by wp_fhdn

வைத்தியர் அருச்சுனா சமூகத்திற்கு ஏற்றவர் இல்லை. மக்கள் நன்றாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என வைத்தியர் அருச்சுனாவின் சக வேட்பாளரான த. கிருஸ்ணா தெரிவித்துள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

வைத்தியர் அருச்சுனாவுடன் ஓரிரு தடவைகள் தான் கதைத்துள்ளேன். தேர்தல் பிரச்சாரத்திற்காக கிளிநொச்சிக்கு வர சொல்லி கேட்க பல தடவைகள் தொலைபேசியில் அழைப்பெடுத்தும் என் அழைப்பை ஏற்கவில்லை எமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு எந்த ஏற்பாடுகளையும் இந்த தலைமை வேட்பாளர் செய்து தரவில்லை.  த கிருஸ்ணா ஆகிய எனக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்கின்றார். 

சமூக வலைத்தளங்களில் எம்மை பற்றி தவறாக பேசி அவமானப்படுத்தி வருகின்றனர். வைத்தியருடன் இணைந்தே அதனை செய்துள்ளனர். இது தொடர்பில் சைபர் க்ரைம் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்வேன். 

தவறுகள் செய்தால் அதனை சுட்டிக்காட்டுவேன். மக்களுக்கு சிந்திக்கும் திறன் உண்டு. மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள்.  வைத்தியர் அருச்சுனா என்னோடு நேரடி விவாதத்திற்கு வர வேண்டும் என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடுவேன். முடிந்தால் அவர் நான் மோசடி காரன் என ஆதாரங்களுடன் நிரூபிக்கட்டும். 

வைத்தியர் அருச்சுனாவை நம்பி தான் வந்தேன். ஆனால் தற்போது அவர் சமூகத்திற்கு ஏற்றவர் அல்ல என்பதை தற்போது உணர்ந்து கொண்டுள்ளேன். தற்போது அவரை நம்பி வந்த எல்லோரையும் நோக்கி கை நீட்டியுள்ளார். ஆதாரங்களுடன் பல விடயங்களை வெளிப்படுத்துவேன். 

வெளிநாடுகளில் இருந்து என்னுடைய அன்பர்கள் நண்பர்கள் அனுப்பிய பணம் சுமார் ஒன்றரை இலட்ச ரூபாய்க்கள் மட்டுமே. மற்றது கிளிநொச்சியில் அலுவலகம் திறக்க சக வேட்பாளர் 60 ஆயிரம் ரூபாய் பணத்தினை தந்து உதவினார். இது தவிர வேறு எந்த நிதியினையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. மற்றவர்களுக்கு நிதி வந்தது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. 

தேர்தலுக்கு பின்னர் வைத்தியர் அருச்சுனாவுடன் சேர்ந்து பயணிக்க மாட்டேன். அருச்சுனா சரியானவர்  என நினைப்பவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் தேர்தலுக்கு இடையில் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்