்திகளைக் கொடுத்த போதிலும், நவம்பர் தேர்தல்கள் முற்றிலும் மாறுபட்ட முடிவுகளை கொண்டிருந்தன.

டிரம்ப் முக்கியமாக ஆதரித்த நான்கு செனட் வேட்பாளர்களில், ஒருவர் மட்டுமே எதிர்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார். அவர் எழுத்தாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய வான்ஸ்.

பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டைக் குடியரசுக் கட்சியினர் குறுகிய காலத்தில் மீட்டெடுத்தனர். கெவின் மெக்கார்த்தி பிரதிநிதிகள் சபையின் (House of Representatives) சபாநாயகராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மேலும் ஜனநாயகக் கட்சியினர் இன்னும் செனட்டில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளனர்.

புளோரிடாவில் ஆளுநர் ரான் டிசாண்டிஸ் வியக்கத்தக்க வித்தியாசத்தில் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார். 2024 குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தேர்வாக அவர் இருக்கலாம் என்ற ஊகங்கள் அதிகரித்தன.

இதற்கிடையில், டிரம்ப் குடியரசுக் கட்சியினரின் தோல்வியைக் குறிப்பிட்டு மிகவும் கோபமடைந்தார். கருக்கலைப்பு சட்டங்களை ஆதரித்தது தான் குடியரசுக் கட்சியினரின் தோல்விக்கு காரணம் என அவர் குற்றம் சாட்டினார். ஜனரஞ்சகப் பழமைவாதத்திற்கு கட்சியின் போதிய விசுவாசமின்மையும் காரணம் என கூறினார்.

இடைத்தேர்தல் முடிந்து சில வாரங்கள் ஆகிய நிலையில், டிரம்பின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என ஆய்வாளர்கள் கருதினர். அப்போது, டிரம்ப் தனது 2024 அதிபர் பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாகத் துவங்கினார்.

டிரம்ப் அதிபர் வேட்பாளர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப், அமைதியாக 2016 மற்றும் 2020 இரண்டிலிருந்தும் வேறுபட்ட அனுபவமிக்க அரசியல் ஆர்வலர்களின் தலைமையில் ஒரு பிரசாரக் குழுவைக் கூட்டினார்.

அதிபர் வேட்பாளர் போட்டியில் வெற்றி

டிரம்ப் அதிபர் வேட்பாளர் ஆகும் முயற்சியின் ஆரம்பம் சரியான நேரத்தில் துவங்கப்படவில்லை. இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்த சில வாரங்களுக்குப் பிறகு அவர் தன் அதிபர் தேர்தல் பணிகளைத் துவங்கியது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அவர் தனது அரசியல் உள்ளுணர்வை இழந்திருக்கலாம் என்று பலர் சந்தேகித்தனர்.

அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்-எ-லாகோவில் இருந்தபோது வெளியானது. அந்த நிகழ்வு அப்போதைய அரசியல் யதார்த்தத்துடன் முரண்படுவதாகவும் உணர்த்தியது.

அப்போதிருந்து, டிரம்ப் எதிர்பாராத காரணங்களுக்காகச் செய்திகளில் தோன்றினார். முக்கிய வெள்ளை தேசியவாதியான நிக் ஃபியூன்டெஸுடன் மார்-எ-லாகோவில் உணவருந்துவது போன்ற சில மோசமான செய்திகளில் அவர் இடம்பெற்றார். மேலும் அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள ஒரு விதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது, அவர் மீண்டும் அதிபர் வேட்பாளராக வழிவகுத்தது.

“நன்றி செலுத்தும் நிகழ்வு மற்றும் புத்தாண்டுக்கு இடையிலான காலம் டிரம்ப் பிரசாரத்திற்கு ஒரு இருண்ட காலம்,” என்று மெக்ரா கூறுகிறார்.

குடியரசுக் கட்சியினர் டிரம்பைச் சந்தேகித்தனர்.

“அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். ஆனால் அவர் வெற்றி பெறுவார் என்பதில் நாம் உறுதியாக உள்ளோமா?” என்று அந்தச் சூழலை மெக்ரா விவரித்தார்.

“இதைச் செய்வதற்கு அவருக்கு உண்மையிலேயே தகுதி இருக்கிறதா?” என்னும் கேள்வியை முன்வைத்தார்.

இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க டிரம்ப், அமைதியாக 2016 மற்றும் 2020 இரண்டிலிருந்தும் வேறுபட்ட அனுபவமிக்க அரசியல் ஆர்வலர்களின் தலைமையில் ஒரு பிரசாரக் குழுவைக் கூட்டினார்.

கிறிஸ் லாசிவிடா மற்றும் சூசி வைல்ஸ் ஆகியோர் பிரபலமான பெயர்கள் இல்லை என்றபோதிலும் அவர்கள் முன் நிறுத்தினார். கிறிஸ் லாசிவிடா அனுபவமுள்ள குடியரசுக் கட்சி அரசியல்வாதி. சூசி வைல்ஸ் புளோரிடாவை ஒரு பழமைவாத கோட்டையாக மாற்ற உதவியவர்.

இருவரும் டிரம்புடன் இணைந்து அதிபர் தேர்தலுக்கான மூலோபாயத்தில் பணியாற்றினர்.

புளோரிடாவில் அதிகாரப் பூர்வ கடமைகளில் டிசாண்டிஸ் சிக்கிக்கொண்டபோது, ​​பிரசாரத்தை வடிவமைக்க டிரம்ப் முன்கூட்டியே செயல்பட்டார் என லான்சா கூறினார்.

மற்றவர்கள் புளோரிடா ஆளுநருக்கு வழிவகுத்த போது, டிசாண்டிஸின் நம்பகத்தன்மை மற்றும் நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக டிரம்ப் நேரடித் தாக்குதலைத் தொடங்கினார்.

“ரான் டிசாண்டிஸ் தனது அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பதாக எல்லோரும் நினைத்தனர். அவரை வீழ்த்த முடியாது என்று கருதினர். ஆனால் டொனால்ட் டிரம்ப் அவரை வீழ்த்தினார்,” என்று லான்சா கூறினார்.

நியூயார்க், ஜார்ஜியாவில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் வாஷிங்டன், டிசியில் உள்ள நீதித் துறையினர்

நியூயார்க், ஜார்ஜியாவில் உள்ள வழக்குரைஞர்கள் மற்றும் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள நீதித்துறை ஆகியவற்றிலிருந்து டிரம்ப் தரப்புக்கு எதிர்பாரா தகவல்கள் கிடைத்தன.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், The Washington Post/Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் ஒரு மையப் பிரச்னையாக மாறியது.

2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முக்கியமான தேசியப் பாதுகாப்பு ஆவணங்களுக்காக மார்-எ-லாகோவில் எஃப்.பி.ஐ தேடலில் நடத்தியது. 2023-இல் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் உச்சக்கட்டத்தை அடைந்தன. டிரம்ப் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் ஒரு மையப் பிரச்னையாக மாறியது.

ஆகஸ்ட் மாதம் அட்லாண்டா சிறைச்சாலையில் எடுக்கப்பட்ட டிரம்பின் மக் ஷாட் (Mugshot) புகைப்படம் விரைவில் பிரச்சார டி-ஷர்ட்கள் மற்றும் விளம்பரப் பலகைகளில் ஒட்டப்பட்டன.

இடதுசாரிகள் பலர் இறுதியாக நீதி கிடைத்தது என்று நம்பினர். ஆனால், அயோவா, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் தென் கரோலினா போன்ற மாநிலங்களில் தங்கள் கட்சியின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் பழமைவாத வாக்காளர்கள் மத்தியில், தங்கள் கட்சித் தலைவரின் பின்னால் ஒன்றுபட வேண்டிய நேரம் இது என கருதப்பட்டது.

பொதுப் பதிவுகளை தவறாகக் கையாள்வதாக நீதித்துறை டிரம்ப் மீது குற்றம் சாட்டிய ஒரு வாரத்திற்குப் பிறகு, கன்சர்வேடிவ் (பழமைவாத) கருத்துக்கணிப்பாளர் சாரா லாங்வெல், 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அயோவா குடியரசுக் கட்சியினரின் குழுவை நேர்காணல் செய்தார்.

“இது கட்டமைக்கப்பட்ட நிகழ்வு என்று நான் நினைக்கிறேன்,” என்று ஒருவர் கூறினார்.

“இது தேர்தல் குறுக்கீடு, நாங்கள் இதுவரை பார்த்திராதது,” என்று மற்றொருவர் கூறினார்.

லான்சாவின் கூற்றுப்படி, இந்தக் குற்றச்சாட்டுகள் குடியரசுக் கட்சிக்குள், பிளவை உருவாக்கியது. சிலர் குற்றச்சாட்டுகளை அதிகார துஷ்பிரயோகம் என்று கருதினர். சிலர் அப்படிக் கருதவில்லை.

“ஆரம்பத்தில், ரான் டிசாண்டிஸ் அதை அதிகார துஷ்பிரயோகம் என்று கருதாதவர்களுக்குப் பக்கபலமாக இருந்தார்,” என்று லான்சா கூறினார்.

ஆரம்பத்தில், டிசாண்டிஸ், நியூயார்க்கில் மார்ச் 2023-இல் வெளியான குற்றச்சாட்டைக் குறிப்பிட்டார். அதில் டிரம்ப் ஒரு ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாகக் (hush-money) குறிப்பிட்டார், இது ஒரு ‘நாடகம்’ என்றும் ‘உண்மையான பிரச்சனை அல்ல’ என்றும் கூறினார்.

2023-ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில், பெரும்பாலான குடியரசுக் கட்சியின் முதன்மைக் கருத்துக் கணிப்புகளில் டிரம்ப் பெரும் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். அவர் ஒருபோதும் அந்த முன்னிலையை நழுவ விடமாட்டார் என்று கருதப்பட்டது.

குடியரசுக் கட்சியின் முதன்மை விவாதங்களை அவர் புறக்கணித்தார், மாறாக, உள்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட, தனிப்பட்ட பிரசார பேரணிகள் மூலம் அடிமட்ட ஆதரவை ஒருங்கிணைப்பதில் அவர் கவனம் செலுத்தினார்.

தனது பிரசாரத்திற்காக கிட்டத்தட்ட $200 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 1,700 கோடி ரூபாய்) திரட்டிய போதிலும், டிசாண்டிஸ் அதிபர் வேட்பாளர் பந்தயத்தில் இருந்து வெளியேறினார்.

நியூ ஹாம்ப்ஷயரில் முன்னாள் தென் கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலியை டிரம்ப் எளிதாக தோற்கடித்த பிறகு, குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளருக்கான போட்டி முடிவுக்கு வந்தது. மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலுக்கு, கட்சியின் வேட்பாளராக டிரம்ப் முன்னிறுத்தப்பட்டார்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, டிரம்பின் நீதிமன்றக் காட்சிகள் அவரது அரசியல் எதிர்காலத்தில் நேர்மறையானத் தாக்கங்களை ஏற்படுத்திய போதிலும், உண்மையான சட்ட சிக்கல்களை சந்தித்தார்.

சோதனைகள், கஷ்டங்கள் மற்றும் வெற்றிகள்

டிரம்பின் நீதிமன்றக் காட்சிகள் அவரது அரசியல் எதிர்காலத்தில் நேர்மறையானத் தாக்கங்களை ஏற்படுத்திய போதிலும், அவர் உண்மையான சட்ட சிக்கல்களைச் சந்தித்தார். 2024-ஆம் ஆண்டு மே மாதம் மன்ஹாட்டனில் உள்ள ஒரு நடுவர் மன்றம் ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட 34 கிரிமினல் குற்றச்சாட்டுகளில் டிரம்ப்பைக் குற்றவாளி என்று அறிவித்தது.

இருப்பினும், ஒவ்வொரு முறையும் டிரம்ப் சட்டப்பூர்வமான தோல்வியைச் சந்திக்கிறார். ஆனால் அதைத் தொடர்ந்து பெரிய வெற்றியும் கிடைத்ததாகத் தோன்றியது. தேர்தல் முடியும் வரை தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. புளோரிடா ஆவணங்கள் தொடர்பான குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வச் செயல்களுக்கு அதிபர்களுக்கு விலக்கு உள்ளது என்று அது தீர்ப்பளித்தது.

நீதிமன்ற அறைக்கு வெளியே டிரம்ப் பிரச்சாரக் குழு அதன் முதன்மையான வெற்றியிலிருந்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தில் நகர்ந்தது. ஜூன் மாத இறுதியில் டிரம்ப் உடன் நடந்த விவாதத்தில் பைடனின் திணறல் அவரின் குழப்பமான திறனை வெளிப்படுத்தியது. இது ஜனநாயகக் கட்சியினரை முழு பீதியில் தள்ளியது.

டிரம்பின் ஒப்புதல் மதிப்பீடுகள் மற்றும் நேரடி மோதல் கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஜூலையில் பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிர்பிழைத்த பிறகு அவருக்கான ஆதரவு அதிகரித்தது. மறுநாள் மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் தனது ஆதரவாளர்களின் இதயங்களை வென்றார்.

“நாங்கள் மாநாட்டில் பார்த்தது குடியரசுக் கட்சியின் ஒற்றுமை, உண்மையில் பல ஆண்டுகளில் முதல் முறையாக இதை பார்த்தோம்,” என்று மெக்ரா கூறினார்.

“அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தனர்,” என்று குறிப்பிட்டார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி ஈலோன் மஸ்க், டிரம்பை பகிரங்கமாக ஆதரித்தார். முக்கிய மாகாணங்களில் பெரிய அளவிலான பிரசாரத்திற்கு நிதியுதவி செய்தார்.

குடியரசுக் கட்சியின் செயல்பாடு உயர்ந்தது. டிரம்பின் செல்வாக்கும் உயர்ந்தது. அந்தட்சமயத்தில், 2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி, ‘படுகுழியில்’ இருந்து மீண்டு அமெரிக்க சக்தியின் உச்சத்தை நோக்கிய டிரம்பின் பயணம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே தோன்றியது.

டிசாண்டிஸ் மற்றும் பிற குடியரசுக் கட்சிப் போட்டியாளர்களைத் தோற்கடித்த ஒரு பிரசாரம் இப்போது பைடனையும் ஜனநாயகக் கட்சியினரையும் வீழ்த்துவதில் கவனம் செலுத்தியது.

ஆனால் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, பைடன் மறுதேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மற்றும் அவரது துணை அதிபர் கமலா ஹாரிஸை முன்னிறுத்தி ஆதரித்தார்.

சில வாரங்களில் கமலா ஹாரிஸ் தனது கட்சிக்குள் ஆதரவை உறுதியாக ஒருங்கிணைத்தார். இது ஜனநாயகக் கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும் இது சில நேருக்கு நேர் கருத்துக்கணிப்புகளில் டிரம்பை அவர் முந்தினார்.

டிரம்பின் முயற்சிகள் செப்டம்பரில் ஹாரிஸுடனான விவாதத்தில் பலனளிக்கவில்லை. அவரது பலவீனமான செயல்திறன் வெளிப்பட்டது. மேலும் அவர் முற்றிலும் மாறுபட்ட பலம் மற்றும் பலவீனங்களைக் கொண்ட ஒரு புதிய எதிரியை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. கமலா ஹாரிஸுக்கு எதிரான அவரின் பிரசாரத்தை சரிசெய்வதில் சிரமம் இருந்தது.

“கமலா ஹாரிஸ் பந்தயத்திற்குள் நுழையும் வரை, டிரம்ப் உண்மையில் பெரிய சவாலை எதிர்கொள்ளவில்லை,” என்று பிரையன் செர்ச்சிக் கூறினார்.

“அதற்கு முன்பு செய்த முயற்சிகள் பலனளிக்காமல், மீண்டும் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்பது போல் இருந்தது,” என்றார்.

தேர்தல் நாள் நெருங்குகிறது, பிரசாரங்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன, வெற்றியாளர் யார் என்பதை இன்னும் யூகிக்க முடியவில்லை.

அதிபர் போட்டி, ஆண்டின் துவக்கத்தில் கணிக்கப்பட்டது போல் தற்போது வரை தொடர்கிறது. இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவுகிறது.

முன்னர் பைடனின் வயது மற்றும் பலவீனத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரசாரத்தை டிரம்ப் முன்னெடுத்தார். ஆனால் இப்போது டிரம்பின் சகிப்புத்தன்மை மற்றும் மனத் தெளிவு ஆகியவை ஆய்வுக்கு உட்பட்டுள்ளன.

“டிரம்ப் அவரைச் சுற்றி ஒரு தொழில்முறை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவைக் கொண்டிருக்கலாம். ஆனால் இறுதியாக அவர் விரும்பியதை மட்டுமே செய்கிறார், அதை அவருடைய வழியில் செய்கிறார்,” என்று மெக்ரா கூறினார்.

2020-ஆம் ஆண்டு தேர்தலில் தான் தோற்கவில்லை என்று அவர் தொடர்ந்து பகிரங்கமாக பேசுவதும், பேரணிகளில் பேசும் போது பிரச்னையை திசை திருப்புவதும் இதில் அடங்கும். மேலும் கடைசி நிமிடத்தில் மீடியாக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதற்குக் காரணம் அவரது ‘சோர்வு’ என்று சிலர் கூறுகின்றனர்.

டிரம்ப் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அதிபர் தேர்தல் அரசியலின் சுழலில் இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவெளியில் இருக்கிறார்.

அவர் தற்போது வரை சோர்வடையாத நபராகத் தெரிகிறார். ஆனால் வெள்ளை மாளிகையில் இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அவரின் பயணத்தில் சோர்வு தோன்ற ஆரம்பித்துவிட்டதா?

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, டிரம்பின் முயற்சிகள் செப்டம்பரில் ஹாரிஸுடனான விவாதத்தில் பலனளிக்கவில்லை. அவரது பலவீனமான செயல்திறன் வெளிப்பட்டது.

ஒரு ‘அடிப்படை மாற்றம்’ நடக்குமா?

டிரம்பின் வெற்றிக்கு உத்தரவாதம் அளிப்பது கடினம். ஆனால் அவர் மீண்டும் இந்த அளவுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்க சாதனையாகும். மேலும் அவர் மீண்டும் அதிபர் பதவியை வென்றால் அது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படும். அவர் எதிர்கொண்ட சட்ட, அரசியல் தொடர்பான பலத் தடைகள் இதுவரை வெகு சில அதிபர்கள் மட்டுமே எதிர்கொண்டுள்ளனர்.

அவர் தனது அதிகாரத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றால், மீண்டும் வாக்காளர்களின் முடிவை எதிர்கொள்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. டிரம்ப்பால் அவருக்கு இருக்கும் சட்ட அபாயங்களை மறையச் செய்ய முடியும். முதல் அதிபர் பதிவி வகித்த போது இருந்த சூழல் போன்று இல்லாமல் இம்முறை அவருக்கு முற்றிலும் விசுவாசமான ஆலோசகர்கள் மற்றும் அரசாங்கப் பணியாளர்கள் அடங்கிய குழுவுடன் அவர் வெள்ளை மாளிகைக்குள் நுழைவார்.

கூட்டாட்சி அதிகாரத்துவத்தை தீவிரமாக மறுகட்டமைக்க வேண்டும் என்ற அவரது எண்ணம், தொழில் சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கான இடங்களை அரசியல் ஆதரவாளர்களை கொண்டு நிரப்புவதற்கு வழிவகுக்கும்.

அவர் காங்கிரஸின் முழுமையான கட்டுப்பாட்டைப் பெறத் தவறினாலும் கூட, குடியேற்றத்தின் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க, அமெரிக்க வேலைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், சட்டவிரோதமான முறையில் குடியேற்றங்கள் மற்றும் கட்டணங்களை விதிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அவர் அதிபரின் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடும். இது இறக்குமதி பொருட்களின் விலையை அதிகரிக்கும்.

ஜனநாயகக் கட்சியினர் டிரம்பின் முன்மொழிவுகளை ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர். அதே சமயம் குடியரசுக் கட்சி “தற்போது கட்சியமைப்பு டிரம்பின் பாணியில் மாற்றப்பட்டுள்ளது. அவர் தனது முதல் பதவிக்காலத்தில் எதிர்கொண்ட உள் எதிர்ப்பு இல்லாமல் கொள்கைகளை இன்னும் திறம்பட செயல்படுத்த முடியும்,” என்று நம்புகின்றனர்.

“டொனால்ட் டிரம்ப் கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளாக இருந்த நிதி மற்றும் சமூகப் பிரச்னைகளில் இருந்து விடுவித்து அதனை மாற்றியமைத்துள்ளார்,” என்று பிரையன் செர்ச்சிக் கூறினார்.