[இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப் படுகிறது.]
அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதித் தருணம் நெருங்கிவிட்ட நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இரண்டு அதிபர் வேட்பாளர்களும் ஒரு இறுதி பிரசார நிகழ்வுக்கு தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 5) நடைபெற உள்ளது.
அதே சமயத்தில், அமெரிக்காவின் தேர்தல் ஒருமைப்பாட்டிற்கு ரஷ்யா மிகத் தீவிரமான ஒரு அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு சமூகம் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கை தெரிவிக்கிறது.
மறுபுறம், டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவரது நிர்வாகத்தில் பணியாற்றிய ஜான் போல்டன், “தேர்தலில் தோல்வியுற்றால், அந்த முடிவை ஏற்க டிரம்ப் நிச்சயம் மறுப்பார் என்று நான் நம்புகிறேன்,” என்று பிபிசியிடம் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதிக் கட்டத்தில் என்ன நடக்கிறது என்பதைக் குறித்துப் பார்ப்போம்.
கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகிப்பது யார்?
கமலா ஹாரிஸ் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் பந்தயத்தில் நுழைந்ததில் இருந்து தேசிய கருத்துகணிப்புச் சராசரியில் டிரம்பை விட சிறிய அளவில் முன்னிலை வகிக்கிறார். மேலும் அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இரண்டு வேட்பாளர்களின் சமீபத்திய தேசியக் கருத்துகணிப்புச் சராசரிகள் கீழே காட்டப்பட்டுள்ளன. புள்ளிகள், அருகிலுள்ள முழு எண்ணுக்குத் திருத்தப்பட்டுள்ளன.
கமலா ஹாரிஸின் வெற்றிக்காக சிறப்பு பூஜை
கமலா ஹாரிஸின் வெற்றிக்காக, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் இன்று அதிகாலை (நவம்பர் 5) சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
கமலா ஹாரிஸ் இதுவரை இந்த கிராமத்துக்கு வந்ததில்லை, இந்த கிராமத்தில் அவருக்கு பூர்வீக சொத்துகள் இல்லை, உறவினர்கள் யாரும் வசிக்கவில்லை. எனினும் துளசேந்திரபுரம் கிராமத்து மக்கள் கமலா ஹாரிஸை தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சியின் பிரசாரக் குழுவில் இருந்து வரும் செய்திகள், கமலா ஹாரிஸ் மிகவும் உற்சாகமான ஒரு மனநிலையில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.
துணை அதிபர் கமலா ஹாரிஸின் சிந்தனையை நன்கு அறிந்த சிலர், பிபிசியின் அமெரிக்கச் செய்திக் கூட்டாளியான சி.பி.எஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், “வாக்குப்பதிவுக்கு சில மணிநேரங்களே உள்ள நிலையில், அவர் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறார்,” என்கிறார்கள்.
மேலும், இந்த அதிபர் தேர்தல் போட்டி எவ்வளவு நெருக்கடியானது என்று கமலா ஹாரிஸ் புரிந்து வைத்திருப்பதாகவும், உற்சாகமும் நம்பிக்கையும் இருந்தாலும் கூட தனது வெற்றி வாய்ப்புகளுக்கு வலுவான ஒரு வாக்குப்பதிவு (ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக) முக்கியமானது என்பதையும் அவர் அறிந்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
2024 அதிபர் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரம்
அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரசாரத்திற்காக டிரம்ப் மிச்சிகனில் உள்ள கிராண்ட் ராபிட்ஸுக்கு செல்கிறார். அங்கு, 2024 தேர்தல் பிரசாரத்தின் டிரம்பின் இறுதி உரைக்கு பல மணி நேரங்கள் முன்னதாகவே குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் அதிகளவில் கூடி வருகின்றனர்.
இதற்கிடையில், பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவில் கமலா ஹாரிஸின் இறுதி பேரணி நடந்து வருகிறது. பாடகிகள் கேட்டி பெர்ரி மற்றும் லேடி காகா ஆகியோர் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வருவதற்கு முன்பாக கூட்டத்தை அதே உற்சாகத்துடன் வைத்திருக்க, இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள்.
அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கக்கூடிய (ஸ்விங்) மாநிலங்களில் இந்த பிரசாரத்தை இருவரும் இன்றோடு முடித்துக் கொள்கிறார்கள்.
இறுதிப் பிரசாரத்திற்கு முன் டிரம்ப் கூறியது என்ன?
டிரம்ப், பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் ஒரு பிரசாரத்தை முடித்துவிட்டு, இறுதி பிரசாரப் பேரணிக்காக மிச்சிகனுக்கு செல்கிறார்.
முன்னாள் அதிபர் டிரம்ப், தனது பேரணியில் கூடிய மக்களின் கூட்டத்தை, பிட்ஸ்பேர்க்கில் பிரசாரம் செய்து கொண்டிருந்த கமலா ஹாரிஸின் பேரணியுடன் ஒப்பிட்டுப் பேசி தனது உரையைத் தொடங்கினார். தான் வெற்றி பெற்றால் ‘உலகம் இதுவரை கண்டிராத மிக அசாதாரணமான பொருளாதார ஏற்றத்தைத் முன்னெடுப்பேன்’ என டிரம்ப் உறுதியளித்தார்.
“நீங்கள் கமலாவுக்கு வாக்களித்தால், உங்களுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் துன்பம், தோல்வி மற்றும் பேரழிவு ஏற்படும். நம் நாடு ஒருபோதும் அதிலிருந்து மீளாது,” என்று அவர் எச்சரித்தார்.
“இன்றிரவு அமெரிக்கர்களுக்கு எனது செய்தி எளிமையானது. நாம் இப்படி வாழ வேண்டியதில்லை. வாழப் போவதில்லை, வாழவும் மாட்டோம். கமலா ஹாரிஸ் ஒரு பேரழிவு,” என்று அவர் கூறினார்.
“நாளை உங்கள் வாக்களிப்பின் மூலம் நம் நாடு எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னையையும் சரிசெய்து, அமெரிக்காவையும், ஏன் முழு உலகையும் கூட புகழின் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்ல முடியும்,” என்று டிரம்ப் கூறினார்.
முன்னதாக திங்களன்று (நவம்பர் 4), கவுண்டியில் நிர்வாக பிழை காரணமாக தபால் வாக்குகளை தாமதமாக பெற்ற சுமார் 3,000 வாக்காளர்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு ஜார்ஜியாவின் உச்ச நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது.
ஜார்ஜியா நீதிமன்றத் தீர்ப்பைப் பாராட்டிய டிரம்ப், தற்போதைய அமெரிக்க அரசாங்கம் வாக்குப்பதிவில் தலையிட முயன்றது என்று சான்றுகள் இல்லாமல் மறைமுகமாகக் கூறினார்.
ஏழு முக்கியமான ஸ்விங் மாநிலங்களில் ஜார்ஜியாவும் ஒன்றாகும். 2020-ஆம் ஆண்டில் இந்த மாநிலத்தில் பைடன் 12,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
‘அமெரிக்க தேர்தலுக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல்’
அமெரிக்கப் புலனாய்வுச் சமூகம் (The US intelligence community) திங்களன்று வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் “அமெரிக்காவின் தேர்தல் ஒருமைப்பாட்டிற்கு ரஷ்யா மிகத் தீவிரமான ஒரு அச்சுறுத்தல்,” என்று விவரித்துள்ளது.
இது தேசியப் புலனாய்வு இயக்குநர் அலுவலகம் (ODNI), ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ – FBI) மற்றும் சைபர் செக்யூரிட்டி மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் (CISA) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை.
“குறிப்பாக ரஷ்யாவுடன் தொடர்புடையவர்கள், தேர்தலின் சட்டபூர்வமான தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், தேர்தல் செயல்முறை குறித்து வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கும், அரசியல் வேறுபாடுகள் காரணமாக அமெரிக்கர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என பரப்புவதற்கும், வீடியோக்கள் மற்றும் போலி கட்டுரைகளை உருவாக்குவதாக,” புலனாய்வு சமூகம் கூறுகிறது.
முன்கூட்டியே வாக்களித்த 8.1 கோடி அமெரிக்கர்கள்
அமெரிக்காவின் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைபடி (Early voting) பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 8.1 கோடியைத் தாண்டியுள்ளது என்று புளோரிடா பல்கலைக்கழக தேர்தல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இது மொத்த முன்கூட்டியே வாக்களிக்கும் முறைபடி (Early voting) பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை 81,379,684 என்று கூறுகிறது.
இதில், 44,402,375 பேர் (4.4 கோடி பேர்) நேரில் வாக்களித்துள்ளனர். 36,977,311 தபால் வாக்குகள் திருப்பி அனுப்பப்பட்டன
கடந்த அதிபர் தேர்தலில் (2020), கொரோனா பெருந்தொற்று பலரை நெரிசலான வாக்குச் சாவடிகளிலிருந்து விலக்கி வைத்தபோது, இந்த ஆண்டின் முன்கூட்டியே பதிவான வாக்குகள் என்பது 2020-இல் பதிவான 10.15 கோடி வாக்குகளை விட மிகவும் குறைவு. இருப்பினும், 2016 (4.72 கோடி) அல்லது 2012ஆம் ஆண்டில் (4.62 கோடி) முன்கூட்டியே பதிவான வாக்குகளை (Early voting) விட அதிகமாகும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.